Wednesday, March 27, 2019

உளுந்து வடையும், அ.தி.மு.க., கூட்டணியும்! அ.தி.மு.க., பேச்சாளர் சிங்கமுத்து சிறப்பு பேட்டி.

லோக்சபா தேர்தல் களைகட்டியுள்ளது. உங்கள் சத்தத்தை இன்னும் காணோமே?
மார்ச், 31 முதல், ஏப்ரல், 16 வரை, 16 லோக்சபா தொகுதிகளில், பிரசாரம் செய்ய உள்ளேன். 

ஜெ., இருந்தபோது, அ.தி.மு.க.,வில், உங்களுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம், குறைந்துள்ளதா?
ஜெயலலிதா இருந்தபோது இருந்தவர்களே, இப்போதும் அமைச்சர்களாக உள்ளனர்.அப்படித் தான் நானும், எனக்குரிய முக்கியத்துவத்துடன் தான் இருக்கிறேன். ஓ.பி.எஸ். - இ.பி.எஸ்., அமைச்சர்கள் என, அனைவரும், எனக்கு முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

உளுந்து வடையும், அ.தி.மு.க., கூட்டணியும்! அ.தி.மு.க., பேச்சாளர் சிங்கமுத்து சிறப்பு பேட்டி

ஜெ., ஆட்சி - இ.பி.எஸ்., ஆட்சி ஒப்பிடுக?
எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் கலைத்துறையில் இருந்து வந்து, மக்கள் செல்வாக்கை பெற்றனர்; சொல்வாக்கை காப்பாற்றினர். அதையே தான், இ.பி.எஸ்., பின்பற்றி வருகிறார். ஜெயலலிதா, பெண் என்பதால், அனைவரும் எளிதாக சந்திக்க முடியாது. ஆனால், இ.பி.எஸ்.,யார் சென்றாலும், உடனடியாக சந்திக்கிறார்; தேவையானதை செய்கிறார். குறையே சொல்ல முடியாத முதல்வர்.

அ.தி.மு.க.,வில், கலைக் குழுக்களுக்கு, முக்கியத்துவம் அளிக்கப்படுகிறதா?
ஜெ., இருந்த போதே, தேர்தல் பிரசாரத்திற்காக, கலைக் குழுக்கள் தேர்வு செய்யப்பட்டன. இப்போதும், அதே முக்கியத்துவம் தொடர்கிறது. மக்களும் ஆர்வமுடன் பார்க்க வருகின்றனர்.

அ.தி.மு.க., கூட்டணி எப்படி உள்ளது?
வலுவான கூட்டணியாக உள்ளது.

ஜெ.,க்கு மணிமண்டபம் கட்ட, எதிர்ப்பு தெரிவித்த, பா.ம.க.,வுடன் கூட்டணி அமைத்துள்ளீர்களே?
வைகோ, தி.மு.க.,வை திட்டாதா. எதிர்க்கட்சியா இருக்கும் போது, விமர்சனம் செய்வது இயல்பு. கூட்டணிக்கு பிறகு சரியாயிடும். 'ஜெ.,க்கு மணிமண்டபம் கட்டக் கூடாது' என, இப்போது ராமதாஸ் சொல்கிறாரா... உளுந்த வடை என்றால், மாவுடன், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மிளகு போன்ற அனைத்தும் போட்டால் தான், சுவையாக இருக்கும். வெறும் மாவை போட்டு, வடை சுட முடியமா? அதேபோல், அ.தி.மு.க., சுவாரஸ்யமான, சுவையான, வெற்றிக் கூட்டணியை உருவாக்கி உள்ளது. இங்கு தான், பா.ஜ.,வை மதவாத கட்சி என்கின்றனர். மோடியை பாராட்டாத வெளிநாடுகள் இல்லை. அவர், ஹிந்து மதம், இந்தியா காப்பாற்றப்பட வேண்டும் என, நினைக்கிறார்.

தி.மு.க., கூட்டணிக்கு வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
தி.மு.க., - காங்., கூட்டணி, இலங்கை தமிழர்கள் கொல்லப்பட காரணமாக இருந்தது. இதை நினைவுப்படுத்த போகிறோம். யாரும், அவர்களுக்கு ஓட்டுப் போட மாட்டார்கள்.

கருணாநிதி, ஜெ., மறைவுக்கு பின் நடக்கும் தேர்தலை, எப்படி பார்க்கிறீர்கள்?
ஸ்டாலின், முதன்முதலாக தலைவராகி, தேர்தலை சந்திக்கிறார். ஜெ., இல்லாத, அ.தி.மு.க.,விற்கு, இது சோதனை காலம். இதில், அ.தி.மு.க., வெற்றி பெறும் என்ற, நம்பிக்கை உள்ளது.

