Friday, January 1, 2016

2015ல் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் கலக்கிய+சொதப்பிய டாப் 10 படங்கள்- ஒரு பார்வை




புத்தாண்டு என்றாலே ஒரு புத்துணர்ச்சி தான். இந்த வருடத்தில் நாம் செய்த தவறுகளை இனி செய்யக்கூடாது என்று சபதத்துடன் பலரும் புத்தாண்டை ஆரம்பிப்பார்கள். அந்த சபதம் எல்லாம் அடுத்து வரும் தமிழ் புத்தாண்டு வரை இருக்குமா என்றாலும் கேள்விக்குறி தான். எது எப்படியோ இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக தொடங்க சினி உலகம் தன் வாழ்த்துக்களை தெரிவிப்பதுடன், கடந்த ஆண்டு 200 படங்களுக்கு மேல் வந்துள்ளது, இதில் தமிழ் சினிமாவை கலக்கிய+சொதப்பிய படங்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி.(இவை அனைத்தும் படத்தின் பட்ஜெட், தயாரிப்பாளர் லாபம், விநியோகஸ்தர்கள் லாபம் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது).

1)பாகுபலி, காக்கா முட்டை

டைனோசர் முட்டை இருக்கும் இடத்தில் காக்கா முட்டைக்கு என்ன வேலை? என்று கேட்பது புரிகின்றது. ஆனால், பாகுபலி தன் பட்ஜெட்டிற்கு எத்தனை கோடி வசூல் செய்ததோ, அதே தான் காக்கா முட்டை செய்து காட்டியது.

மஹாதீரா படத்திற்கு பிறகு தமிழ் சினிமா ரசிகர்களால் பலரும் கவரப்பட்டவர் ராஜமௌலி, ஈயை வைத்து இமயம் அளவு வெற்றி பெற்றவர். இவரின் கனவுப்படைப்பான இந்திய திரையுலகமே எதிர்ப்பார்த்தது பாகுபலி. பிரபாஸ், ராணா, அனுஷ்கா, தமன்னா என நட்சத்திர பட்டாளாத்துடன் வெளிவந்த இப்படம் உலகமெங்கும் இப்படம் ரூ 600 கோடி வரை வசூல் செய்தது. இப்படம் தமிழகத்தில் மட்டும் ரூ 70 கோடி வரை வசூல் செய்தது மட்டுமில்லாமல், பாலிவுட்டில் முதன் முறையாக ரூ 100 கோடி வசூல் செய்த தென்னிந்திய படம் என்ற பெயரையும் பெற்றது.

தனுஷ்-வெற்றிமாறன் தயாரிப்பில் ரூ 1 கோடிக்கு குறைவாக எடுக்கப்பட்ட காக்கா முட்டை ரூ 15 கோடி வரை வசூல் செய்தது. நடிகர்கள் பலங்களை நம்பாமல் கதையை நம்பி வந்த படத்திற்கு எப்போதும் தமிழ் ரசிகர்கள் மதிப்பளிப்பார்கள் என்பதற்கு இவையும் ஒரு உதாரணம்.

2)வேதாளம்அஜித்+சிவா கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகிய படம் தான் வேதாளாம், டீசர் சாதனை, பாடல்கள் தெறி ஹிட் என தீபாவளிக்கு களம் இறங்க, ரசிகர்கள் எதிர்ப்பார்த்தது போலவே படமும் மாஸ் தெறிக்க, இதுவரை இல்லாத அஜித் படத்திற்கு ஓப்பனிங் கிடைத்தது. முதல் நாளே ரூ 15 கோடி வசூல் செய்து அனைத்து சாதனைகளையும் முறியடித்தது. மலேசியாவில் ரூ 13 கோடி, விநியோகஸ்தர்கள் ஷேர் மட்டும் ரூ 45 கோடிகளுக்கு மேல் என இப்படம் வசூலில் புரட்சி செய்ய ரூ 125 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

3)தனி ஒருவன்
இதுவரை இப்படி ஒரு கமர்ஷியல் படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் பார்த்திருக்க மாட்டார்கள் என்ற அளவிற்கு வெளிவந்த படம் தான் தனி ஒருவன். ஜெயம் ரவி, மோகன்ராஜா, ஹிப் ஆப் ஆதி என அனைவரும் வெற்றி கொடுத்தே ஆக வேண்டும் என்ற கட்டாயத்தில் களம் இறங்கி வசூல் வேட்டை நடத்தினர். அதிலும் அரவிந்த் சாமியின் நடிப்பு மகுடத்திற்கு எல்லாம் மகுடம் தான். இப்படம் பல மொழிகளில் தற்போது ரீமேக் ஆக காத்திருக்கின்றது. தனி ஒருவன் ரூ 75 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது. இப்படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

