Saturday, February 19, 2022

ஓட்டும் போட சென்னை மக்களுக்கு ஆர்வம் போச்சோ?...

 நேற்று நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநிலத்திலேயே சென்னையில் தான் மிக குறைந்த அளவில் 45.58 சதவீத ஓட்டுகள் பதிவாகி உள்ளன. அரசியல்வாதிகள் மீது

நம்பிக்கை இல்லையா அல்லது யாருக்கு ஓட்டு போட்டு என்ன பிரயோஜனம் என்றவிரக்தியா என்பது தெரியவில்லை; சென்னை மக்கள் ஆர்வமில்லாமல் மிகக் குறைவாகஓட்டளித்திருக்கின்றனரோ என எண்ணத் தோன்றுகிறது.

தமிழகத்தில், 21 மாநகராட்சிகளில் உள்ள 1,373 வார்டுகள்; 138 நகராட்சிகளில் உள்ள 3,842 வார்டுகள்; 489 பேரூராட்சிகளில் உள்ள 7,605 வார்டுகளுக்கு நேற்று ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது.இதற்காக, மாநிலம் முழுதும் 30 ஆயிரத்து 735 ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்பட்டு இருந்தன.



குளறுபடி



திட்டமிட்டபடி நேற்று காலை 7:00 மணிக்கு ஓட்டுப்பதிவு துவங்கியது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் ஏற்பட்ட குளறுபடி காரணமாக, சில இடங்களில் ஓட்டுப்பதிவு பாதிக்கப்பட்டது. பின், அது சரி செய்யப்பட்டது. வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள், மாநில தேர்தல் கமிஷனால் அனுமதிக்கப்பட்ட, 11 அடையாள ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து ஓட்டளித்தனர்.

இத்தேர்தலில், 57 ஆயிரத்து 746 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதிகபட்சமாக, சென்னை மாநகராட்சியின் 190வது வார்டு மற்றும் 192வது வார்டில் தலா, 24 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இது மட்டுமின்றி, 1,714 வார்டுகளில் தலா, இரண்டு வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டு உள்ளனர். இதேபோல, 34 வார்டுகளில், 16 வேட்பாளர்களுக்கு மேல் போட்டியிட்டுள்ளனர்.
ஓட்டுச்சாவடி பணியில், 1.32 லட்சம் அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் ஈடுபட்டனர். இத்தேர்தலில், 1.38 கோடி ஆண்கள், 1.44 கோடி பெண்கள், 4,702 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 2.83 கோடி பேர் ஓட்டளிக்க தகுதியுள்ளவர்களாக அறிவிக்கப்பட்டனர்.மாநிலம் முழுதும் 5,920 ஓட்டுச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவை என, மாவட்ட கலெக்டர்கள் மற்றும் எஸ்.பி.,க்கள் அறிக்கை அளித்திருந்தனர்.உயர் நீதிமன்ற உத்தரவுப்படி, 25 ஆயிரத்து 735 ஓட்டுச்சாவடிகளில், 'சிசிடிவி கேமரா' பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டது.


'வெப் கேமரா'



இதேபோல, 5,000 பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 'வெப் கேமரா' பொருத்தப்பட்டு, இணைய வழியில் ஓட்டுப்பதிவு கண்காணிக்கப் பட்டது. தேர்தலை அமைதியாக நடத்தி முடிக்க, 41 தேர்தல் பார்வையாளர்கள், 697 வட்டார பார்வையாளர்கள், 1,892 நுண் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு இருந்தனர். பாதுகாப்பு பணியில், 97 ஆயிரத்து 882 போலீசார்; 2,870 முன்னாள் ராணுவத்தினர்; 12 ஆயிரத்து 321 ஊர்க்காவல் படையினர் என, 1.13 லட்சம் பேர் ஈடுபட்டனர்.
அரியலுார், கடலுார், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், பெரம்பலுார், புதுக்கோட்டை, சேலம், தென்காசி, தேனி, திருச்சி, திருவண்ணாமலை, திருவாரூர், விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது. சென்னை, வேலுார், திருப்பூர், ராணிப்பேட்டை, ராமநாதபுரம், மதுரை, மயிலாடு துறை உள்ளிட்ட மாவட்டங்களில், ஓட்டுப்பதிவு மந்தமாகவே இருந்தது. பிற்பகலுக்கு பின், சில மாவட்டங்களில் ஓட்டுப்பதிவு விறுவிறுப்பாக நடந்தது.