நடிகர் கமல் கட்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அரசியல் என்ன விளையாட்டா? நாட்டுப்பற்று இல்லாதவர்; அதனால், இவரின் கருத்துக்களை ஏற்கும் நிலையில், மக்கள் இல்லை. வயதாகிப்போச்சு... தேடி வருகிறவர் எவரும் இல்லை; அவரே படம் எடுக்க வேண்டி உள்ளது. அவருக்கு, இளமை போய் விட்டது. கடைசி காலத்தில், சும்மா இருக்க முடியாமல், அரசியலுக்கு வந்துள்ளார். அரசியலும் சினிமா போல என்று எண்ணுகிறார்; 'அட்டர் பிளாப்' ஆகி விடுவார்.

கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவுக்கு பின், சினிமா பிரபலங்களுக்கு, அரசியலில் வரவேற்பு இல்லையே?
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சினிமாவில் கொடிகட்டி, பெயர், புகழ் பெற்றனர். சம்பாதித்த காசை அள்ளி கொடுத்தனர். அப்போது, அவர்களுக்கு முதல்வராகப் போகிறோம் என்பது தெரியாது. மக்கள் அவர்களை நம்பினர்; முதல்வராக்கினர். இப்போது, நேரா முதல்வராகி விடலாம் என்று சிலர் நினைக்கின்றனர். காலம் போன காலத்தில், முதல்வராக இறக்க வேண்டும் என நினைத்து, அரசியலுக்கு வரக்கூடாது.

மோடி கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லையே?
கறுப்பு பணத்தை மீட்டால், 15 லட்சம் ரூபாய் கொடுக்கிறேன் என கூறினார். கறுப்பு பணத்தை மீட்பதில் தான் சிக்கல்; பணம் வந்தால், கொடுத்து விடுவார். 

கட்சி கூட்டங்களிலும், பிரசார கூட்டங்களிலும் பேச்சாளர்களுக்காக கூட்டம் வருகிறதா? குறைந்து விட்டனரா?
'மக்களே சிந்தித்து பாருங்கள்' என, ஆரம்பித்தால், கூட்டத்துக்கு வரும் மக்களுக்கு மண்டை காய்ஞ்சிடும். நானெல்லாம், சிரிக்க சிரிக்க பேசுவேன்; சிந்திக்கவும் வைப்பேன். 'மக்கள் கைதட்டி ரசிப்பார்கள்; கருத்தையும் புரிந்து கொள்வார்கள். சீரியசான பேச்சாளர்களின் கூட்டத்தில், மக்களை, 'ரிலாக்ஸ்' செய்வதற்காக, கலைக்குழுவினரின் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதனால் தான் கூட்டம் வருகிறது.

ஜெயலலிதா, கருணாநிதியிடம், உங்களுக்கு பிடித்த விஷயம் என்ன?
சில மனிதர்கள், அதிசயமாக பிறப்பர். அப்படிப்பட்ட அதிசயங்கள் தான், எம்.ஜி.ஆர்., மற்றும் ஜெயலலிதா. அவர்களுக்கு தெய்வ கடாட்சம் இருந்தது. ஜெயலலிதாவிடம் பிடித்தது, அவரது அன்பு, அறிவு, துணிவு, வள்ளல் குணம். ஜெ.,வை, மூன்று முறை சந்தித்தேன். முதல் முறை பயந்தேன்; இரண்டாவது முறை வியந்தேன்; மூன்றாவது முறை, அவர் பேச்சை கேட்டு லயித்தேன். அவரை போன்ற தலைமையை, இனி பார்க்க முடியாது. கருணாநிதி, தப்பை சரியாக செய்து, மக்களை ஏமாற்றி விட்டார். அதனால், அவருக்கு நல்ல பெயர் இல்லை.

அ.ம.மு.க., குறித்து, உங்கள் கருத்து என்ன?
கட்சி,ஆட்சி,அதிகாரம், தன் குடும்பத்தினரிடம் வர வேண்டும் என, தினகரன் நினைக்கிறார். சர்வாதிகாரி போல் செயல்படுவாரோ என, தொண்டர்கள் பயப்படுகின்றனர். எனவே தான், தொண்டர்கள் அ.தி.மு.க.,விலேயே இருந்து விட்டனர்.

உளுந்த வடை என்றால், மாவுடன், பச்சை மிளகாய், கறிவேப்பில்லை, மிளகு போன்ற அனைத்தும் போட்டால் தான், சுவையாக இருக்கும். வெறும் மாவை போட்டு, வடை சுட முடியமா? அதேபோல், அ.தி.மு.க., சுவாரஸ்யமான, சுவையான, வெற்றிக் கூட்டணியை உருவாக்கி உள்ளது.
-சிங்கமுத்து, நடிகர், தலைமை கழக பேச்சாளர், அ.தி.மு.க.,

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...