Friday, February 25, 2022

ஆண்களும் அவசியம் படிக்க வேண்டிய-- பெண்கள் ஸ்பெஷல் கதை...

 #வலி..

அக்டோபர் திங்கள் இறுதியில் ஒரு நாள்...
அலறிய அலாரத்தை
ஆஃப் செய்ய கூட அலுப்பாக இருந்தது
அலமேலுவுக்கு... வேண்டா வெறுப்பாக அணைத்து விட்டு சில நிமிடங்கள் அப்படியே படுத்து இருந்தாள்...
அடி வயிற்றில் ஊசியால் குத்தியது போல் 'சுருக்' என்ற ஒரு வலி கிளம்பி உடலெங்கும் பரவ,
வலிக்கு ஒரு கணம் பல்லை கடித்து கண்களை மூடினாள்..
"கடவுளே.. பெண்களுக்கு மட்டும் ஏன் இந்த அவஸ்தை?"
கோபம் வந்தது...
வேறு வழியில்லை.எழுந்தாக வேண்டும்... சந்தோஷின் காலேஜ் பஸ் வருவதற்குள் டிபன், கொண்டு போக சாப்பாடு செய்தாக வேண்டும்... ஒவ்வொரு மாதமும் பீரியடின் போது வலி வந்ததில்லை... அவ்வப்போது வரும்.. சில மாதங்கள் இருக்காது.. இப்போது கடந்த 1 வருடமாகத் தான் சரியான தினங்களில் ஆவதில்லை.. இடையிடையே கூட வயிற்று வலி...இரண்டு மாதம் கூட தள்ளிப் போய்...
எதிலும் ஒரு நாட்டம் இல்லாமல்...
அசை போட்ட எண்ணங்களை ஒதுக்கித் தள்ளி படுக்கையை விட்டு எழுந்தாள்....
அவசரம் அவசரமாக
முகம் கழுவி காலைக் கடனை முடித்து அடுக்களை போனாள்.. சாப்பாட்டிற்கு அரிசியை போட்டு
அடுப்பை பற்ற வைத்து
விட்டு,வீட்டை கூட்ட
துடைப்பம் எடுத்து
குனிய,வலி மீண்டும்
புதிதாய் பிறந்தது...
"பெண் பிள்ளை இருந்து இருந்தா கூட கூட மாட ஒத்தாசையாவது இருந்து இருக்கும்..
ஒத்த பையன்..அவனை வச்சி என்ன பண்றது?"
என்ற எண்ணம் தோன்ற, "பொண்ணா பொறந்து நான் படற கஷ்டம் போதாதா? எனக்கு ஒரு பொண்ணு பொறந்து அது வேற கஷ்டப்படணுமா?" என்று தன் எண்ணத்திற்கு தானே பதிலும் சொல்லிக் கொண்டாள்...
வலியை பொறுத்துக் கொண்டு அடுத்த வேலை தொடர சமையலறை நுழைந்தாள்..."20 நாள் மார்க்கெட்டிங் டூர் போன கணவர் இருந்தால் கூட கொஞ்சம் ஒத்தாசையாக இருக்குமே!" என்று ஒரு கணம் எண்ணம் தோன்றி மறைந்தது...
"சரி... சாயந்திரம் வந்த பின்னர் பேசிக் கொள்ளலாம்" என்று முடிவு செய்து கொண்டாள்...
சந்தோஷூக்கு டிபனுக்கு சாப்பிட இட்லி ஊற்றினாள்...
டைனிங் டேபிளில்
அமர்ந்த சந்தோஷ்
"இன்னிக்கும் இட்லியா?" என்ற கேள்விக்கு, அவளையும் மீறி,
" போடறதை சாப்பிட்டுட்டு காலேஜ் போக முடியாதா?"என்று பதிலளித்தாள்...
அவன் மேற்கொண்டு இட்லி வைத்துக் கொள்ளாமல் கை கழுவி கிளம்ப அலமேலுவின் கோபம் அதிகரித்தது...
"ஏன்,அம்மா நான் எதுவும் சொல்லக் கூடாதா?.."
பேக்கை எடுத்து தோளில் போட்டுக் கொண்டு ஷூ மாட்டியவாறே,காலை பார்த்து கொண்டு
"பை.வர்றேம்மா"
என்று சந்தோஷ் சொன்னது சொல்ல வேண்டுமே என்பதற்காக சொன்னது போல் பட்டது...
இரண்டு மணி நேர ஓய்வில்லாத தொடர் வேலை... வலியுடன்...
