Sunday, February 27, 2022

விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புவதும் இல்லை.

 ஐம்பொறிகளுக்குள்ளே யார் பெரியவன் என்ற போட்டி வந்துவிட்டது. உடனே கடவுளிடம் போய் முறையிட்டார்கள்.

பேசும் சக்தி சொல்லியது ஒரு மனிதன் தனக்கு என்ன வேண்டும் என்பதை கேட்டுதான் வாங்கிக் கொள்கிறான். பேசினால் தான் அவன் தன்னுடைய தேவைகளை அடுத்தவரிடம் சொல்ல முடியும். இன்றைக்கு எதையும் கேட்டு வாங்கிதான் உயிர் வாழ வேண்டியிருக்கிறது. பேச்சு இல்லை என்றால் ஒன்றும் இல்லை. அதனால் நான் தான் பெரியவன் என்றது.
முதலில் ஒரு பொருளைப் பார்த்தால் தானே கேட்க முடியும். அதனால் பேச்சைவிட பார்வை தான் முக்கியம் .ஆகவே நான் தான் பெரியவன் என்றது பார்க்கும் சக்தி.
பார்ப்பதைவிட பேசுவதைவிட கேள்வி ஞானம்தான் ஒரு மனிதனை உருவாக்குகின்றது. நம்மைப்பற்றி அடுத்தவன் என்ன பேசுகிறான் என்பதை கேட்டால் தான் நம்மை திருத்திக்கொள்ள முடியும். அதனால் நான்தான் பெரியவன் என்று கேட்கும் சக்தி.
ஒரு பொருளைப் பார்த்தாலும் சரி. அது சம்பந்தமாக பேசினாலும் சரி. கேட்டாலும் சரி. அதைப் பற்றி சிந்தித்தால்தான் அதற்கு ஏற்ற மாதிரி செயல்படமுடியும். வந்து சேர்கின்ற விடயத்தை அது எப்படிப்பட்டதாக இருந்தாலும் பக்குவப்படுத்தி கொடுப்பது மனம்தான். அதனால் நான்தான் பெரியவன் என்றது சிந்திக்கும் சக்தி.
மூச்சு விடும் சக்தி இது எல்லாவற்றையும் பார்த்துக் கொண்டு சும்மா இருந்தது. நீ ஒன்றும் சொல்லவில்லையா என்று கேட்டார் கடவுள் .அது எதுவும் சொல்லாமல் ஒரு பெருமூச்சு மட்டுமே விட்டது.
கடவுள் யோசனை செய்தார் பிறகு சொன்னார். பாருங்கள் உங்களுக்குள் யார் பெரியவர் என்பதை முடிவு செய்யலாம். அதற்காக சின்ன சோதனை வைக்கிறேன். மனித உடம்பில் இருந்து நீங்கள் ஒவ்வொருவரும் கொஞ்ச நேரம் பிரிந்து இருக்க வேண்டும். யார் பிரிந்து இருக்கும் போது மனிதன் அதிகம் கஷ்டப்படுகிறானோ அவர்கள் தான் பெரியவர் என்றார் கடவுள்.
சரி என்று எல்லோரும் ஒத்துக் கொண்டார்கள்.
முதலில் பேசும் சக்தி விலகியது ஒரு மாதம் அவனால் பேச முடியாமல் போனது. அவ்வளவுதான் உயிர் வாழ்வதில் எந்த சிக்கலும் இருக்கவில்லை. கையால் சைகை காட்டி வேண்டியதை வாங்கி சாப்பிட்டு பிழைத்துக் கொண்டான்.
அதன் பின்னர் பார்க்கிற சக்தி மட்டும் பிரிந்து போனது. மனிதனால் எதையும் பார்க்க முடியவில்லை. தொட்டுப்பார்த்து வேண்டியதை கேட்டு வாங்கிக்கொண்டான்.
பின்னர் கேட்கிற சக்தி விலகிப் போனது. மற்றவர்கள் சொல்வது பேசுவது எதுவும் அவன் காதில் விழவில்லை .அதனால் பாதுகாப்பாக இருந்தான்.
இதன் பிறகு இப்போது மனிதன் சிந்திக்கும் சக்தியை இழந்தான் சித்தபிரமை பிடித்தவன் போல் உட்கார்ந்திருந்தான். யாரும் அவனை நெருங்கவே இல்லை. ஆனாலும் பரிதாபப்பட்டு சில பேர் சோறு போட்டார்கள். பிழைத்துக் கொண்டான்.
கடைசியாக வந்தது மூச்சுவிடும் சக்தி. அது மனித உடம்பை விட்டு விலக ஆரம்பித்தது. அவ்வளவுதான் கண்பார்வை மங்கியது. காது கேட்கும் சக்தியை இழந்தது. பேச முடியவில்லை ய. சிந்தனை கலங்கிப் போனது .மனிதன் கீழே விழுந்துவிட்டான்.
இப்போது அந்த நான்கு பொறிகளும் மூச்சுவிடும் சக்தியை பார்த்து கெஞ்ச ஆரம்பித்தன. தயவுசெய்து இந்த உடம்பை விட்டு நீ போய் விடாதே. நீ போய்விட்டால் இந்த உடம்புக்கு மரியாதை இல்லை. நாங்களும் செயல்பட முடியாது என்பதை புரிந்து கொண்டோம்.
நாங்கள் செய்வது வெளியே தெரிகிறது. உன்னுடைய பெருமை வெளியே தெரிவதில்லை என்று கூறின. கடவுளுக்கு இப்போது தீர்ப்பு சொல்ல வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.
இதேபோல்தான் நல்ல குணம் படைத்தவர்களும். அவர்கள் செய்கிற காரியத்தில் தான் கருத்தாக இருப்பார்கள். அவர்கள் செய்யும் தான தர்மங்கள் பற்றியோ நல்ல செயல்களைப் பற்றியும் விளம்பரப்படுத்துவது இல்லை. விளம்பரப்படுத்திக் கொள்ள விரும்புவதும் இல்லை.
அவசியமான பணிகள் எல்லாம் அடக்கமாகவே செய்யப்படுகின்றன. இதுதான் இந்த கதையில் உள்ள தத்துவம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...