வீட்டில் குளிர்சாதனப் பெட்டி இல்லாத நாட்களில் ஐஸ் வாட்டருக்காக அப்படி ஏங்கி இருக்கிறேன். ஃப்ரிட்ஜ் வைத்திருக்கும் பக்கத்து வீட்டிற்கு ஏதோ ஒரு சாக்கு சொல்லிச்சென்று அதைக்கேட்டு வாங்கிக் குடித்து தாகசாந்தி அடைந்ததுண்டு. இப்போது என் வீட்டிலும் குளிர்சாதனப்பெட்டி இருக்கிறது. நம்ப மாட்டீர்கள். வாங்கிய நாளிலிருந்து இன்று வரை அதில் வாட்டரை வைத்து குளிர்ச்சியாக்கி குடித்ததே இல்லை.
அங்குமிங்கும் பார்த்துப்பார்த்து பொறாமைப்பட்டு வீட்டில் வாங்கி வைத்த டைனிங் டேபிளில் இப்போதெல்லாம் உட்கார்ந்து சாப்பிடத் தோன்றுவதில்லை. அலுவலகம் மற்றும் வெளியிடங்களில் டேபிளில் அமர்ந்து சாப்பிட்டு அலுத்துப்போனவனுக்கு வீட்டிலிருக்கும்போது தரையில் அமர்ந்து சாப்பிட்டால் மட்டுமே பரம திருப்தி.
சோஃபாவும் அப்படித்தான். அதிக நேரம் அமர்ந்துவிட்டால் 'ரொம்பவும் சோம்பேறியாய் ஆகிவிட்டோமோ! அளவுக்கதிகமாக உடம்பு சுகத்துக்கு பழகிவிட்டோமோ!' என்பது மாதிரியாய் குற்ற உணர்ச்சி தோன்றும். அதுமட்டுமில்லாமல் அமர்ந்தால் பாதி புட்டம் உள்ளேபோய் என்னமோ அசௌகரியமாக உணர்வேன். உடனே பக்கத்தில் இருக்கும் ப்ளாஸ்டிக் சேரில் வசதியாக அமர்ந்து கொள்வதுண்டு.
பீட்ஸா பர்கர் பாஸ்தா என்றெ
ல்லாம் விதவிதமாய் சாப்பிட்டு ருசிபார்த்துவிட்டு 'என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.
ல்லாம் விதவிதமாய் சாப்பிட்டு ருசிபார்த்துவிட்டு 'என்ன இருந்தாலும் வாழை இலை சாப்பாட்டுக்கு இணையுண்டா' என்று கடைசியில் மனமாற்றம் அடைந்தவர்களில் நானும் ஒருவன்.
3GB RAM, quardcore processor, 32GB in build memory என்று அனைத்துமே போதுமான அளவு இருக்கிறதா, லேட்டஸ்ட் ஆண்ட்ராய்ட் அப்டேட் செய்யப்பட்டிருக்கிறதா, மார்க்கெட்டில் ட்ரெண்டில் இருக்கிறதா என்றெல்லாம் பார்த்து அதிக காசைப்போட்டு வாங்கிய மொபைல் போனில் hardly I use Facebook and WhatsApp. அதை நினைத்து அவ்வப்போது சிரித்துக்கொள்வேன்.
அடுத்ததாக எல்ஈடி டிவி. அம்பது இன்ச் இருக்கிறதா, அத்தனை வண்ணங்களையும் தெளிவாக உள்வாங்கிக் காட்டுகிறதா, 1080p or 4K compatibility இருக்கிறதா, WiFi enabledஆ, inbuild internet இருக்கிறதா, மொபைலையோ ஐபேடையோ mirroring செய்ய முடிகிறதா, 1 TB hard diskஐ கனெக்ட் செய்தால் ஏற்றுக்கொள்கிறதா, Miracast, YouTube, Netflix, Browser எல்லாம் உள்ளடக்கியதா, இதுதான் லேட்டஸ்ட் மாடலா என்றெல்லாம் ஆயிரம் பரிசோதனைகளைச் செய்து பார்த்தபிறகு அரை மனதுடன் வாங்கியாயிற்று. ஆனால் அதை வாங்கி அரை வருடங்கழித்து இப்போதெல்லாம் நான் நாளொன்றுக்கு ஒரு மணிநேரம் டிவி பார்த்தால் பெரிய விஷயம்.