ஆசுவாசப்படுத்திக் கொள்ள ஹால் சோஃபா வில் அமர்ந்து
ஃபேன் போட்டு....
"அலமேலு... ஒரு டம்ளர் வெந்நீர் வச்சிக் கொடும்மா..குடிக்கறதுக்கு"
மாமியார் ... எழுபதுகளின் மத்தியில் வயோதிகத்தின் வாசத்தில்...
"கொஞ்சம் பொறுங்க..வச்சித் தர்றேன்"
ஃபேன் காற்று சற்றே சில்லென்று பட கொஞ்சம் இதமாய் இருந்தது...
லேசாக கண்களை மூடினாள்...வலி கொஞ்சம் குறைந்திருந்தது...
சமையலறையில் இருந்து பாத்திரம்
கீழே விழும் சத்தம் கேட்டு அவசரமாக ஓடினாள்... மாமியார் வெளிறிய முகத்துடன் நின்று கொண்டு இருக்க,ஸ்டவ் எரிந்து கொண்டிருக்க, தண்ணீர் சூடு செய்யும் பாத்திரம் கீழே விழுந்து கிடக்க,தரை எங்கும் தண்ணீர் ஏகமாக பரவி இருக்க,
நடந்ததை உணர்ந்தாள்...
"நான் தான் வச்சித் தர்றேன்னு சொன்னேனே?"
"விக்கல் நிக்கலை அலமேலு..பனிக்கு லேசா மூச்சு விட சிரமமா இருந்தது..நீ கண்ணை மூடிட்டு இருந்தியா, ஒரு டம்ளர் தண்ணிதானே...வச்சிக்கலாம்னு..."
மாமியார் சொல்லிக் கொண்டு இருக்க இருக்க "தரையெல்லாம் தொடைக்கணுமே" என்ற எண்ணமே
மனதை ஆக்ரமிக்க,
பேசாமல் வெந்நீர் வைத்து கொடுத்து விட்டு,துணி எடுத்துக் கொண்டு தரையில் குனிந்தவள் வயிற்றில்
வலி சுரீர் என்றது...
.... .... ..... .....
கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு மொபைலில் நேரம் பார்த்தாள் அலமேலு..
11 ஐ காட்டியது...
"நான் நேரா ஆஃபிஸ் வந்துட்டேன் அலமேலு.
எம்டி கூட மீட்டிங்.. நான் முடிச்சிட்டு வர 11 ஆயிடும்.நீ பூட்டிட்டு தூங்கு." சொன்னது ஞாபகத்துக்கு வந்தது..
பெட்ரூம் கதவு திறந்து
உள்ளே வந்து லுங்கியை கட்டிக்கொண்டு அருகே படுத்த கணவனிடம்
"ஏங்க...சாப்டீங்களா?"
"ம்..சாப்பிட்டேன்.நீ இன்னும் தூங்கலையா?"
"தூக்கம் கலைஞ்சிடுச்சி".
அருகில் படுத்த ரவி
கையை எடுத்து அலமேலு மேல் போட்டான்.அலமேலு அமைதியாக இருந்தாள்..காலை தூக்கி கால் மேல் போட
"ச்சே.. யார் செத்தாலும் பொழைச்சாலும் நமக்கு காரியமானா சரி"என்ற அலமேலு வின் வார்த்தைகள் கேட்டதும் பாம்பு தீண்டியது போல சட்டென்று காலை நகர்த்தினான் ரவி...
லேசான கோபத்துடன்,
"புரிஞ்சு தான் பேசுறியா?" என்றான்.
"ஆமாங்க.. ரெண்டு நாளா கடுமையான வயித்து வலி.நீங்க டூர்ல இருக்கீங்க.இங்க இருக்கிறது சந்தோஷூம் அத்தையும்.. நான் என் கஷ்டத்தை யார் கிட்ட சொல்றது?. நேத்து காலைல கூட ஃபோன்ல உங்ககிட்ட சொன்னேன்.. நேரா ஆபிஸ் போயிட்டு இப்பதான் வர்றீங்க.. ஒரு வார்த்தை அதைப் பற்றி கேட்டீங்களா? உங்க காரியமே கண்ணா..."
பேசி விட்டு எழுந்து பாத்ரூம் சென்று வந்தாள் அலமேலு...
இரவு விளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் முகம் வாடி யோசனையில் இருந்த கணவன் முகம் கண்டதும் மனம் வாடியது அலமேலுவுக்கு..
