Wednesday, February 8, 2023

டி.பி.கஜேந்திரன் அவர்கள் பழம்பெரும் இயக்குனர் .

 தொடர்ந்து வரிசையாக அணிவகுத்தார் போல திரைக்கலைஞர்கள் ஒவ்வொருவரின் மரணம் நம் அனைவரின் நெஞ்சத்தையும் உலுக்குகிறது. கடந்த 3 ஆம் தேதி அன்று பழம்பெரும் இயக்குனர் மற்றும் நடிகர் கே.விஸ்வநாத் அவர்கள். 4 ஆம் தேதி பழம்பெரும் பின்னணிப் பாடகி வாணி ஜெயராம் அவர்கள். இவர்களின் துயரத்தை தாங்க முடியாமல் இருக்கும்போது, பிரபல இயக்குனர் மற்றும் நகைச்சுவை நடிகர் டி.பி.கஜேந்திரன் அவர்கள் காலமானார் என்ற செய்தி எல்லோரையும் மிகுந்த வேதனையையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது.

டி.பி.கஜேந்திரன் அவர்கள் பழம்பெரும் இயக்குனரும், அருணாசலம் ஸ்டுடியோ உரிமையாளரும் கதை வசனகர்த்தாவுமான ஏ.கே.வேலன் அவர்களிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றியவர். அதன்பின் நடிகர், வசனகர்த்தா, இயக்குனர் விசு அவர்களிடம் உதவியாளராகப் பல படங்களில் பணியாற்றியவர்.
கஜேந்திரன் அவர்கள் விசு அவர்களின் சிதம்பர ரகசியம் திரைப்படத்தில் வக்கீலாக ஒரு சிறிய வேடத்தில் நடித்து அறிமுகமானார். பூர்வீகம்: தூத்துக்குடி. பழம்பெரும் நகைச்சுவை மற்றும் குணசித்திர நடிகையான டி.பி.முத்துலட்சுமி அவர்களின் வளர்ப்பு மகன் கஜேந்திரன் அவர்கள்.
தொடர்ந்து விசு அவர்களின் இயக்கத்தில் புதிய சகாப்தம், அவள் சுமங்கலிதான், காவலன் அவன் கோவலன், வா மகளே வா போன்ற படங்களிலும், மேலும் தேனாண்டாள் பிலிம்ஸ் திருமதி.ராதா அவர்களின் தயாரிப்பில் விசு, புன்னகை அரசி கே.ஆர்.விஜயா நடித்த "வீடு மனைவி மக்கள்" திரைப்படத்தை இயக்கி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தும் இருந்தார் கஜேந்திரன். ஆக தனது முதல் திரைப்படத்தை குருவை வைத்து இயக்கிய பெருமை பெற்றார்.
நடிகர் மற்றும் கதசிரியருமான விஜய் கிருஷ்ணராஜ் அவர்களின் இயக்கத்தில் அண்ணன் என்னடா தம்பி என்னடா, வின்செண்ட் செல்வா இயக்கத்தில் பிரியமுடன், மனோஜ்குமார் இயக்கத்தில் குரு பார்வை, ராம நாராயணன் இயக்கத்தில் மாயா, ஞான ராஜசேகரன் இயக்கத்தில் பாரதி, மௌலி அவர்களின் இயக்கத்தில் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுடன் பம்மல் கே.சம்பந்தம், பார்த்திபன் அவர்களின் இயக்கத்தில் இவன், கே.பாக்யராஜ் இயக்கத்தில் புரட்சிக் கலைஞர் விஜயகாந்த் அவர்களுடன் சொக்கத்தங்கம், மற்றும் விஜய்யுடன் திருமலை, வில்லு, வேலாயுதம் போன்ற படங்களிலும், சூர்யா உடன் பிதாமகன், பேரழகன் போன்ற படங்களிலும், விக்ரம் அவர்களுடன் பிதாமகன், மஜா போன்ற படங்களிலும் விஷால் நடித்த "தோரணை" மற்றும் பல்வேறு நடிகர்களுடன் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். இவர் கடைசியாக நடித்த திரைப்படம் "பன்னிக்குட்டி" (2022).
வீடு மனைவி மக்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான கஜேந்திரன் அவர்கள், ராமராஜன் நடிக்க எங்க ஊரு பாட்டுக்காரன், எங்க ஊரு மாப்பிள்ளை, எங்க ஊரு காவக்காரன், கார்த்திக் நடிக்க பாண்டி நாட்டுத் தங்கம், பிரபு நடிக்க நல்ல காலம் பொறந்தாச்சு, பட்ஜெட் பத்மனாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம், பிரசன்னா நடிக்க சீனா தானா, ரமேஷ் அரவிந்த் நடிக்க பாட்டு வாத்தியார், ராஜ்கிரண் நடிக்க பாசமுள்ள பாண்டியரே, நகைச்சுவை நடிகர் விவேக் கதாநாயகனாக நடிக்க "மகனே என் மருமகனே" மற்றும் தாயா தாரமா, பெண்கள் வீட்டின் கண்கள் போன்ற திரைப்படங்களையும் இயக்கியுள்ளார்.
மிகுந்த நகைச்சுவை உணர்வு கொண்ட கஜேந்திரன் அவர்களை இயக்குனரும், நடிகருமான பார்த்திபன் அவர்கள் தனது படத்தில், இவரை "எல்லாரும் நிக்கறாங்க நீ மட்டும் ஏன்யா உக்காந்துட்டே அழிச்சாட்டியம் பண்ணறே" என்று கிண்டலடிக்க, கஜேந்திரன் அவர்கள் "நல்லா பாருங்க. நான் நின்னுட்டுதான்யா இருக்கேன்" என்று எவ்வளவோ சொல்லியும் பார்த்திபன் அவர்கள் இவரை மீண்டும் மீண்டும் கிண்டலடிப்பார். கஜேந்திரன் அவர்களின் குள்ளமான உருவத்தை தனக்கே உரிய பாணியில் எல்லோரும் ரசிக்கும்படியாக நகைச்சுவையாக வழங்கியிருப்பார்.
மேலும் கஜேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளியான மிடில் கிளாஸ் மாதவன் திரைப்படத்தில், இளைய திலகம் பிரபு, அபிராமி, டெல்லி கணேஷ், ரேவதி சங்கரன் நடிக்க, இவர்களுடன் விவேக், வடிவேலு வழங்கிய காமெடி சீன்கள் மக்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.
குறைந்த பட்ஜெட்டில் படங்களை இயக்குவதில் வல்லவரான கஜேந்திரன் அவர்களின் மறைவு ஈடுசெய்ய முடியாதது.
முக்தா பிலிம்ஸ் குடும்பத்தினர் சார்பாக கஜேந்திரன் அவர்களின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.🙏
May be an image of 1 person and standing
All reacti

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...