Wednesday, December 14, 2022

அறிவு வேறு....உணர்வு வேறு...

 ஒரு பொருள் குறித்தான அறிவு என்பது வேறு...அது சார்ந்த உணர்வு என்பது வேறு...தேன் என்பது என்ன..அது எப்படி பூக்களில் இருந்து வண்டுகளால் உறிஞ்சி சேகரிக்கப் படுகிறது...அது மிகவும் இனிமையாக இருக்கும் என்று எத்தனை பக்கங்கள் வேண்டுமானாலும் எழுதும் அளவிற்கு நம்மிடையே அறிவு நிறைந்து இருக்கலாம்..

ஆனால் ஒரு துளிக்கூட கல்வி அறிவு இல்லாத ஒருவன் தேனின் சுவை மற்றும் அதன் குணத்தை , தேனை சுவைத்த கணமே உணர்வான்.
அறிவு சார்ந்த விஷயங்களை விட உணர்வு சார்ந்த அனுபவங்கள மிக உயர்ந்தவை என்பது மனதில் கொள்ள வேண்டும்.மனிதப் பிறவியினைத் தவிர மற்ற எந்த உயிரினத்திற்கும் கற்கும் அறிவு கிடையாது.அத்தனையும் உணர்வுப் பூர்வமான உள்சார்ந்த பரிமாற்றங்கள் தான்.
' திரு' என்பதற்கு பொருள்... இன்ப துன்ப பாதிப்பு அற்ற நிலை என்பதே...திருவாசகம் எனில் அவ்வாறு இன்பம் துன்பம் இவற்றில் யாதொரு சலனம் அடையாத அருளாளர் வெளிப்படுத்தும் மொழி எனப் பொருள்படும்.
.மணிவாசகர் அவ்வாறு இன்ப துன்ப நிலைகளைத் தாண்டி சிவப்பேறு எய்திய நிலையில் அருளிய திருவாசகத்தில் முதல் பதிகமான சிவபுராணத்தின் இறுதி வரிகள்....
' சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
செல்வர் சிவபுரத்தின் உள்ளார் சிவனடிக்கீழ்ப்
பல்லோரும் ஏத்தப் பணிந்து...' .
' பொருள் அறிந்து' என்று மணிவாசகர் பெருமான் பாடவில்லை...... ' பொருள் உணர்ந்து ' என்று பாடி அருளினார்.
நாம் திருமுறைகளை ஆரம்பக் கட்டத்தில் பொருள் அறிந்து பாடத் தொடங்கினாலும் , அதை அப்படியே உள்வாங்கி உள்வாங்கி, உணர்ந்து பாடப் பழக வேண்டும்.அப்படிப் பாடினால் என்ன பேறு கிடைக்கும் எனச் சிந்திப்போம்..
சிவபுராணத்தின் பாயிரம் பாட்டாக நாம் அனைவரும் அறிந்த வெண்பா பாட்டு.யார் எழுதியது என்கின்ற விபரம் இல்லை.
'தொல்லை இரும்பிறவிச் சூழும் தளை நீக்கி
அல்லல் அறுத் தானந்தம் ஆக்கியதே - எல்லே
மருவா நெறி அளிக்கும் வாதவூர் எங்கோன்
திருவா சகம்என்னும் தேன். ‘
எம் வாதவூர் தலைவன் அள்ளி அள்ளி வழங்கிய நுகர நுகர சலிக்காமல திகட்டா பேரானந்த நிலை தரக்கூடிய திருவாசகம் என்னும் தேனினை உணர்ந்து சுவைக்க ,
பிறவிகள் உண்டாக்குவதற்கு காரணமான ஆணவ , கன்ம , மாயா மலங்கள் நீங்கி, இன்ப துன்ப வலைகள் அறுபாட்டு சிவத்தின் திருவடிகள் சேரும் பேரானந்த நிலை கிட்டும் என்கிறார்...
திருவாசகம் படித்தால் என்ன கிட்டும் எனப் பயனடைந்த ஒரு அருளாளர் பாடிச் சென்றார்.
திருவாசகம் எப்படிப் படிக்க வேண்டும் என மணிவாசகர் முதல் பதிகம் சிவபுராணத்தில் சொல்லி இருக்கிறார்.
மனிதன் சொல்லி கடவுள் எழுதியது திருவாசகம் என்பார்கள்.சிவம் தம் கைப்பட எழுதி வைத்துக் கொண்டு இருக்கும் திருவாசகம் பொருள் உணர்ந்து படித்து பேரானந்த நிலைக்கு முயற்சிப்போம்.
May be an illustration

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...