Saturday, December 17, 2022

விதியை மதி வெல்லுமா?...

 ஒரு ஞானி பிரகதீஸ்வரர்‌ திருக்கோவிலுக்கு விஜயம்‌ செய்தார்‌. கல்மண்டபத்தின்‌ வடக்கில்‌, அவருக்காக மேடை அலங்கரிக்கப்பட்டது. எதிரே ஆண்களும்‌ பெண்களும்‌ கணக்கிலடங்காது கூடியிருந்தனர்‌. வேதங்கள்‌ பற்றியும்‌, புராணங்களைப்‌ பற்றியும்‌ விளக்கிக் கொண்டே வந்த ஞானியார்‌ "யாரும்‌ கேள்விகள்‌ கேட்கலாம்‌. பதில்‌ சொல்லப்படும்‌" என்று தெரிவித்தார்‌. யார்‌ என்ன கேள்வி கேட்கப்‌ போகிறார்கள்‌ என்பதையே ஒவ்வொருவரும்‌ ஆவலாக எதிர்பார்த்தார்கள்‌. மண்டபத்தின்‌ மேற்கு மூலையிலிருந்து ஓர்‌ உருவம்‌ மெதுவாக எழுந்து நின்றது. சபையில்‌ இருந்த எல்லோரும்‌ அவரையே திரும்பிப்‌ பார்த்தார்கள்‌. தாங்கள்‌ என்ன கேட்க விரும்புகிறீர்கள்‌? என்று ஞானியார்‌ கேட்டார்‌. அவர்‌ சொன்னார்‌: சுவாமி! விதியையும்‌ மதியையும்‌ பற்றி வெவ்வேறு காலங்களில்‌ வெவ்வேறு சர்ச்சைகள்‌ தோன்றி முடிவுக்கு வராமல்‌ முடிந்து இருக்கின்றன. "விதியை மதியால்‌ வெல்லலாம்‌ என்றும்‌, மதியை விதி வென்றுவிடும்‌" என்றும்‌, இரண்டு கருத்துகள்‌ இன்னும்‌ இருந்து கொண்டிருக்கின்றன. எது முடிவானதோ சாமிக்கு தெரிந்தால்‌ சொல்லுங்கள்‌. " கேள்வி பிறந்ததும்‌, ஞானியார்‌ லேசாகச்‌ சிரித்தார்‌. மண்டபத்தில்‌ இருந்த எல்லோரையும்‌ பார்த்து, "எல்லோரும்‌ எழுந்து வெளியே செல்லுங்கள்‌; நான்‌ கூப்பிட்ட பிறகு வாருங்கள்‌" என்றார்‌. மண்டபம்‌ காலியாயிற்று. இரண்டு நிமிஷங்கள்‌ கழித்து, "எல்லோரும்‌ வாருங்கள்‌" என்றழைத்தார்‌. திபுதிபுவென்று எல்லோரும்‌ ஓடிவந்து அமர்ந்தார்கள்‌. ஞானியார்‌ கேட்டார்‌: இந்த மண்டபத்தில்‌ உட்காருந்திருந்தவர்கள்‌ வெளியே போய்‌ மீண்டும்‌ உள்ளே வந்திருக்கிறீர்கள்‌. உங்களில்‌ போன தடவை உட்கார்ந்த அதே இடத்தில்‌ உட்கார்ந்திருப்பவர்கள்‌ எத்தனை பேர்? எல்லோரும்‌ விழித்தார்கள்‌. நாலைந்து பேர்‌ மட்டும்‌ பழைய இடத்தில்‌ அமர்ந்திருந்தார்கள்‌. மற்ற எல்லோரும்‌ இடம்‌ மாறி இருந்தார்கள்‌. கேள்வி கேட்டவரைப்‌ பார்த்து, ஞானியார்‌ சொன்னார்‌: பாருங்கள்‌, இந்தச்‌ சின்ன விஷயத்தில்கூட இவர்கள்‌ மதி வேலை செய்யவில்லை. கொஞ்சம்‌ நிதானமாக யோசித்தால்‌, இவர்கள்‌ மெதுவாக வந்து, அவரவர்‌ இடங்களில்‌ அமர்ந்திருப்பார்கள்‌! இவர்கள்‌ மதியை மூடிய மேகம்‌ எது? " கேள்வியாளர்‌ கேட்டார்‌: இது அவர்கள்‌ அறியாமையைக்‌ குறிக்கும்‌; இதை விதி என்று எப்படிச்‌ சொல்கிறீர்கள்‌? " ஞானியார்‌ சொன்னார்‌: அறியாமையே விதியின்‌ கைப்பாவை. அறிவு எல்லோருக்குமே தெளிவாக இருந்துவிட்டால்‌, விதியும்‌ இல்லை, விதித்தவனும்‌ இல்லை. கேள்வியார்‌ கேட்டார்‌: மனிதனின்‌ அறியாமையே விதி என்றால்‌, விதிக்கு தனி நியமங்கள்‌ இல்லையா? ஞானியார்‌ சொன்னார்‌: இருக்கின்றன! இந்த உருவத்தில்‌, இந்த இடத்தில்‌ பிறக்க வேண்டும்‌ என்று நீங்கள்‌ நினைக்கவில்லை. உங்களைப்‌ பிறக்க வைத்தது விதியின்‌ பிரவாகம்‌. இப்படித்தான்‌ வாழவேண்டும்‌ என்று நீங்கள்‌ திட்டமிடுகிறீர்கள்‌; அப்படி வாழ விடாமல்‌ செய்வது விதியின்‌ பிரவாகம்‌. இந்த‌ பெண்தான்‌ எனக்குத்‌ தேவை என்று முடிவு கட்டுகிறீர்கள்‌: அவளைக்‌ கிடைக்கவிடாமல்‌ செய்வது விதியின்‌ பிரவாகம்‌. எப்போது நீங்கள்‌ நினைத்தது நடக்கவில்லையோ அப்போது உங்கள்‌ நினைவுக்கு மேல்‌ இன்னொன்று இருக்கிறது என்று அர்த்தம்‌. அதற்கு நம்‌ மூதாதையர்‌ சூட்டிய பெயரே விதி.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...