Monday, February 14, 2022

பாலுமகேந்திரா.

 •இன்னும் நமது தமிழ் சினிமாக்கள் தொடாத விஷயமாக எதை பார்க்கிறீர்கள்?

புதிதாய் திருமணமானவர்களின் முதல் சில மாத கால வாழ்க்கையை இன்னும் யாரும் திரைப்படமாக்கவில்லை.. முதல் மூன்று மாதம் அவர்களுக்குள் நிகழும் உடல் மற்றும் மனமாற்றம் மிகவும் அழகானது. கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவே பத்து வருடங்கள் ஆகிவிடும். ஆனாலும் ஆரம்ப கால காதல் தான் அவர்களிடம் எப்போதும் உயிர்ப்பாக இருக்கும். பெண்களிடம் நான் ஆச்சர்யபடுகிற ஒரு விஷயம் உண்டு. ‘எப்படி முன் பின் அறிமுகமாகாத ஆணிடம் ஒரு இரவில் உங்களை நிராயுதபாணியாக தந்து விட முடிகிறது?’ பதில் தெரியாத இந்த ஆச்சர்யத்தை சமீபத்தில் ஒரு கல்லூரிக்கு சென்றிருந்தபோது அங்குள்ள பெண்களை பார்த்துக் கூட கேட்டேன். எப்படி இது சாத்தியமாகிறது என்பது எனக்கு புரியவே இல்லை. மற்ற எல்லா உயிரினத்திலும் தன்னுடைய இணையைத் தேர்ந்தெடுப்பது பெண் தான். மனிதர்களில் தான் ஆண் பெண்ணைப் பார்க்க வருகிறான். உனக்கு இவன் ஏற்றவன் தானா என பெண்ணிடம் யாரும் இங்கு கேட்பது கூட இல்லை.
• சினிமாவுக்கு வந்த போது இருந்த மனநிலையை ஒப்பிடும்போது, நீங்கள் நினைத்த இடத்தை அடைந்து விடீர்களா?
என்னை நானே இன்னும் தேடிக் கொண்டிருக்கிறேன். நான் யார் என்று எனக்கு தெரிவதெல்லாம் மங்கலாகவே இருக்கிறது. அது போதாது. தெளிவாக தெரிய வேண்டும். இன்னும் என்னிடமிருந்து மிகச் சிறந்த படங்கள் வர வேண்டும். கோடம்பாக்க சந்தையின் வெளியே நின்று ‘வீடு’’, சந்தியா ராகம்’ என இரண்டு படங்களைத் தர முடிந்தது. அதே போல நான்கு திரைக்கதைகள் என்னிடம் இருக்கின்றன. எனது மூச்சு ஓய்வதற்குள் அதையும் படமாக எடுத்து விடுவேன்.
• நல்ல படம் என்பது என்ன?
மக்களிடமிருந்து எடுக்கப்படும், மக்களை பற்றிய, ஊடக ஆளுமையுள்ள படைப்பாளியாய் சமரசம் ஏதுமின்றி, ரத்தமும், சதையுமாய் சொல்லப்படுகிற படங்கள் நல்ல படங்கள். இரண்டு கூட்டல் இரண்டு நான்காக இருக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. ஆனால் அதற்கு முயற்சியாவது செய்யலாமே.. உங்களுக்குள்ளேயே இருக்கிறது கதை. இதில் ஆச்சரியம் என்னவென்றால் உங்களுடைய சொந்தம் என நீங்கள் நினைக்கிற அனுபவம் பலருக்கும் சொந்தமாக இருக்கும். ‘அழியாத கோலங்கள்’ படம் என்னுடைய பால்ய கால அனுபவம். பிறகு நிறைய பேர் சொன்னார்கள் எங்களுக்கும் இந்த அனுபவம் இருக்கிறது என்று. இப்படிப்பட்ட பொது அனுபவத்தை தருகிற படங்களைத் தான் உலக படங்கள் என கொண்டாடுகிறோம். உலகளாவிய தன்மை நமக்குள்ளும் இருக்கிறது.
நாம் வியக்கும் உலக சினிமாக்களை தந்த நாடுகளின் வெகுஜன திரைப்படங்களை நாம் பார்த்ததில்லை. அது குப்பையாக கூட இருக்கலாம். உலக சினிமாக்களில் வெகு ஜன சினிமாவை எல்லோர் பார்வைக்கும் வைப்பது ஹாலிவுட் மட்டும் தான். எனது பள்ளி நாட்களில் நான் என்னை மறந்து பார்த்த பாசமலர் படத்தை இப்போது பார்க்கும்போது, ரேடியோவில் நாடகம் போல் தன் இருக்கிறது. ஆனாலும் ‘மலர்களை போல்’ பாடல் எங்கு கேட்டாலும் நின்று கேட்டு விட்டு தான் போகிறேன். எத்தனை வருடங்கள் ஆனாலும் அந்த படங்களை பற்றி நெகிழ்ச்சியுடன் பேசிக் கொண்டு தான் இருப்போம்.
