சென்னைஓட்டல்கள், #பாஸ்ட்புட் கடைகளுக்கு சப்ளை: சிந்தாதிரிப்பேட்டையில் 200 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி பறிமுதல்
சிந்தாதிரிப்பேட்டையில் ஹோட்டல்கள், பாஸ்ட்புட் கடைகளுக்கு, நட்சத்திர விடுதிகளுக்கு சப்ளை செய்ய வைத்திருந்த 200 கிலோ கெட்டுப்போன மாட்டிறைச்சி, பன்றி இறைச்சியை உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைத்தனர்.
சென்னையில் உள்ள இறைச்சிக் கூடத்தில் ஆடு, மாடுகள் வெட்டப்பட்டு மாநகராட்சி சுகாதாரத்துறை அனுமதியுடன் சென்னையில் விற்பனை செய்யப்படுகிறது. இதுபோன்ற இறைச்சிகளை சென்னையில் உள்ள ஓட்டல்கள், நடசத்திர விடுதிகள், பாஸ்ட்புட் கடைகளில் வாங்கி பயன்படுத்துகின்றனர்.
ஆனால் இதன் விலை அதிகம் என்பதால் சென்னையில் உள்ள சிலர் வியாபாரத்தில் கொள்ளை லாபம் பார்க்க பல நாட்கள் ஆன கெட்டுப்போன இறைச்சியை ஆந்திரா, பெங்களூர், ஒடிசாவிலிருந்து வரவழைத்து குறைந்த விலையில் விற்கும் நபர்களிடமிருந்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.

உதாரணத்துக்கு ஆட்டிறைச்சி முறையாக வெளியில் வாங்கினால் ரூ.600 கிலோ என்று வைத்துக்கொண்டால், இவர்கள் 150 ரூபாய்க்கு தருவார்கள். இது தவிர வெளி மாநிலங்களிலிலிருந்து கன்றுக்குட்டி இறைச்சியை வாங்கி சிறிய துண்டுகளாக ஆட்டிறைச்சி போல் வெட்டி விற்கப்படும் இறைச்சியை குறைந்த விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துகின்றனர்.
இதுபோன்றதொரு கடை சிந்தாதிரிப்பேட்டையில் செயல்படுவதை உணவுப்பாதுகாப்பு அதிகாரிகள் கண்டுபிடித்து இறைச்சிகளை கைப்பற்றி கடைக்கு சீல் வைத்தனர். சிந்தாதிரிப்பேட்டை பாலகிருஷ்ணன் தெருவில் சக்திவேல் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் உணவுப் பாதுகாப்புத் துறையினரும், சென்னை மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளும் ஆய்வு செய்தபோது வெளிமாநிலங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 200 கிலோ மாட்டிறைச்சியும், பன்றி இறைச்சியும் இருப்பதைக் கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர்.
இதையடுத்து உரிமையாளர் சக்திவேல் தப்பி ஓடிவிட்ட நிலையில் அங்கிருந்த பணியாளர் இளையராஜாவிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். இறைச்சிகள் அனைத்தும் பெங்களூரில் இருந்து கொண்டு வரப்பட்டுச் சென்னையில் உள்ள உணவு விடுதிகளுக்கு விற்கப்படுவதாக அவர் தெரிவித்தார். பின்னர் இறைச்சிகளை கைப்பற்றினர். கொடவுனுக்கும் சீல் வைத்தனர். கைப்பற்றப்பட்ட இறைச்சிகளை தரமணி குப்பைக்கிடங்கில் ரசாயனம் ஊற்றி புதைத்தனர்.
இதுபோன்று விற்பனை செய்யும் கடைகள், கிட்டங்கிகளை உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவ்வப்போது ஆய்வு செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். ஆனாலும் சரியான சட்டப்பிரிவு இல்லாத காரணத்தாலும், ஐபிசி பிரிவுகளின் கீழ் இதுபோன்ற விவகாரங்கள் நடவடிக்கைக்கு உட்படுத்தப்படும் சட்டப்பிரிவு இல்லாததால் மிகச்சாதாரணமாக இதுபோன்ற குற்றங்கள் நடக்கிறது.
No comments:
Post a Comment