60.70 சதவீதம்



மாநிலம் முழுதும் காலை 9:00 மணிக்கு 8.21 சதவீதம்; பகல் 11:00 மணிக்கு 21.69; மதியம் 1:00 மணிக்கு 35.34; பிற்பகல் 3:00 மணிக்கு 47.18 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.மாலை 5:00 மணிக்கு பின், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் ஓட்டளிக்க அனுமதிக்கப்பட்டனர்.மாநிலம் முழுதும் 60.70 சதவீதம் ஓட்டுகள் பதிவானதாக தேர்தல் கமிஷன் நேற்று இரவு அறிவித்தது.சென்னையில் காலை முதலே ஓட்டுப்பதிவு மந்தமாக இருந்தது. நேற்று மாலை 6:00 மணி நிலவரப்படி 45.58 சதவீத ஓட்டுகள் பதிவாகின.ஓட்டு போட சென்னை மக்களுக்கு ஆர்வம் குறைந்துள்ளதோ என எண்ணும் வகையில், மாநிலத்திலேயே குறைந்த அளவு ஓட்டுகள், சென்னையில் பதிவாகியுள்ளன. அரசியல்வாதிகள் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லையோ என்ற கேள்வி எழுந்துள்ளது. மாநிலம் முழுதும் நேற்று பதிவான ஓட்டுகள், 268 மையங்களில் வரும் 22ல் எண்ணப்படுகிறது.


மூன்றடுக்கு பாதுகாப்பு



இதற்காக, உயர் நீதிமன்றம் உத்தரவுப்படி, 'சிசிடிவி கேமரா' பொருத்தப்பட்ட பாதுகாப்பான அறைகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டு, 'சீல்' வைக்கும் பணிகள் நள்ளிரவு வரை நடந்தன. இம்மையங்களில் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு
உள்ளது. கடந்த 2011ம் ஆண்டு நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், மாநிலம் முழுதும், 72.50 சதவீதம் ஓட்டுகள் பதிவாகின.ஆனால், ஆறு ஆண்டுகளுக்கு பின் தேர்தல் நடந்த நிலையில், நேற்று ஓட்டுப்பதிவு சதவீதம் வெகுவாக குறைந்துள்ளது.


தேர்தலுக்கு தேர்தல் ஓட்டுப்பதிவு குறைவது ஏன்?



சென்னை மாநகராட்சி தேர்தலில், ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்தது, அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.லோக்சபா, சட்டசபை, உள்ளாட்சி என எந்த தேர்தலாக இருந்தாலும், மற்ற மாவட்டங்களை விட, சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவாகவே இருக்கும். கடந்த சட்டசபை தேர்தலின்போது, சென்னை மக்கள் ஓரளவு ஆர்வமுடன் ஓட்டளித்தனர். நேற்று நடந்த உள்ளாட்சி தேர்தலில், காலை முதலே பெரும்பாலான ஓட்டுச்சாவடிகளில் கூட்டம் குறைவாகவே இருந்தது. காலையில் துவங்கிய மந்தம் மாலை வரை நீடித்தது. மாலை 6:00 மணி நிலவரப்படி, 45.58 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகின.

சென்னையில் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்ததால், யாருக்கு லாபம் என அரசியல் கட்சியினர் இடையே விவாதம் எழுந்துள்ளது. ஓட்டுப்பதிவு சதவீதம் குறைவுக்கு, நேரடியாக மேயர் தேர்தல் இல்லாதது முக்கிய காரணமாக கூறப்படுகிறது.இரண்டு நாட்கள் விடுமுறை என்பதால், வெளியூர் மக்கள் அதிகம் பேர், சொந்த ஊர் சென்று விட்டனர்.வழக்கமாக ஓட்டளிக்க ஆர்வம் காட்டும் குடிசைப்பகுதி மக்களும், இம்முறை ஆர்வம் காட்டவில்லை. வார்டு மறுவரையறையில் ஏற்பட்ட குழப்பமும் ஓட்டுப்பதிவு சதவீதம் குறைய காரணம் என கூறப்படுகிறது. சென்னை மாநகராட்சியில், 2006 தேர்தலில் 55 சதவீதம்; 2011 தேர்தலில், 52.67 சதவீத ஓட்டுகள் பதிவாகின..

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...