எந்த அரண்மனையில் பிறந்தாலும் விதி மாறாது என்பார்கள், எக்குடும்பம் பிறப்பினும் விதிபடி வாழ்க்கை அமையும் என்பார்கள்.
அதற்கு பெரும் உதாரணம் கலைஞரின் மூத்த மகன் மு.க முத்து. பத்மாவதி எனும் கலைஞரின் முதல்மனைவி கலைஞரின் வறுமையான போராட்ட காலங்களில் துணையிருந்தவள், தன்னை செதுக்கி செதுக்கி கலைஞர் நிரூபித்துகொண்டிருந்த காலங்களில் அந்த பத்மாவதி இறக்கும் போதும் கலைஞர் மேடைகளில் பேசவேண்டிய கட்டாயம்.
அப்படிபட்ட காலங்களில் அஞ்சுகத்தாலும், முரசொலிமாறனின் தாயாராலும் வளர்க்கபட்டவர். பெரியார், பட்டுகோட்டை அழகிரி, அண்ணா, எம்ஜிஆர் என பல ஜாம்பவான்கள் கொஞ்சி வளர்ந்த குழந்தை அவர்.
ஆனால் விதி சினிமா உருவில் வந்தது, கலைஞருக்கும் எம்ஜிஆருக்கும் பனிப்போர் தொடங்கிய காலத்தில் திரை நடிகராக அறிமுகமானார் மு.க முத்து , ஆங்காங்கு முக முத்து ரசிகர்மன்றங்கள் திறக்கபட்டன.
எம்ஜிஆர் எப்படி பெரும் பிம்மபாக சினிமா எனும் மாயகண்ணாடியால் உருவானார் என்பதை மிக அருகிலிருந்தே பார்த்த கலைஞருக்கு, மகனையும் அப்படி உருவாக்கிவிடலாம் என நம்பிக்கை வந்ததில் ஆச்சரியமில்லை.
ஒரு நடிகன் இப்படித்தான் உருவாகிறானா? இதிலென்ன பிரமாதம் என்பது அருகிலிருப்பவர்களுக்கு புரியும், கலைஞருக்கும் அது புரிந்தது.
ஆனால் எம்ஜிஆர் முன் முகமுத்துவால் நிற்கமுடியவில்லை, அவரின் விதி வேறு, அவர் இந்த தடைகளை தாண்டி விஸ்வரூபமெடுத்தார்.
கலைஞரோ திணித்து பார்க்க பார்க்க, முக முத்து தோற்றுகொண்டே மதுவில் வீழ்ந்தார், வீழ்ச்சி என்றால் கடும் வீழ்ச்சி, முப்பொழுதும் மது நீச்சல். பெரும் குடும்பத்தில் , அரசியல் பரபரப்பில் சிக்கிவிட்ட கலைஞரும் முத்துவினை பார்க்கமுடியவில்லை, தாயும் இல்லை கேட்பார் இல்லை
மணம் செய்து வைத்தும் அவர் மாறவில்லை, பொதுவாக கலைஞர்கள் மனம் வேறு, பெரும் ரசனை கொண்டவர்களே கலைதுறையில் பிரகாசிக்கமுடியும், அம்மாதிரியான மனம் ஒரு போதையில் சிக்கினால், ஆறுதலை அதிலேதான் தேடும், புறக்கணிப்பு சித்திரவதையினை அப்போதையில்தான் கழிப்பார்கள்
பாரதி அப்படி கஞ்சாவில் சிக்கினான். கண்ணதாசன், சாவித்திரி, சந்திரபாபு, நாகேஷ் எல்லோரின் வரிசை அப்படியே, மு.க முத்துவும் அதிலொருவர்.
குடிமுற்றி புறக்கணிக்கபட்டார், நேரடியாக எம்ஜிஆரிடமே ராமவரம் தோட்டம் சென்று உதவி கேட்டார். குடிகாரனை சமூகமே ஒதுக்கிவைக்கும்பொழுது குடும்பம் ஒதுக்காதா?
கலைஞரின் பெரும் வேதனையானார் முத்து, பெரும் பாடகரான சி.எஸ் ஜெயராமனின் மகளை திருமணம் செய்தும் திருந்தவில்லை, மேற்பட்ட திருமண சர்ச்சைகளும் உண்டு.
