Thursday, February 24, 2022

தேர்தல் தோல்வியால் அ.தி.மு.க., தொண்டர்கள் கொந்தளிப்பு!

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., படுதோல்வி அடைந்துஉள்ளதால், அக்கட்சி தொண்டர்கள் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. தோல்விக்கு காரணமான மாவட்ட செயலர்கள் மற்றும் நிர்வாகிகளை களையெடுக்குமாறு, கொடி துாக்கி உள்ளனர். அதே நேரத்தில் தோல்விக்கு காரணமாக, ஓட்டுப்பதிவு மிஷின் மீது பழி போடுகிறது, கட்சியின் ரெட்டை தலைமை.


நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., தனித்து போட்டியிட்டதுதான் படுதோல்விக்கு காரணம் என, அரசியல் விமர்சனங்கள் எழுந்துள்ளன.ஆனால், அக்கட்சி தனித்து போட்டியிடுவதற்கு, மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலர்களின் ரகசிய கூட்டணி தான் காரணம் என்கின்றனர் கட்சியினர். ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் எடுக்கிற முடிவுக்கு, மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலர்கள் கட்டுப்பட்டிருந்தால் பெரும் தோல்வியை தவிர்த்துஇருக்க முடியும். ஆனால், 'மாஜி' அமைச்சர்கள் மற்றும் 72 மாவட்ட செயலர்களின் சுயநலம் காரணமாக, தனித்து போட்டியிடும் நிலைக்கு கட்சி தள்ளப்பட்டுள்ளது. ஜெயலலிதா உயிரோடு இருந்த போது, மாவட்ட செயலர்கள் போட்டி போட்டு கட்சியை வளர்த்தனர்.

இரட்டை தலைமை பொறுப்பேற்ற பின், மாவட்ட செயலர்கள் அனைவரும், 'சிண்டிகேட்' அமைத்து, ஒருவருக்கொருவர் பேசி வைத்து, கூட்டணி வேண்டாம் என்ற முடிவை எடுத்தனர். ஒவ்வொரு மாவட்ட செயலரும், தங்கள் மாவட்டத்தில் உள்ள ஆளும் கட்சியினருடன், திரைமறைவில் ரகசிய உடன்பாடு செய்து கொண்டனர். தங்களுக்கு அடிமையாக இருக்கிற 'டம்மி' வேட்பாளர்களை தேர்வு செய்தனர். மாநகராட்சிக்கு 5 லட்சம், நகராட்சிக்கு 3 லட்சம், பேரூராட்சிக்கு 2 லட்சம் ரூபாய் பணம் தந்தவர்களையே வேட்பாளர்களாக, மாவட்டச் செயலர்கள் தேர்வு செய்தனர். அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி பேச்சு நின்றதும், வேட்பாளர்கள் பட்டியலை, அவசர அவசரமாக அறிவித்தனர்.

தேர்தல் பணி என்னவென்று தெரியாதவர்களுக்கு, 'சீட்' வழங்கி, கட்சியினரை கடனாளியாக்கி, நடுத்தெருவுக்கு கொண்டு வந்துள்ளனர். சென்னை மாநகராட்சியில் 200 வேட்பாளர்களில் பலர், நோய் வாய்பட்டவர்கள்; பணம் கொடுத்து சீட் வாங்கியவர்கள். சில வேட்பாளர்கள் துண்டு பிரசுரம் கூட அச்சடிக்கவில்லை.
தென் சென்னையை சேர்ந்த மாவட்ட செயலர் ஒருவர், தன் குடும்ப உறுப்பினர் திருமண வேலை இருப்பதாக கூறி, சரிவர பிரசாரத்திற்கு செல்லவில்லை. மத்திய சென்னையை சேர்ந்த ஒரு மாவட்ட செயலர், 'என் முகம் பிரபலம். நான் வராமல் என் பெயரை சொல்லி ஓட்டு கேட்டாலே வெற்றி பெற முடியும்' எனக் கூறி ஒதுங்கிக் கொண்டார்.

ஐ.டி., காரிடாரில் வசிக்கும் மற்றொரு மாவட்ட செயலர், தேர்தலில் போட்டியிட்ட தன் மகனுக்காக, பணத்தையும், நேரத்தையும் செலவழித்துள்ளார்.
வழக்கு, கைது நடவடிக்கைக்கு பயந்து, வர்த்தக பகுதியில் வசிக்கும் ஒரு மாவட்டச் செயலர், வீட்டை விட்டு வெளியே வரவே இல்லை. ஆளும் கட்சி அமைச்சர் ஒருவரும், மத்திய சென்னையை சேர்ந்த அ.தி.மு.க., மாவட்ட செயலரும் ஒரே ஜாதியினர் என்பதால், அவரும் 'அடக்கி' வாசித்துள்ளார்.


'டம்மி' வேட்பாளர்



மீதமுள்ள மாவட்ட செயலர்கள், கவுன்சிலர்களை வளரவிட்டால், எம்.எல்.ஏ., தேர்தலில் தங்களுக்கு போட்டியாக வந்து விடுவர் என கருதி, அவர்களும் தேர்தல் பணிகளை சுருக்கி கொண்டனர்.சென்னை ராயபேட்டை, அ.தி.மு.க., தலைமை அலுவலகம் அமைந்துள்ள 119வது வார்டில், அக்கட்சி நிர்வாகிகள் மட்டும், 1,500 பேர் உள்ளனர். ஆனால், அங்கு போட்டியிட்ட பெண் வேட்பாளரால், 903 ஓட்டுக்களை தான் வாங்க முடிந்துள்ளது.

