Saturday, March 30, 2019

பிரசார களத்தில் கவர்ச்சிகள் காலி!

'மச்சான்ஸ்... நம்பிள்கி தமிழ்ல பேச வராது' என்று, பேச்சை துவங்கினாலும், நடிகை நமீதா வந்தால், ஆர்ப்பரிக்க, பெரும் கூட்டம் கூடும். கடந்த சட்டசபை தேர்தலில், திருச்சியில், ஜெயலலிதா முன்னிலையில், அ.தி.மு.க.,வில் சேர்ந்து, நமீதா ஆச்சர்யப்படுத்தினார்.கட்சி குறித்தோ, கொள்கை குறித்தோ தெரியாவிட்டாலும், நடிகர் - நடிகையர் பலர், ஒவ்வொரு தேர்தலின் போதும், களத்தில் குதிக்கின்றனர். 

மாயம்


இதற்கு காரணம், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, கருணாநிதி, என்.டி.ராமராவ், வி.என்.ஜானகி போன்றோர், திரைப்படத் துறையில் இருந்து முதல்வராக மாறியவர்கள் என்பதே.கடந்த முறை களம் கண்ட நமீதா, லோக்சபா தேர்தல் களத்தில் ஆளையே காணோம். இதுபோல், தமிழகத்தில் இந்த முறை மாயமான நடிகர் -நடிகையர் பட்டியல் நீள்கிறது.தி.மு.க.,வுக்கு பிரசாரம் செய்ய, முன்னர் ஒரு பெரும் நடிகர் படையே இருந்தது. தற்போது, ஸ்டாலின் மகன் உதயநிதி தான், பிரசாரம் செய்ய களத்தில் குதித்திருக்கிற, 'ஸ்டார்' நடிகர். ஆனால் அவர், நடிகர் பட்டியலில் வர மாட்டார்.
Advertisement
 பிரசார களத்தில் கவர்ச்சிகள் காலி!

தயக்கம்


நடிகர் நெப்போலியனும்,நடிகை குஷ்புவும் ஒரு காலத்தில், தி.மு.க.,வுக்காக தேர்தல் பிரசாரத்தில் கலக்கினர். நெப்போலியன் பாட்டு பாடியவாறே பிரசாரம் செய்வார். குஷ்பு, பேசினாலும், பேசாவிட்டாலும் கூட்டம் கூடும். நெப்போலியன், பா.ஜ.,வுக்கு சென்று, மாயமாகி விட்டார்.குஷ்பு தற்போது, காங்கிரசில் இருக்கிறார். இந்த முறை சீட்டும் கிடைக்கவில்லை. ஆனால், எப்படியும் களத்திற்கு வருவார் என்று நம்பலாம். சிரிப்பு நடிகர் குமரிமுத்து மறைந்து விட்டார். வாகை சந்திரசேகர் தற்போது, எம்.எல்.ஏ., என்பதால், நடிகர் பட்டியலில் வரமாட்டார்.தற்போதெல்லாம், தி.மு.க.,வுக்குப் பிரசாரம் செய்ய நடிகர் - நடிகையர் வரத் தயங்குவதென்னவோ உண்மை தான். தி.மு.க.,வுக்குப் பிரசாரம் செய்தபின், நடிப்புலகையே தொலைத்து விட்டார் நடிகர் வடிவேலு. ராதாரவி, பொதுக்கூட்ட மேடைகளில் அனாயசமாகப் பேசக்கூடியவர். ஆனால், இந்த முறை, நயன்தாரா குறித்த சர்ச்சை பேச்சால், அவரது பிரசாரத்திற்கு தடை ஏற்பட்டு விட்டது.தி.மு.க.,வில் தான், நடிகர் படை, 'டல்'லடிக்கிறது என்றால், அ.தி.மு.க.,விலும் அப்படித்தான் இருக்கிறது. நடிகர் ராமராஜன் களத்திலேயே இல்லை. ஆனந்தராஜும், விந்தியாவும் அ.தி.மு.க.,வுக்கு முழுக்கு போட்டுவிட்டனர். சிம்ரன், குயிலி, வெண்ணிற ஆடை நிர்மலா, ஆர்த்தி, குண்டு கல்யாணம் என்று, அ.தி.மு.க., பிரசாரகர்கள் நிறைய பேர் இருந்தாலும், இவர்கள் எல்லாம், அவர்களாகவா களமிறங்கப் போகின்றனர்... துட்டே துணை!