ஒரு காலத்தில் வெளியே எங்கு போனாலும் ஓசி வைஃபை கிடைக்காதா எதையாவது டவுன்லோட் செய்துவிடமாட்டோமா என்று தவம் கிடந்திருக்கிறேன். ஆனால் இப்போது வீட்டிலேயே ப்ராட்பேண்ட் இண்டர்நெட் இருக்கிறது. ஒரு வருடத்திற்கு சந்தா செலுத்தியாகிவிட்டது. மாதம் 50GB வரை தரவேற்றம் தரவிறக்கம் செய்யமுடியும். ஆனால் Work from Home தவிர வேறு எதற்கும் பெரிதாக அதைப் பயன்படுத்துவதில்லை. அன்லிமிட்டட் சாப்பாட்டை வாங்கிவிட்டு அளவுச் சாப்பாடு சாப்பிடுபவனைப் போல அதை அளவாகத்தான் பயன்படுத்தமுடிகிறது.
வேலை நிமித்தமாய் ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் தங்க நேரும்போதெல்லாம் அங்கிருக்கும் பஞ்சுமெத்தையிலிருந்து பாத் டப் வரை பிரமிப்பு அகலாமல் அனுபவிக்கும்போது நன்றாகத்தான் இருந்தது. ஆனால் ஒரு வாரமோ பத்து நாளோ தங்கி முடித்து வெளியே கிளம்பும்போதுதான் செயற்கையாய் சிரித்து வரவேற்ற ரிசப்ஷனிஸ்ட், உதட்டில் வலிய புன்னகையை வரவழைத்துக்கொண்டு உதவிய பணியாளர்கள் என்பதை மனம் உணருகிறது. 'இவையெல்லாம் சம்பளத்திற்காக அவரவர் நிர்பந்தத்தின் பேரில் நமக்கு காட்டிய அனுசரனை, இது ஒரு பிளாஸ்டிக் வாழ்க்கை, இதே ஓட்டல் அருகே இருக்கும் நடைபாதையில் நாம் சாதாரணமாக நடந்துபோனால் நம்மை அண்ணாந்து பார்க்கும் லிஸ்ட்டில்தானே சேர்ப்பாரகள் இவர்கள்!' என்றெல்லாம் யோசிக்கிறது மனம். பிரயாணம் முடிந்து வீட்டுப்படிகளை மிதித்தவுடன் களைப்பில் 'சரி கொஞ்சநேரம் கண்ணயரலாம்' என்ற நினைப்பு வந்தவுடன் எனது கண்கள் தேடுவது தினசரி எனது வியர்வையை கண்ணீரை ஏந்திக்கொண்டு எனக்காகக் காத்திருக்கும் ஒற்றைத் தலையனையை மட்டுமே.
இப்படியாக பல சுய பரிசோதனைகளின் வாயிலாக சில விஷயங்கள் உரைத்தன. நாம் நமக்கு பண வரவு அதிகமாகத் தொடங்கியவுடன் சகல வசதிகளோடு இருக்கிறோமா என்று ஒருமுறை சரிபார்த்துக்கொண்டு ஆனால் அதற்குப்பிறகு வாழ ஆசைப்படுவது என்னவோ நமது பழைய மனதுக்குப்பிடித்த நெருக்கமான வாழ்வைத்தான்!
இதே யோசனையோடு தெருவில் இறங்கி நடக்க ஆரம்பித்தேன். அங்கே நடந்து கொண்டிருந்தவர்களில் ஒரு இரண்டுபேரைக் கூப்பிட்டு இப்படி சொல்லத் தோன்றியது.
'உங்களுக்கு ஒரு விஷயம் தெரியுமா? சந்தோஷங்கறது காசு பணத்தால மட்டும் வந்துடறது இல்லைங்க!'
No comments:
Post a Comment