Wednesday, March 27, 2019

நவீன சாணக்கியனின் அரசியல் தந்திரங்கள் அத்வானிக்கு கட்டாய ஓய்வு ஏன்?

வரும் லோக்சபா தேர்தலுக்கான, பா.ஜ.,வின், முதல் வேட்பாளர் பட்டியல் வெளியாகி உள்ளது. இதில், அனைவரையும் ஆச்சரியப்படுத்திய தொகுதி, குஜராத்தின் காந்தி நகர். கட்சியின் மிக மூத்த தலைவரான, அத்வானியின் இந்தத் தொகுதி யில், பா.ஜ., தலைவர், அமித் ஷா போட்டியிட உள்ளார்.இதன் மூலம், தான் ஒரு நவீன சாணக்கியன் என்பதை, அமித் ஷா மீண்டும் நிரூபித்து உள்ளார்.
 நவீன சாணக்கியன், அரசியல், தந்திரங்கள்

குஜராத்தைச் சேர்ந்த அமித் ஷா, 54, அந்த மாநில, பா.ஜ.,வில் முக்கிய பொறுப்புகளில் இருந்துள்ளார். கடந்த, 2002ல் குஜராத் சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள, 182 இடங்களில், பா.ஜ., 126ல் வென்றது. அதன்பின், 2014 வரை, குஜராத்தின் அசைக்க முடியாத முதல்வராக, நரேந்திர மோடி விளங்கினார். அந்த தேர்தலில், அமித் ஷா, 1.58 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்று சாதனை படைத்தார்; மோடி கூட இந்த அளவுக்கு அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றது இல்லை.


ஒவ்வொரு தேர்தலிலும், தனது ஓட்டு வித்தியாசத்தை, அமித் ஷா அதிகரித்து வந்தார். கடந்த, 2007ல், 2.35 லட்சம் ஓட்டுகள் வித்தியாசத்தில் வென்றார்.நரேந்திர மோடியின் நம்பிக்கைக்குரிய தளபதியாக, கட்சியில் பல முக்கியப் பொறுப்புகளை ஏற்று, அதில் திறம்பட செயல்பட்டார். கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், உ.பி., மாநிலப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டார்.


மொத்தமுள்ள, 80 தொகுதிகளில், பா.ஜ., 71லும், கூட்டணிக் கட்சியான அப்னா தளம், இரண்டு தொகுதியிலும் வென்றது. இது மிகப் பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதுவே, அவரை, கட்சித் தலைவராக உயர்த்தியது.


கடந்த, லோக்சபா தேர்தலுக்குப் பிறகு, நாடு முழுவதும், 19 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், பா.ஜ., அல்லது அதன் கூட்டணி அரசு அமைந்ததற்கு, அமித் ஷாவின், சரியான திட்டமிடல்களே காரணமாகும்.


கடந்தாண்டு, இறுதியில், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கரில் தோல்வியடைந்தாலும், தற்போது, 16 மாநிலங்களில், பா.ஜ., அரசு உள்ளது.அவரை பிடிக்கிறதோ, இல்லையோ, அவரை ஒதுக்க முடியாது என்று கூறப்படும் நிலைக்கு, அமித் ஷா உயர்ந்துள்ளார். கடந்தாண்டு, ராஜ்யசபா, எம்.பி.,யாக அமித் ஷா நியமிக்கப்பட்ட போது, கட்சி, எம்.பி.,க்களுக்கு, மோடி எச்சரிக்கை விடுத்திருந்தார்.


கட்டுக்கோப்பானவர், கண்டிப்பானவர், கறாரானவர் என்று கட்சியினராலும், மாற்றுக் கட்சியினராலும் அறியப்பட்டவர், அமித் ஷா. அவரை எதிர்த்தோ, மறுத்தோ, கட்சியில் எவரும் கருத்துக் கூற முடியாது. சர்வாதிகாரமாக நடந்து கொள்வதாக, பல விமர்சனங்கள் வந்தாலும், 'வெற்றி' என்ற மந்திரத்தை மட்டுமே வைத்து செயல்படுகிறார். இதுதான், மோடியின் மந்திரமும்!


கட்சியின் மிகவும் மூத்த தலைவர், நிறுவனத் தலைவர்களில் ஒருவரான, அத்வானி, இந்த முறையும்,காந்திநகர் தொகுதியில் இருந்து போட்டியிடுவார் என, பரவலாக எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், யாரும் எதிர்பார்க்காத நிலையில், அந்தத் தொகுதியில் இருந்து, அமித் ஷா போட்டியிடப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் தேர்தலில் வென்று, பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைத்தால், அமித் ஷாவுக்கு முக்கியமான பொறுப்பு வழங்கப்படும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

துணை பிரதமர் அல்லது உள்துறை அமைச்சர் என, முக்கியப் பதவி கிடைக்கலாம். அதைவிட, அவர் லோக்சபாவில் இருந்தாலே, கட்சியினர் இடையே, ஒரு கட்டுக்கோப்பு வரும் என்ற நினைப்பில், அமித் ஷாவை, லோக்சபா தேர்தலில், மோடி நிறுத்தியிருக்கலாம் என, கூறப்படுகிறது.மக்களை ஈர்க்கும் அளவுக்கு, அவர் பெரிய பேச்சாளர் கிடையாது, கவர்ந்திழுக்கும் தலைவராக அவர் இல்லை. ஆனால், மிகச் சிறந்த நிர்வாகத் திறமை அவருக்கு உள்ளது.