மீடியா, கலைஞர் குடும்பம் என எல்லா வெளிச்சத்திலிருந்தும் மறைந்த முத்து அவ்வப்போது திடீரென சர்ச்சைகளுடன் தோன்றுவார், அதில் ஒருமுறை ஜெயலலிதா கொடுத்த 5 லட்சம் முக்கியமானது.
கலைஞருக்கு எதிரணியினர் எல்லாம் அவ்வப்ப்போது கலைஞருக்கு எதிராக முகமுத்துவினை பகடையாக்கிய தொடர்ச்சி அது.
சிவாஜிகணேசன் மறைந்தபொழுது, அருகிலிருந்த மதுகடையினை திறக்க சொல்லி சர்ச்சை செய்த கதையும் உண்டு, அவ்வப்போது மருத்துவமனையில் படுத்துகொள்வார், ஒருமுறை குடலில் பிரச்சினை என சிகிச்சை பெற்ற வாலியினை சந்திக்கசென்ற கலைஞர் அடுத்த அறையிலிருந்த முகமுத்துவினை சந்தித்து வந்தார், "குடலில் ஏதோ பிரச்சினை எனக்கு, அவருக்கு என்ன" என வாலிகேட்க" ,
"அவனுக்கு குடலே இல்லை, அதுதான் பிரச்சினை, எல்லாம் அரித்துவிட்டது குடி" என்று விரக்தியாக சொன்னர் கலைஞர்.
அன்று எதிரிகளால் கலைஞருக்கு எதிராக உருட்டிவிளையாடபட்ட முத்து பின்னாளில் அழகிரியுடன் கைகோர்த்து குடும்பத்திற்குள் பகடையான காலமும் உண்டு, ஆனால் சொன்னார்,
"என் குடும்பத்தில் என்னை நேசிக்கும் ஒரே உறவு அழகிரி"
காணமலே போய்விட்ட மு.க முத்து பின்பு இன்று தன்பேரன் திருமணத்தில் , அதாவது விக்ரம் மகளுடன் அவர் பேரனுக்கு நடக்க இருக்கும் திருமண செய்தியில் வெளிவந்திருக்கின்றார்.
ஒரு பெரும் சினிமா சகாப்தத்தின் கொள்ளுபேரன், தாய் வழியில் பெரும் பாடகரான
ஜெயராமனின் பேரன் எனும் சினிமா வம்சத்தின் வாரிசும், நடிகர் விக்ரமின் வாரிசும் இணைய போகும் விழாவில் கலைஞரும் கலந்து கொள்வார்.
ஜெயராமனின் பேரன் எனும் சினிமா வம்சத்தின் வாரிசும், நடிகர் விக்ரமின் வாரிசும் இணைய போகும் விழாவில் கலைஞரும் கலந்து கொள்வார்.
நிச்சயம் கலைஞரின் வாழ்க்கை மகா விசித்திரமானது
எத்தனையோ பேரினை எங்கோ உயர்த்திவிட கலைஞரால், தொட்டதெல்லாம் துலங்கும் கைராசிக்காரர் என பலர் கொண்டாடும் கலைஞரால் இறுதிவரை தன் பாசத்திற்குரிய மூத்த மகனுக்கு பெரிதாய் ஒன்றும் செய்துவிடமுடியாமல் தடுத்தது விதி.
ஆசை ஆசையாய் தன் தந்தை முத்துவேலரின் பெயரினை சூட்டி அவர் வளர்த்த மகன் அவர், அதுவும் தாயில்லாமல் வளர்ந்த மகன். அம்மகனே கலைஞரின் பெரும் தீரா துயரத்தின் விதியாவான் என்றது எங்கோ எழுதபட்ட கணக்கு.
இது புனிதமான ரமலான் மாதம், தமிழில் வந்த இஸ்லாமிய பாடல்கள் அடிக்கடி ஒலிக்கும் காலம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா..எனும் பாடல் உலகெல்லாம் ஒலித்துகொண்டிருக்கின்றது
"நானும் ஒன்று நீயும் ஒன்று நபிகள் நாயகம் முன்னிலையில்" மு.க முத்துவின் உருக்கமான குரலில் அது இஸ்லாமிய மார்க்க பெருமையினை பறை சாற்றுகின்றது.