துாத்துக்குடி மாநகராட்சியில், தி.மு.க., மேயர் வேட்பாளராக கருதப்படுகிற ஜெகனை எதிர்த்து, அ.தி.மு.க., தரப்பில் செல்வாக்கான வேட்பாளரை நிறுத்தவில்லை. ஜெகன் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக, அவருடன் செய்த உடன்பாட்டின் அடிப்படையில், 'டம்மி' வேட்பாளர் நிறுத்தப்பட்டுள்ளார்.அதற்கு பரிகாரமாக, அங்குள்ள வார்டில், அ.தி.மு.க., 'மாஜி' மகன் வெற்றி பெற, தி.மு.க., உதவும் வகையில், அந்த வார்டை காங்கிரசுக்கு ஒதுக்கி உள்ளது.மதுரை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலராக இருப்பவர் மணிமாறன். அவரது மாவட்டத்தில், அ.தி.மு.க., வேட்பாளர்கள் போட்டியிட முன்வர வேண்டாம் என, பகிரங்கமாகவே கேட்டுக் கொண்டார்.


ரகசிய உடன்பாடு



அவர் விரும்பியபடி கல்லுப்பட்டி, பேரையூர் பேரூராட்சிகளில், அ.தி.மு.க., ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா பேரவை செயலரும், முன்னாள் அமைச்சருமான ஆர்.பி.உதயகுமாரின் தொகுதியான திருமங்கலத்தில் உட்பட்ட நகராட்சி, பேரூராட்சி தி.மு.க., வசம் சென்றுள்ளன. இங்கேயும் அ.தி.மு.க., - தி.மு.க., ரகசிய உடன்பாடு கை கொடுத்துள்ளது.
ஆளும் கட்சியை எதிர்க்க பயந்து, 'டம்மி'களை களமிறக்கி, சொந்த கட்சியை காலி செய்து விட்டதாக, தொண்டர்கள் கொந்தளிக்கின்றனர்.


கட்சிக்கு புது ரத்தம்



அதற்கு காரணமான, மாவட்ட செயலர்களை எல்லாம் களையெடுத்து, கட்சிக்கு புது ரத்தம் பாய்ச்சினால் மட்டுமே, மீண்டும் தலைதுாக்க முடியும் என்கின்றனர்.ஆனால், நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்சியின் 'ரெட்டை' தலைமையோ, ஓட்டு மிஷின் மீது பழி போடுகிறது. ''ஓட்டுப்பதிவு இயந்திரத்தில், தி.மு.க., முறைகேடு செய்து, வெற்றி பெற்றதாக தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, நீதிமன்றம் செல்ல உள்ளோம்,'' என, இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவருமான பழனிசாமி கூறியிருக்கிறார்.


'டிபாசிட்' காலி!



சென்னை மாநகராட்சி 136வது வார்டில், விஜய் மக்கள் இயக்கம் சார்பில், அ.தி.மு.க., முன்னாள் கவுன்சிலர் 'ஸ்டார்' குணசேகரனின் மனைவி அறிவுச்செல்வி போட்டியிட்டார். இவருக்கு உள்ளூர் செல்வாக்கு இருந்ததால், அ.தி.மு.க., - தி.மு.க., ஆகிய இரு கட்சிகளும் திரைமறைவில் கைகோர்த்தன.தேர்தல் பொறுப்பாளர்களான அ.தி.மு.க., மாவட்டச் செயலர் ஒருவரும், முன்னாள் பெண் அமைச்சர் ஒருவரும், அறிவுச்செல்வியை தோற்கடிக்க நேரடியாக களமிறங்கினர்.இந்த மும்முனை போட்டியில், தி.மு.க., வேட்பாளர் நிலவரசி, 2,௦௦௦க்கும் மேற்பட்ட ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். விஜய் ஆதரவு வேட்பாளரான அறிவுச்செல்வி, 5,112 ஓட்டுகள் பெற்று, இரண்டாவது இடத்தை பிடித்தார். அ.தி.மு.க., வேட்பாளர் லட்சுமி, ௧,௧௩௭ ஓட்டுகள் மட்டுமே பெற்று, 'டிபாசிட்' இழந்தார்.


தி.மு.க., மீது பழனிசாமி குற்றச்சாட்டு



சென்னை புழல் சிறையில் உள்ள, முன்னாள் அமைச்சர் ஜெயகுமாரை நேற்று, அ.தி.மு.க., இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, பெஞ்சமின், மூர்த்தி ஆகியோர் சந்தித்து பேசினர். பின், பழனிசாமி அளித்த பேட்டி: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கள்ள ஓட்டு போட்டு, ஒன்பது மாத ஆட்சியில் கொள்ளையடித்த பணத்தில், ஓட்டுக்கு, 3,000 முதல் 5,000 ரூபாய் மற்றும் பரிசுப் பொருட்கள் கொடுத்து வெற்றி பெற்றுள்ளனர்; ஜனநாயக முறையில் வெற்றி பெறவில்லை.

தி.மு.க., அரசுக்கு, தேர்தல் ஆணையம் கைப்பாவையாக செயல்படுகிறது. தி.மு.க.,வின் ஏவல் துறையாக, காவல் துறை செயல்படுகிறது. தி.மு.க., எதிர்க்கட்சிகளை ஒடுக்க நினைக்கிறது. தொண்டர்கள் இருக்கும் வரை, அ.தி.மு.க.,வை அசைக்க முடியாது. தேர்தல் ஆணையம், காவல் துறை துணையோடு, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் தி.மு.க., முறைகேடு செய்து, வெற்றி பெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. அதன் உண்மை அறிய, நீதிமன்றம் செல்ல உள்ளோம். வழக்கறிஞர்களுடன் ஆலோசித்து, முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...