"ஸாரிங்க..ஏதோ ஒரு வேகத்தில பேசிட்டேன்.. இந்த வயித்து வலி வந்ததில் இருந்தே சின்ன சின்ன விஷயங்களுக்கு கூட கோபம் வருது.எல்லாத்துலயும் ஒரு வெறுமை.. எல்லோரும் இருந்தாலும் தனியா இருக்கற மாதிரி ஒரு ஃபீலிங்.நீங்க கட்டிப் பிடிச்சு லேசா ஒரு முத்தம் தந்தா எவ்வளவு சந்தோஷப்படுவேன்.. ஆனா, இப்ப பிடிக்க மாட்டேங்குது.. எனக்கே தெரியுது என்னோட மாற்றம்... ஆனா, ஒன்னும் பண்ண முடியலை..ஸாரிங்க"
"இல்லை அலமு.. உன் கோபத்துலயும் நியாயம் இருக்கு.. பொதுவாகவே ஆம்பிளைங்க எல்லோருக்கும் சம்பாதிச்சு வீட்டுக்கு கொடுக்கறது மட்டுமே தங்க கடமையா நினைக்கறாங்களே தவிர, பெண்கள் மாதிரி குடும்பத்தில இருக்கிற மத்தவங்க மேல கேர் எடுக்கறதில்லைங்கறது சுட்டாலும் நிஜம்தானே..நீ எங்க மேல கேர் எடுக்கற அளவு நான் எடுக்கலைங்கறது நிஜம்தானே அலமேலு..
ஸாரிடா... உன்னோட பிரச்சினை மெனோபாஸ் நிக்கற காலகட்டத்தில பெரும்பாலான பெண்களுக்கு வர்றது தான்..பயப்படாதே.. நாளைக்கு நம்ம டாக்டர் கிட்ட போலாம்"
என்றவாறே மனைவியின் தலையை தடவிக் கொடுக்கலாமா என்று தயங்கிய கணவனின் கையை பிடித்து லேசாக முத்தமிட்டாள் அலமேலு.
.... .... .... .....
டிசம்பர் மாத இறுதியில் ஒரு நாள்...
அலறிய அலாரத்தை அலுப்பு டன் அணைத்து நேரம் பார்த்து லேசாக அதிர்ந்தாள் அலமேலு.
"யார் அலாரத்தை ஆறு மணிக்கு மாற்றி வைத்தது?"என்று எண்ணியவாறு அவசர அவசரமாக எழுந்து...
ஹாலுக்கு வர...
சந்தோஷ் ஹாலை பெருக்கிக் கொண்டு இருந்ததை பார்த்து லேசாக வியந்தாள்..
நிமிர்ந்தவன்,
"இப்ப வலி எப்படிம்மா இருக்கு?"என்றான்.
"பரவாயில்லை சந்தோஷ்.. அப்பா சொன்னாரா?"
"ம்ம்.. முடிஞ்சா லஞ்ச் செஞ்சு கொடும்மா.இல்லைன்னா நான் கேன்டீனில் சாப்பிட்டுக்கறேன்"
"டேய்.. நான் உன் அம்மாடா.."
"எத்தனை வயசானாலும் நீ அம்மாதான்.ஆனாலும் அம்மாவுக்கும் வலி கஷ்டம் இருக்கும்ங்கறது புள்ளைகளுக்கும் புரியும்மா"
புன்னகையுடன் சமையலறைக்குள் நுழைய, அத்தை அங்கு காய்கறிகள் நறுக்கி கொண்டு இருந்ததை பார்த்து,
"உங்களுக்கு ஏன் சிரமம் அத்தை-- இவ்வளவு நேரத்தில் எந்திரிச்சு?"என்றாள்.
"இதுல என்ன சிரமம் அலமேலு.. எப்பவும் 5 மணிக்கு தூக்கம் தெளிஞ்சிடும்.. சும்மா தான் படுத்திருப்பேன்.. இந்த மாதிரி சமயத்துலயாவது என்னால முடிஞ்சது செஞ்சு தர்றேனே.."
ஷீ மாட்டியவாறே,
"பை பை.வர்றேம்மா"
என்றவாறே சந்தோஷ் கிளம்பி போக,
சோஃபாவில் அமர்ந்து பேஃனைப் போட்டு விட்டு அமர ஒலித்த மொபைலை எடுத்து..
காதில் வைக்க...
அடிவயிற்றில் இருந்து வலி கிளம்ப...
"வயித்து வலி எப்படிம்மா இருக்கு ?"
என்ற எதிர் முனை ரவியின் கேள்விக்கு,
"வலி இருக்குங்க.. ஆனா, பழைய அளவு தாங்க முடியாத அளவுக்கு இல்லை" என்றாள் அலமேலு..
.... .... .... ....
May be an illustration of 1 person

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...