நிச்சயமாக எம்ஜிஆர் முன் அவர் ஒரு நடிகராக தோற்றிருக்கலாம், ஆனால் ஒரு பாடகராக நிச்சயம் ஜொலித்திருப்பார், அவர் பாடிய மற்ற பாடல்கள் அதனைத்தான் சொல்கின்றன,
நெடுநாள் கழித்து தேவா இசையிலும் பாடினார், ஆனால் மாறிவிட்ட சூழல் அதனை பொருட்படுத்தவில்லை
கலைஞர் செய்த மிகசில தவறுகள் அவருக்கு பெரும் சிக்கல்களை உருவாக்கிவிட்டன, அந்த நடிகருக்கு ஒரு அமைச்சர் பதவி கொடுத்திருந்தால் இன்று 50 ஆண்டுகாலம் முதல்வராக இருந்த பெரும் வரலாறு அவருக்கு இருந்திருக்கும்? யார் உடைக்கமுடியும்?
ஆனால் தவறான முடிவு தீரா தலைவலி உருவாக்கியது போல, பாடகராக வந்திருக்கவேண்டிய மகனை நடிகனாக முன்னிறுத்தி அதுவும் எம்ஜிஆருக்கு முன்பாக நிறுத்தி தீரா தலைவலியினை தேடிகொண்டார்.
ஆனால் முகமுத்துவினால் திரைதுறையில் அவர் பெற்ற தோல்விதான், 1990க்கு பின் சின்னதிரை மூலமாக அக்குடும்பம் பெரும் வெற்றிபெற்று பின்னாளில் தமிழக திரைதுறையினையே கைக்குள் வைத்திருந்தது.
அன்று தோற்ற கலைஞர் பின்னாளில் வெற்றிதான் பெற்றார்.
கலைஞர் குடும்பத்திற்கு பெரும் வரமனா நீண்ட ஆயுள், அப்படி முக முத்துவும் 70 வயதினை இந்த குடிக்கு பின்னும் தாண்டுகின்றார்.
அரசியல் அப்பாவியான அவர் விட்ட இடத்திற்குதான் ஸ்டாலின், அழகிரி, கனிமொழி என அடித்துகொள்கின்றார்கள், மனிதர் சினிமா கைவிட்டவுடன் மதுகடைக்குள் புகாமல் அரசியலுக்குள் வந்திருந்தால் அடுத்த முதல்வர் அவர்தான், இல்லை முதல்வராகவும் ஆகியிருக்கலாம். ஆனால் விதி அது அல்ல
காலை செய்திகளை புரட்டினால் கலைஞர் அறிக்கைவிட்டிருந்தார், முக ஸ்டாலின் ஏதோ சொல்லிகொண்டிருந்தார், திரையுலக செய்திகள் வரிந்துகட்டி வரிசையில் நின்றன,
ஏதோ ஒரு பெட்டி செய்தியில் முக முத்து படம் திருமண செய்தியாக வந்தது. வானொலியில் இப்பாடல் ஒலித்தது,
"‘கூன் பிறையை போற்றிடுவோம்
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’
குர் ஆனை ஓதிடுவோம்
மேன்மை மிகு மெக்காவின் திசை நோக்கி பாடிடுவோம்
நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா
பிறர் நலனை விரும்பி நானும் வேண்டவா
யாரும் வருவார் யாரும் தொழுவார்
நாகூர் ஆண்டவன் சன்னிதியில்
நானும் உண்டு நீயும் உண்டு
நபிகள் நாயஹம் முன்னிலையில்’
என்ன அழகான குரல், எவ்வளவு அருமையான சுதிவிலகாத பாடும் திறன், நிச்சயம் அவர் பாடகர்.
திருவாரூர் கோயிலில் முன்னோர்கள் இசைத்த இசையின் பெரும் தொடர்ச்சி அவர், அந்த குரலும், பாடலின் உருக்கமும் அதனைத்தான் சொல்கின்றன
கோட்டையில் பிறந்தாலும் கோலோச்ச விதிவேண்டும் என்பார்கள், அது அவருக்கு வாய்க்கவில்லை
சலங்கை ஒலி படம் பார்த்தபின் பட இறுதியில் ஒரு பரிதாபம் வருமல்லவா?, சிந்து பைரவி படத்தில் கர்நாடக சங்கீதம் வித்த்வான் ஒரு கோப்பை பிராண்டிக்காக தகுதியிழந்த பரிதாபம் வருமல்லவா?
அந்த பரிதாபத்தின் வாழ்க்கை பிம்பம்தான் மு.க முத்து.
No comments:
Post a Comment