Friday, December 16, 2022

2 கப் அரிசி மாவு இருந்தால் தேங்காய் பூரி ஈசியாக சுவையாக இப்படி ஒருமுறை செஞ்சு பாருங்க, வீட்டில் எல்லோரும் திரும்பத் திரும்ப செய்ய சொல்லுவாங்க!

 பூரி என்றாலே நமக்கு கோதுமை பூரி தான் ஞாபகத்திற்கு வரும் ஆனால் தேங்காய் சேர்த்து செய்யப்படும் இந்த பூரிக்கு அரிசி மாவு வேண்டும். பச்சரிசி மாவில் செய்யப்படும் இந்த தேங்காய் பூரி குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களையும் கவர்ந்திழுக்கும். வித்தியாசமான சுவையில், அட்டகாசமான அரிசி மாவு தேங்காய் பூரி ரெசிபியை எப்படி எளிதாக நாம் செய்யப் போகிறோம்? என்பதை இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள். தேங்காய் பூரி செய்ய தேவையான பொருட்கள்: தேங்காய் – அரை கப், பச்சரிசி மாவு – 2 கப், தண்ணீர் – இரண்டு கப், எண்ணெய் இ- ரண்டு ஸ்பூன், உப்பு – தேவையான அளவு.  தேங்காய் பூரி செய்முறை விளக்கம்: தேங்காய் பூரி செய்வதற்கு முதலில் பச்சரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். வீட்டில் அரைத்ததாக இருந்தாலும் சரி, கடையில் வாங்கியதாக இருந்தாலும் பரவாயில்லை. அரிசி மாவை கொண்டு செய்யப்படும் இந்த பூரி ரொம்பவே வித்தியாசமான, டேஸ்டியான சுவை உள்ளதாக இருக்கும். இப்போது அரை கப் அளவிற்கு தேங்காயை அதன் மேல் தோலை நீக்கி விட்டு சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். தேங்காய் மூடி துருவி இருந்தால் பூப்போல துருவி எடுத்துக் கொள்ளுங்கள். தேங்காயினுடைய பின்பாகம் நமக்கு இல்லாமல் வெள்ளையாக இருக்கும் சதை பகுதி மட்டும் இதில் வரும். அப்படி அல்லாதவர்கள் தேங்காயுடைய பின் தோல் பாகத்தை சீவி விட்டு வெள்ளையாக இருக்கும் பகுதியை மட்டும் சிறு சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீர் எதுவும் சேர்க்காமல் ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு இரண்டு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ள வேண்டும். நைஸ் ஆக அரைப்பட்டு விடக்கூடாது. அப்போதுதான் மாவு பிசையும் பொழுது சரியாக வரும். இப்போது அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு பாத்திரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இரண்டு கப் அளவிற்கு அளந்து தண்ணீர் சேர்த்து மாவிருக்கு தேவையான அளவிற்கு உப்பு மற்றும் 2 ஸ்பூன் எண்ணெய் விட்டு கொதிக்க விடுங்கள். அதிகம் கொதிக்க கூடாது, ஒரு கொதி வந்தால் போதும், அடுப்பை அணைத்து விடுங்கள். அதற்குள் மற்றொரு அடுப்பில் வாணலி ஒன்றை வைத்துக் கொள்ளுங்கள். அதில் நீங்கள் தண்ணீரை எடுத்த அதே கப்பில் இரண்டு கப் அளவிற்கு அரிசி மாவு எடுத்துக் கொள்ள வேண்டும். அடுப்பை குறைந்த தீயில் வைத்துக் கொண்டு அரிசி மாவை லேசாக சூடு பறக்க வறுத்துக் கொள்ள வேண்டும். வறுத்து எடுத்த இந்த அரிசி மாவையும் ஒரு பாத்திரத்தில் கொட்டிக் கொள்ளுங்கள். இதனுடன் நீங்கள் அரைத்து வைத்துள்ள தேங்காய் துருவலையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். நன்கு கலந்து விட்ட பின்பு நீங்கள் கொதிக்க வைத்த தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து ஏதாவது ஒரு கரண்டியை வைத்து கிண்டி விட வேண்டும். தண்ணீரின் சூட்டிலேயே மாவு வெந்து திரண்டு வரும். கொழுக்கட்டைக்கு மாவு பிடிப்பது போல இதை செய்ய வேண்டும். சூடு ஆறியதும் கையால் நன்கு பிசைந்து கொள்ளுங்கள். பின் மாவை சப்பாத்திக்கு எடுப்பது போல சிறு சிறு உருண்டைகளாக உருட்டி எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். இதன் மீது எண்ணெய் தடவி வைத்துக் கொள்ளுங்கள், இல்லை என்றால் சீக்கிரம் காய்ந்து போக வாய்ப்பு உண்டு. பின்னர் உருண்டைகளை சிறு சிறு வட்டமாக பூரிக்கு தேய்ப்பது போல மெலிதாகவும் இல்லாமல் தடிமனாகவும் இல்லாமல் மீடியமான வடிவத்தில் தேய்த்துக் கொள்ள வேண்டும்.  இப்படி தேய்க்க வராதவர்கள் சப்பாத்தி கட்டையின் மீது உருண்டைகளை வைத்து அதன் மீது பாலிதீன் கவர் போட்டு ஒரு தட்டை வைத்து அழுத்துங்கள். அழகாக ரவுண்ட் ஷேப்பில் பூரி மாவு ரெடி ஆகிவிடும். இதைச் சுடச்சுட எண்ணெயில் பொரித்து எடுக்க வேண்டியது தான் வேலை! நீங்கள் போட்டதும் மேலே எழும்பி வரும், அதன் பின்பு நீங்கள் லேசாக திருப்பி போடுங்கள். இது ரொம்பவும் பொன்னிறமாக சிவக்காது, வெள்ளையாகத்தான் இருக்கும். இரண்டு புறம் சிவந்ததும் எடுத்து விடுங்கள். அவ்வளவுதான் சுவையான தேங்காய் பூரி ரெடி! இதை சாம்பார், கார சட்னி போன்றவற்றுடன் தொட்டு சாப்பிட, செமையாக இருக்கும், நீங்களும் ட்ரை பண்ணி பார்த்து அசத்துங்க.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...