4)காஞ்சனா-2

லாரன்ஸ் தன்னுடைய ட்ரண்ட் மசாலாவான பேய் படத்தின் வரிசையில் 3வது பாகமாக காஞ்சனா-2வை வெளியிட, முந்தைய பாகங்கள் அளவிற்கு இல்லை என்றாலும், கோடை விடுமுறை, குழைந்தகளை கவர்ந்து இழுத்தல் போன்ற பல காரணங்களால் இப்படம் ரூ 101 கோடி வசூல் செய்தது. ரஜினி, கமல், விஜய், அஜித், விக்ரம், சூர்யா அல்லாது ரூ 100 கோடி தமிழில் வசூல் செய்தது லாரன்ஸ் மட்டுமே. இப்படத்திற்கு வரிவிலக்கு அளிக்காததால் 4வது இடத்தை பெற்றுள்ளது.

5)ஐ
கடந்த வருடத்தில் வெளிவந்த தமிழ் சினிமாக்களில் அதிக வசூல் செய்த படம் என்றால் ஐ தான். இப்படம் ரூ 225 கோடி வரை வசூல் செய்தது. ஷங்கரின் பிரமாண்டம், விக்ரமின் கடின உழைப்பு, எமியின் கவர்ச்சி என அனைத்தும் கவர படமும் சூப்பர் ஹிட் வரிசையில் இடம் பிடித்தது. ஆனால், படத்தின் பட்ஜெட், 30% டாக்ஸ் என இப்படத்திற்கு இதுவே கொஞ்சம் தடையாக இருந்தது. அதை வைத்து பார்க்கையில் இத்தனை கோடி வசூல் செய்திருந்தாலும் இப்படம் சில இடங்களில் சுமாரான லாபத்தை தான் தந்தது.

6)பாபநாசம்
அழகான குடும்பம், அந்த குடும்பத்திற்குள் நுழையும் ஒரு பிரச்சனை என மலையாள சினிமாவில் மாபெரும் ஹிட் அடித்த த்ரிஷயம் படத்தின் ரீமேக்கில் கமல்ஹாசன் நடித்த படம் தான் பாபநாசம். கமல்ஹாசன் படத்திற்கு எப்போதும் இருக்கும் ஓப்பனிங் இந்த படத்திற்கு கிடைக்கவில்லை. ஆனால், படத்தின் பாசிட்டிவ் டாக், மெல்ல ரசிகர்களை வரவைத்தது. இப்படமும் மிகவும் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 50 கோடி வரை வசூல் செய்தது.

7)நானும் ரவுடி தான்
தமிழ் சினிமா விஜய் சேதுபதி என்று ஒரு தரமான நடிகனை சில வருடங்களாக மிஸ் செய்தது. இதை ஈடுகட்டும் பொருட்டு லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, இவர் நடித்த நானும் ரவுடி தான் படம் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படத்தின் படஜெட் ரூ 10 கோடிக்கும் குறைவு தான், ஆனால், ரூ 35 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

8)த்ரிஷா இல்லன்னா நயன்தாரா
இதெல்லாம் ஒரு படமா? எப்படி எடுத்து இருக்காங்க பாருங்க என கூறினாலும், பல இளைஞர்களை திரையரங்கு நோக்கி வரவைத்தது த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படம். இப்படம் மிக மிக குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு ரூ 25 கோடிகள் வரை வசூல் செய்தது/

9)மாயா, டிமாண்டி காலனி

பேய் படங்கள் என்றாலே பேய் பிடிக்கும் பின் அதை ஓட்ட வரும் சாமியர், அதில் கொஞ்சம் காமெடி, கொஞ்சம் த்ரில், கொஞ்சம் செண்டிமெண்ட் என சில டெம்ப்ளைட் இருக்கும். ஆனால், இதையெல்லாம் உடைத்து தமிழ் சினிமாவிற்கு ஒரு புதிய பேய் உலகத்தை காட்டிய படங்கள் தான் மாயா, டிமாண்டி காலனி. இந்த இரண்டும் படங்களிலும் பெரிய நடிகர்கள், டெக்னிஷியன் பெரிதால் செலவு கூட இல்லாமல் எடுக்கப்பட்டு, பாக்ஸ் ஆபிஸில் நல்ல வசூலை பெற்றது. இதில் மாயா ரூ 20 கோடிகளுக்கு மேல், டிமாண்டி காலனி ரூ 15 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