• உங்களது படங்களில் அதிகமும் ஆண், பெண் உறவுகளையே சொல்லியிருக்கிறீர்கள். ..
‘என்னை நானாக்கிய எல்லா பெண்களுக்கும் சமர்ப்பணம்’ என்று ‘மறுபடியும்’’ படத்தில் டைட்டில் போட்டிருக்கிறேன். உண்மை அது தான். என்னுடைய வாழ்க்கை திறந்த புத்தகம். அதற்காக நான் மார் தட்டி கொள்ளவில்லை.
என்னுடைய வாழ்க்கையில் பெண்கள் அதிகமாய் நன்மை, தீமைகளை செய்திருக்கிறார்கள். அவர்களை மரியாதையுடனும் மதிப்புடனும் நினைத்துக் கொள்கிறேன்.
ஒரே கதையை கொண்ட மூன்று படங்களை எடுத்திருக்கிறேன் . ஆனால் ஒவ்வொன்றும் வெவ்வேறு கோணம், வெவ்வேறு பார்வை. கட்டிய மனைவியை விட்டு வேறொரு பெண்ணுடன் பழகுவது என்பது சமூகத்தில் நடப்பது தான். சிலர் தைரியமாக செய்கிறார்கள். சிலர் ரகசியம் காக்கிறார்கள். இது போன்றதொரு பிரச்னையை ஒருவன் எப்படி கையாள முடியும் என்பது தான் ‘ரெட்டை வால் குருவி’.
13 வருஷம் என்னோட குடும்பம் நடத்திட்டு, நான் குண்டா இருக்கேன்னு இன்னொரு அழகான பெண்ணைத் தேடிப் போவியா..உன்னை விட மாட்டேன் என்று போர்க்குணம் கொண்ட பெண்ணை பிடித்திருந்தது..அது ‘சதிலீலாவதி’’ படமானது..
இப்படிப்பட்ட கணவர்களிடம் மனைவிகள் கேட்க நினைக்கிற கேள்வி, ஒரு ‘ஆண் போவது போல் பெண்ணும் வேறொரு ஆணை நாடினால் ஒத்துக் கொள்வீர்களா?’. இதை ‘மறுபடியும்’ துளசி மூலம் கேட்க வைத்தேன். ஒரு ஆணால் ஏற்படும் காயத்திற்கு ஆணே மருந்தல்ல என்பதை இந்த படத்தில் சொல்லியிருக்கிறேன்.
• உங்களுடைய இயக்கத்தில் பெருமைப்படக்கூடிய படமாக நீங்கள் நினைப்பது. ...
இனி தான் நான் பெருமைப்படக்கூடிய படம் எடுக்க வேண்டும் என்று புளித்துப்போன பதிலை சொல்லமாட்டேன். நான் இயக்கியதில் எனக்கு மிகவும் திருப்தியளித்த படங்கள் ‘வீடு’, சந்தியா ராகம்’ மற்றும் தொலைக்காட்சிக்காக நான் எடுத்த ‘கதை நேரங்கள்’.
• சினிமாவுக்கான பயிற்சி பட்டறை தொடங்க வேண்டும் என்ற உந்துதல் எப்போது ஏற்பட்டது? இங்கிருந்து கற்றுக்கொள்ளும் மாணவர்கள் உங்களது அனுபவம் என்பதையும் தாண்டி என்னக் கற்று கொள்கிறார்கள்.?
1997 ல் எனக்கு மாரடைப்பு வந்தது. 2004 ல் storkeஸ்ட்ரோக் வந்தது. அதற்கு முந்தைய நொடி வரை நான் ஆரோக்கியமானவனாகவே என்னை நினைத்திருந்தேன். மரணத்தை ஒரு நொடியில் நெருங்கி வந்து விட்ட நேரங்கள் அவை. எனக்கு பிரபஞ்ச சக்தி கொடுத்துள்ள திறமையை என் கூடவே எரிக்கவும், புதைக்கவும் கூடாது என்று தோன்றியது. மற்றவர்களுக்கு அதை பகிர வேண்டும் என நினைத்தேன்.
இரண்டாவது, சினிமாவை நேசிக்கிற இளைஞர்களோடு இருக்க வேண்டும் என்ற எண்ணமும் ஒரு காரணம். மூன்றாவது, நான் யாரிடமும் ஒரு வேளை உணவுக்கு நின்று விடக் கூடாது என்கிற சுய மரியாதையும் இருக்கிறது.
உலகிலேயே தமிழ் வழி கல்வி மூலம் கற்று தரப்படுகிற முதல் சினிமா பட்டறை இது தான். இந்த கட்டடம் ‘வீடு’ திரைப்படத்திற்காக கட்டப்பட்டது. கடைசியில் என்னுடைய சினிமா பட்டறைக்காக இந்த இடம் விதிக்கபட்டிருந்தது.. இந்த பயிற்சி பட்டறைக்காக வங்கியில் கடன் வாங்கி இருக்கிறேன். அந்த கடனை அடைக்கும் வரை இங்கு கற்று கொள்ள வருபவர்களிடம் கட்டணம் வாங்குவேன். அதன் பின் சினிமாவில் ஆர்வம உள்ள எவரும் இங்கு வரலாம்.