மல்லுக்கட்டு


சமத்துவ மக்கள் கட்சி தலைவர், சரத்குமாரின் மனைவியும், நடிகையுமான ராதிகா, தி.மு.க.,வுக்காகவும், அ.தி.மு.க.,வுக்காகவும், ச.ம.க.,வுக்காகவும் பிரசாரம் செய்திருக்கிறார். இப்போது, அவர் களமிறங்குவதில்லை. ராதிகா வந்தால், 'சீரியல்' சென்டிமென்ட் ரசிகர்கள் கூட்டம் கூடும் என்றாலும், அவருக்கு அதற்கெல்லாம் நேரம் இல்லை.கமலின், மக்கள் நீதி மையத்தில் தான், நடிகர் - நடிகையர் முகங்கள் அதிகமாகத் தென்படுகின்றன. ஆனால், அவர்கள் தொடர் பிரசாரங்களுக்கு செல்வரா என்று தெரியவில்லை. இப்போதைக்கு ஸ்ரீபிரியாவும், கோவை சரளாவும் மல்லுக்கட்டுகின்றனர்.லோக்சபா தேர்தல் களத்தில், இந்த முறை இறங்கக்கூடிய சினிமா பிரபலங்கள் குறைவு தான். காரணம், இவர்களுக்குக் கோடிக்கணக்கில் கொட்டிக் கொடுக்க எந்தக்கட்சிகளும் தயாராக இல்லை. கூட்டம் கூடினால் மட்டும் போதுமா; ஓட்டுகளாக மாறினால் தானே கட்சிகளுக்குப் பலம்! பதுங்கினரா, ஒதுங்கினரா!சட்டசபை தேர்தலில் களத்தில் இறங்கப்போவதாக கூறியிருக்கிற நடிகர் ரஜினிகாந்த், லோக்சபா தேர்தலில் ஒதுங்கியே இருக்கிறார். விஜய், விஷால் ஆகியோரின் சத்தத்தையும் காணோம். பட்டாசாய் வெடித்துக்கொண்டிருந்த பலரும், தேர்தல் களத்தில் பதுங்கிக்கொண்டிருக்கின்றனரா, ஒதுங்கிவிட்டனரா என்றே தெரியவில்லை.

கண்டுகொள்ளாதகட்சிகள்
அ.தி.மு.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகளில், நடிகர் - நடிகையரின் பிரசாரத்திற்கு முக்கியத்துவம் குறைக்கப்பட்டுள்ளது.அ.தி.மு.க., - தி.மு.க., - காங்., - பா.ஜ., உள்ளிட்ட பிரதான கட்சிகளில், நடிகர்கள் சிலர், முக்கிய பொறுப்புகளிலும், உறுப்பினர்களாகவும் உள்ளனர். கட்சி நிகழ்ச்சிகள், பொதுக் கூட்டங்களில், இவர்கள் பேசி வருகின்றனர்.தேர்தல் காலங்களில், அரசியல் கட்சிகளில் சேர்வதை, நடிகர்கள் பலரும் வழக்கமாக வைத்துள்ளனர். குறிப்பாக, பட வாய்ப்புகள் இழந்த நடிகர்கள், அதிகளவில் சேர்கின்றனர். அரசியல் கட்சிகளும், 'காமெடி' நடிகர்களை அழைத்து, கட்சியில் சேர்ப்பதை வழக்கமாக வைத்துள்ளனர். இவர்களின் பிரசாரத்தை, மக்கள் விரும்புவதும், இதற்கு காரணம்.ஜெயலலிதா, கருணாநிதி இருந்தபோது, சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு, கட்சியிலும், பிரசாரத்திலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. ஒவ்வொரு பிரசார கூட்டத்திலும் பேசுவதற்கு, 10 ஆயிரம் முதல், 1 லட்சம் ரூபாய் வரை, அவர்களுக்கு வழங்கப்படும். ஓட்டல் அறை, பயண செலவு உள்ளிட்ட சலுகைகளும் வழங்கப்படும்.கருணாநிதி, ஜெயலலிதா மறைவிற்கு பின், நடிகர்கள் பிரசாரத்தை, அ.தி.மு.க., - தி.மு.க., தலைவர்கள் விரும்பவில்லை என தெரிகிறது. இதன் காரணமாகவே, லோக்சபா, சட்டசபை இடைத்தேர்தல் பிரசார களத்தில், நடிகர்கள் தலையை காணவில்லை.இரு கட்சிகளிலும், ஏற்கனவே உள்ள நடிகர் - நடிகையர் சிலர், தங்களுக்கு, 'சீட்' கிடைக்கும் என எதிர்பார்த்து, ஏமாந்துள்ளனர். இதனால், அவர்களும், தேர்தல் பிரசாரத்தில் ஆர்வம் காட்டவில்லை என, கூறப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...