தென் மாவட்டங்களில் உள்ள, லோக்சபா தொகுதிகளின் வெற்றிக்கு, குறிப்பிட்ட சமூக ஓட்டுகளை மொத்தமாக அள்ளவே, பா.ஜ., மேலிட உத்தரவின்படி, நடிகர் சரத்குமாரின், சமத்துவ மக்கள் கட்சியை, அ.தி.மு.க., கூட்டணியில் சேர்த்து உள்ளனர்.துாத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட, தென் மாவட்டங்களில், சரத்குமார் சார்ந்துள்ள, சமூகத்தின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. அந்த சமூக மக்கள், வட சென்னையிலும், அதிக எண்ணிக்கையில் உள்ளனர்.இதனால், சென்னை, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், சரத்குமாரின் ஆதரவை, தினகரன் தரப்பு கோரியது. அவரும் ஆதரவு தெரிவித்து, பிரசாரத்துக்கு கிளம்ப இருந்தார். அந்த நேரத்தில், சரத்குமாரின் வீட்டில், வருமான வரித்துறை சோதனை நடத்தியது. இதற்கு பின்னணியில், பா.ஜ., இருப்பதாக, சரத்குமார் கருதினார்.
இதனால், பா.ஜ., மீதும், அதனுடன் நெருக்கம் காட்டிய, அ.தி.மு.க., மீதும், சரத்குமார் அதிருப்தியில் இருந்தார். கருணாநிதி மறைவை சாதகமாக்கி, தி.மு.க., பக்கம் சாய, சரத்குமார் திட்டமிட்டார்.இதற்காக, லோக்சபா தேர்தலில் தனக்கு ஒரு, 'சீட்' என்ற நிபந்தனையுடன், மனைவி ராதிகா வாயிலாக, தி.மு.க., தலைவர்களுடன் பேச்சு நடத்தினார். அதை, தி.மு.க., ஏற்கவில்லை. இதனால், அ.தி.மு.க., அணியில் இணைய, சரத் விரும்பினார்.பா.ஜ., - பா.ம.க., - தே.மு.தி.க., - புதிய தமிழகம் - புதிய நீதி கட்சிகளுடன், அ.தி.மு.க., மெகா கூட்டணி அமைத்ததால், சரத்துக்கு, சீட் இல்லை என, தெரிவிக்கப்பட்டது. இதனால், தேர்தலை புறக்கணிக்கும் முடிவில் இருந்தார்.அ.தி.மு.க., கூட்டணியில், பா.ஜ., போட்டியிடும், துாத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, கன்னியாகுமரி ஆகிய, நான்கு தொகுதிகளிலும், சரத் சார்ந்துள்ள நாடார் சமூகத்தின் ஓட்டுகள் கணிசமாக உள்ளன. குறிப்பாக, தி.மு.க.,வின், வி.ஐ.பி., வேட்பாளரான, கனிமொழி போட்டியிடும், துாத்துக்குடி தொகுதியில், அதிக ஓட்டுகள் உள்ளன.இதனால், அந்த சமூக ஓட்டுகளை, மொத்தமாக தங்கள் கூட்டணி கைப்பற்ற, சரத் ஆதரவு தேவை என்ற தகவலை, மத்திய உளவு துறை, டில்லி, பா.ஜ., மேலிடத்திடம் தெரிவித்தது. அதன் அடிப்படையில், தங்கள் பக்கம் சரத்தை இழுக்குமாறு, அ.தி.மு.க.,வை, பா.ஜ., அறிவுறுத்தியது.அதன் தொடர்ச்சியாகவே, துணை முதல்வர் பன்னீர்செல்வம், சரத்குமார் வீட்டிற்கு சென்று, ஆதரவை கோரினார். அப்போது, சட்டசபை தேர்தலில், சரத்குமார் கட்சிக்கு, சீட் ஒதுக்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன.இதையடுத்து, முதல்வர், இ.பி.எஸ்., மற்றும் அமைச்சர்களை சந்தித்து, அ.தி.மு.க., அணிக்கு ஆதரவு தெரிவித்து, பிரசாரத்தில் ஈடுபட போவதாக, சரத்குமார் அறிவித்துள்ளார். 'சரத் நடித்த, நாட்டாமை, சூரியவம்சம் படங்கள், கொங்கு மண்டலத்தில் எடுக்கப்பட்டவை. அதனால், அவரது பிரசாரம், கொங்கு மண்டலத்திலும் எடுபடும்' என, அ.தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.

No comments:
Post a Comment