Monday, February 21, 2022

சுயேச்சைகளை வளைத்திழுக்க... தயாராகுது தி.மு.க.

 நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஓட்டு எண்ணிக்கை இன்று நடக்க உள்ளதால், மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு, 'குறி' வைத்துள்ள தி.மு.க.,வினர், சுயேச்சைகள் மற்றும் மாற்று கட்சிகளில் வெற்றி பெறும் கவுன்சிலர்களை வளைத்திழுக்க தயாராகி வருகின்றனர். இப்பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்தி முடிக்கப்படும் வரை, கவுன்சிலர்களை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து, அதீதமாக 'கவனிப்பு' ஏற்பாடுகள் செய்ய, ஆந்திரா, கர்நாடகா, கேரள மாநிலங்களில் உள்ள, 'ரிசார்ட்'களை முன்பதிவு செய்துள்ளனர்.


தமிழகத்தில், 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 489 பேரூராட்சிகளுக்கு நடத்தப்பட்ட நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, இன்று நடக்கிறது. அதில் கவுன்சிலர்களாக வெற்றி பெறுவோர் சேர்ந்து, மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவரை தேர்வு செய்வர்.
மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிக்கான தேர்வு, மறைமுக ஓட்டு வாயிலாக நடத்தப்பட உள்ளது.

நடந்து முடிந்த தேர்தலில் சராசரியாக, 60.70 சதவீதம் ஓட்டுப்பதிவு நடந்துள்ளது. இது முந்தைய தேர்தல்களை விட மிகவும் குறைவு. இதனால், மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர் பதவிகளை 'மெஜாரிட்டி'யுடன் கைப்பற்றும் வகையில், மொத்த வார்டுகளில், பாதிக்கும் மேற்பட்ட இடங்கள் உறுதியாக கிடைக்குமா என்ற சந்தேகம், தி.மு.க.,வினர்
மத்தியில் எழுந்துள்ளது.

எனவே, மேயர் மற்றும் தலைவர் பதவிக்கு குறி வைத்துள்ளவர்கள், தங்களுக்கு ஆதரவு திரட்ட, இப்பவே காய் நகர்த்த துவங்கி உள்ளனர். சுயேச்சையாக வெற்றி பெறும் கவுன்சிலர்களை, தங்கள் பக்கம் வளைத்திழுக்க திட்டமிட்டுள்ளனர்.இதற்காக, மறைமுக தேர்தல் நடக்கும் வரை, அவர்களை மாற்று அணியினர் விலை பேசுவதை தடுத்து, தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க ஏற்பாடுகள் செய்து வருகின்றனர். பணம், வீட்டுமனை, கார் என, அதீத 'கவனிப்பு'களை செய்து தரவும் தயாராக உள்ளனர்.
இதற்காக, வெற்றி பெறும் சுயேச்சை மற்றும் மாற்று கட்சிகளின் கவுன்சிலர்களை தங்க வைப்பதற்காக, ஆந்திராவில் சித்துார், திருப்பதி; கர்நாடகாவில் பெங்களூரு, மங்களூரு, மைசூரு; கேரளாவில் திருவனந்தபுரம், மூணாறு போன்ற இடங்களில், 'ரிசார்ட்'களை முன்பதிவு செய்துள்ளனர்.ஓட்டு எண்ணிக்கை முடிந்ததும், வெற்றி பெற்றவர்களை அழைத்து செல்ல வாகனங்களையும் ஏற்பாடு செய்துள்ளனர்.




என்னென்ன நிபந்தனை?



* மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் பதவிக்கு ஆதரவு தெரிவிக்கும் சுயேச்சை கவுன்சிலர்கள், மறைமுக தேர்தல் முடியும் வரை, தங்கள் மொபைல் போன்களை ஒப்படைக்க வேண்டும்

* சுயேச்சைகள், தங்களுடன் ஒருவரை உடன் அழைத்து செல்லலாம்

* எங்கு தங்க உள்ளோம் என்ற தகவலை, குடும்பத்தினரிடம் கூட தெரிவிக்கக் கூடாது.இவை உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.




யாருக்கு அமோகம்? இன்று தெரியும்!



நகர்ப்புற தேர்தல் முடிவுகள், இன்று வெளியாகும் நிலையில், எந்த கட்சிக்கு அமோக வெற்றி என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.தமிழகத்தில், ஆறு ஆண்டுகளாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பின், 19ம் தேதி தேர்தல் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலில், ஆளும் தி.மு.க., அணிக்கும், பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க.,வுக்கும் இடையில் தான் நேரடி போட்டி ஏற்பட்டுள்ளது.

மேலும், பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகளும், தனித்து களம் இறங்கி உள்ளன. தி.மு.க.,வின் ஒன்பது மாத ஆட்சிக்கு மதிப்பெண் போடும் தேர்தலாக, இது அமைந்துள்ளது. 'சட்டசபை தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் பலவற்றை நிறைவேற்றி விட்டோம். அதனால், மக்கள் ஆதரவு, தி.மு.க.,வுக்கே' என, அக்கட்சி வட்டாரம் நம்பிக்கையோடு காத்திருக்கிறது.

வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில், மக்களை தி.மு.க., ஏமாற்றி விட்டது. ஆட்சி மீது மக்கள் அதிருப்தியில் உள்ளதால், தேர்தல் முடிவுகள் தங்களுக்கு சாதகமாக இருக்கும் என, அ.தி.மு.க.,வினர் நம்புகின்றனர்.

இதற்கு விடை சொல்லும் வகையில், இன்றைய தேர்தல் முடிவுகள் அமைய உள்ளன. பா.ஜ., - பா.ம.க., - மக்கள் நீதி மய்யம் - நாம் தமிழர் கட்சிகளில், மூன்றாவது இடம் யாருக்கு கிடைக்கும் என்ற கேள்வியும் எழுந்திருக்கிறது. எனவே, தேர்தல் முடிவுகளை எதிர்பார்த்து, இக்கட்சிகளும் ஆவலுடன் காத்திருக்கின்றன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...