ஹிந்தி பேசும் மாநிலங் களுக்கான கட்சியாக இருந்ததை, வட கிழக்கு மாநிலங்கள், தென்
மாநிலங்கள் என, நாடு முழுவதும் வளர்த்தவர்.ஒரு காலத்தில், அத்வானிக்காக, காந்தி நகர் தொகுதியில் கட்சி பணியாற்றியவர், தற்போது, அதே தொகுதியில் போட்டியிட உள்ளார். இதன் மூலம், தான் ஒரு நவீன அரசியல் சாணக்கியன் என்பதை, அமித் ஷா மீண்டும் நிரூபித்துள்ளார்.

அத்வானிக்கு கட்டாய ஓய்வு ?

நாட்டில் வேறு எந்தக் கட்சி யிலும் நடக்காத ஒன்று, பா.ஜ.,வில் நடந்துள்ளது. கட்சியின் நிறுவனர்களில் ஒருவரான, அத்வானிக்கு, தேர்தலில் போட்டியிட வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளது.
அவரின், குஜராத்தின் காந்திநகர் தொகுதியில், கட்சித் தலைவர், அமித் ஷா போட்டியிட உள்ளார். இதன் மூலம், 91 வயதாகும்,அத்வானிக்கு கட்டாய ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.


கடந்த, 1991 முதல், இந்தத் தொகுதியில், அத்வானி வென்று உள்ளார். கடந்த, 1996ல், வாஜ்பாய் இங்கு வென்றார். மிக நீண்ட அரசியல் அனுபவம் உள்ள அத்வானி, 1980ல் வாஜ்பாய் உள்ளிட்டோருடன் இணைந்து உருவாக்கியது தான், பா.ஜ.,தற்போதைய தேர்தலில் போட்டி யிட அவர் விருப்பம் தெரிவித் திருந்த தாகக் கூறப்படுகிறது. அதே நேரத்தில், தேர்தலில் போட்டியிட அவர் விரும்பவில்லை என்றும், செய்திகள் வருகின்றன.


இந்தத் தேர்தலில், தனக்கு பதிலாக மகள், பிரதிபாவை நிறுத்த வேண்டும் என, அத்வானி கேட்ட தாகவும், அது நிராகரிக்கப்பட்டதாகவும், செய்திகள் கூறுகின்றன.ஆனால், இதில் எது உண்மை என்பது தெரியவில்லை.தற்போது, பிரதமர் மோடி மற்றும் கட்சி தலைவர், அமித் ஷாவும் இணைந்து செயல்படுவது போல், 1980களில் துவங்கி, பல ஆண்டுகளுக்கு, அத்வானியும், வாஜ்பாயும் செயல்பட்டனர்.


ஜன சங்கத்தில் இருந்த இவர்களுடைய முயற்சியால் தான், பா.ஜ., அரசியல் கட்சியாக மாறியது. கட்சியை வலுப்படுத்த, இருவரும், பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டனர்.ரத யாத்திரைகள் மூலம், கட்சியை பிரபலப் படுத்தியவர், அத்வானி. கட்சியில், வாஜ்பாய் மிதவாத கொள்கையுடன் செயல்பட்டார்; அத்வானி அதிரடி அரசியலில் ஈடுபட்டார்.


உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்ட வேண்டும் என்பதற்காக போராட்டங்களை நடத்தியவர், அத்வானி. அந்தப் போராட்டங்கள் தீவிரம்அடைந்ததால், 1992ல், பாபர் மசூதி இடிக்கப்பட்டது.நாட்டின் துணைப் பிரதமராக இருந்த அவர், 2009ல், பிரதமர் வேட்பாளராக தன்னை அறிவித்துக் கொண்டார்.


கடந்த, 2014ல் நடந்த தேர்தலிலும், தன்னையே பிரதமர் வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று, கட்சியில் வலியுறுத்தினார்.ஆனால், மோடியின் பெயர் அறிவிக்கப்பட்ட போது, அதற்கு அவர் எதிர்ப்பு தெரிவித்தார்.கட்சியின் பொறுப்புகளில் இருந்து விலகுவதாக அறிவித்தார்; பின், சமாதானப்படுத்தப்பட்டார்.


பிரதமர் மோடி தலைமையில், பா.ஜ., அரசு அமைந்த பின், அத்வானி ஓரங்கட்டப்பட்டார். கட்சியின் ஆலோசனை வழங்கும் வழிகாட்டும் குழுவில் மட்டும், அத்வானி, முரளி மனோகர் ஜோஷி போன்ற சீனியர்கள் இடம் பிடித்தனர். ஆனால், தற்போது, அவருக்கு கட்சி, வெளியே செல்லும் வழியைக் காட்டி உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...