என்னுடைய அனுபவங்கள் தாண்டி இவர்களுக்கு கற்று தருவதற்கு நான் அதிகம் யோசிக்க வேண்டி இருக்கிறது. சொல்ல போனால் இவர்களிடமிருந்து நான் தான் கற்று கொள்கிறேன். ஒவ்வொரு முறையும் இவர்களிடம் கலந்து பேசுவதற்கு என்னை நானே புதுப்பித்து கொள்கிறேன்.
ஹை ஸ்பீட் பிலிம் பற்றி ஒரு உதாரணம் சொல்ல வேண்டும் என்றால் எத்தனையோ சொல்லலாம். ஆனால் இப்போது உள்ள மாணவர்கள் மனதில் பதிய வேண்டும் என்று யோசித்து ஒரு உதாரணம் சொல்கிறேன். ‘உசிலம்பட்டி பெண்குட்டி’ பாட்டில் ஒரு வரி வரும் ‘ஓரக் கண்ணால் பாத்தா போதும் நான் புள்ளத்தாச்சி’’ இந்த அளவு வேகமாய் இருப்பது தான் ஹை ஸ்பீட் பிலிம் என்கிறேன்.
இங்கிருந்து கற்றுக் கொண்டு கோடம்பாக்கத்திற்கு தான் செல்ல வேண்டும். அவர்களிடம் நான் அடிக்கடி சொல்வது, ‘உங்களுடைய படம் என்பது உங்களின் நோக்கம் தான்’. அதனால் தான் என் மாணவர்களிடம் எப்போதும் சொல்கிறேன், கோடம்பாக்கத்தில் பல அற்புதங்களை செய்ய முடியும்.
• ஒரு திரைக்கதையில் ஒளிப்பதிவாளரின் பங்கு எப்படி இருக்க வேண்டும்?
எல்லாமே திரைக்கதையை சுற்றி தான் இருக்க வேண்டும். யாராவது என்னுடைய ஒரு ஷாட்டுக்கு மட்டும் கை தட்டினால் அந்த ஒரு ஷாட்டை தூக்கி போடவும் தயங்கமாட்டேன். ஒட்டு மொத்த படத்தில் ஒரு இடத்தில் மட்டும் கை தட்டும்படி இருக்க கூடாது.
ஒருநாள் மெரீனா கடற்கரைக்கு சென்றிருந்தேன். சூரிய உதயமாகும் நேரம். நிறைய பேர் நடக்கிறார்கள், உடற்பயிற்சி செய்கிறார்கள். சூரியன் ஒவ்வொரு நொடியும் வானத்தில் வர்ணங்களை தீட்டிக்கொண்டே இருக்கிறான். என்ன அற்புதமான காட்சி! நான் சுற்றிலும் பார்த்தேன் யாருமே கை தட்டவில்லை. அதை ஒளிப்பதிவு செய்து காட்டும்போது கைதட்டுகிறார்கள். அந்த அற்புதத்தின் முன்பு மண்டியிட்டு தொழ நினைக்கிறேன். பிரபஞ்ச சக்தியின் அற்புதத்தை நான் படம்பிடிக்கிறேன். அவ்வளவு தான். அதை உருவாக்கியவன் தான் பெரிய மாஸ்டர்!
அதே போல் என்னிடம் பலர் கேட்கும் கேள்வி, நாங்களும் ஊட்டியை படமெடுக்கிறோம். ஆனால் நீங்கள் காட்டும் ஊட்டி மட்டும் எப்படி இவ்வளவு அழகாக இருக்கிறது..? அவர்களுக்கு நான் சொல்லும் பதில் இது தான். நான் சென்ற அதே நேரத்தில், அதே இடத்தில் நின்று பார்த்தால் நான் பார்த்த ஊட்டியின் அழகை பார்க்கலாம். ஆனால் அந்த நேரங்களில் நான் நினைப்பது ஒன்று இருக்கிறது. என் கண் முன்னால் இருக்கும் அற்புதத்தை நான் உருவாக்கவில்லை. அதை அப்படியே பதிவு செய்கிற பாக்கியம் மட்டுமே கிடைத்திருக்கிறது. மற்றவர்கள் அப்படியே ஜெராக்ஸ் காப்பி எடுக்கிறார்கள். நான் பயத்துடனும், பக்தியுடனும் அணுகுகிறேன் அவ்வளவு தான்.
• உங்களிடம் சேர விரும்பும் உதவியாளர்களுக்கு முதல் தகுதியாக நீங்கள் நினைப்பது இலக்கிய பரிச்சயம். என்ன காரணம்?
உதவியாளர்கள் மட்டுமல்ல மாணவர்களிடமும், கடைசியாக எந்த சிறுகதை படித்தீர்கள் என்று தான் கேட்கிறேன். என்னுடைய படங்களில் கொஞ்சமாவது நல்ல விஷயங்கள் இருந்தால் அது எனக்கும் இலக்கியத்திற்குமான அறிமுகத்தினால் வந்தது மட்டுமே.
May be an image of 1 person and standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...