10)ஓ காதல் கண்மணி
இதெல்லாம் தமிழ் குடும்பத்திற்கு செட் ஆகுமா? என கேட்கும் லிவிங் டூ கெதர் கலாச்சாரத்தை கையில் எடுத்து, என்றும் புதுமையை தமிழ் சினிமாவிற்கு கொடுக்கும் மணிரத்னம் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற கட்டாயத்தில் ஓ காதல் கண்மணி படத்தை ரிலிஸ் செய்தார். துல்கர், நித்யா மேனனின் துறுதுறு நடிப்பு, காதல், கலர்புல் என இளைஞர்களை இப்படம் சுண்டி இழுக்க, மணி ரத்னம் இஸ் பேக் என்று சொல்ல வைத்தது. இப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட சுமார் 20 கோடிகளுக்கு மேல் வசூல் செய்தது.

இதை தொடர்ந்து ஹிட் வரிசை, சுமாரான லாபம், போட்ட பணம் திரும்ப வந்தது அடிப்படையில் டார்லிங், என்னை அறிந்தால், அனேகன், காக்கி சட்டை, தமிழுக்கு எண் 1ஐ அழுத்தவும், கொம்பன், 36 வயதினிலே, இன்று நேற்று நாளை, ராஜதந்திரன், இவனுக்கு தண்ணில கண்டம், ரோமியோ ஜுலியட், இனிமே இப்படித்தான், தூங்காவனம், ஈட்டி ஆகிய படங்கள் இடம்பிடித்துள்ளது.

மேலும் ரசிகர்கள் பெரிதும் எதிர்ப்பார்த்து பெரும் தோல்வியை சந்தித்த படங்கள்

 புலி, மாஸ், உத்தம வில்லன், பாயும் புலி, சகலகலா வல்லவன், தங்கமகன், இஞ்சி இடுப்பழகி, பொறம்போக்கு, எனக்குள் ஒருவன், இது என்ன மாயம், மசாலா படம், சண்டி வீரன், எலி, வலியவன் என பல படங்கள் வரிசைக்கட்டி நிற்கின்றன. 

வழக்கம் போல் இந்த வருடமும் வெற்றி படங்களின் எண்ணிகையின் விட தோல்வி படங்களின் எண்ணிக்கை தான் அணி வகுத்து நிற்கின்றது. ஆனால், மனதிற்கு ஆறுதளாக காக்கா முட்டை, டிமாண்டி காலனி போன்ற சிறு பட்ஜெட் படங்களின் வெற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இதே நிலையில் ரூ 100 கோடி வரை செலவு செய்து எடுக்கப்பட்ட புலி ஒரு சில சமூக வலைத்தள பேச்சுக்களால் மாபெரும் தோல்வியடைந்தது ரசிகர்கள் மட்டுமின்றி தமிழ்சினிமா கலைஞர்கள் பலருக்கும் வருத்தம் தான்.

இதில் ரிலிஸாகமால் பெட்டிக்குள் முடங்கிய படங்கள் ரிலிஸான படங்களை விட அதிகம் தான். கடந்தவை கடந்தவையாகவே இருக்கட்டும் இனி பிறப்பவை கபாலி, 2.o, பாகுபலி-2, தெறி, 24, அஜித்-சிவா படம், விக்ரம்-ஆனந்த் ஷங்கர், கமல்ஹாசனின் பெயரிடாதப்படம், ரஜினி முருகன், கதகளி, தாரை தப்பட்டை என பல பெரிய நடிகர்கள் படங்கள் வரவிருந்தாலும், நலன் குமாரசாமி, கார்த்திக் சுப்புராஜ், தியாகராஜா குமரராஜா, டிமாண்டி காலனி இயக்குனர் அஜய்யின் அடுத்த படம், சுந்தர்.சியின் அரண்மனை-2 என பல படங்கள் களம் இறங்க இந்த வருடம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு செம்ம விருந்து காத்திருக்கின்றது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...