Saturday, July 27, 2019

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் எதிரொலி- சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்.

கர்நாடகாவில் ஆட்சி மாற்றம் எதிரொலி- சசிகலா முன்கூட்டியே விடுதலை ஆவதில் சிக்கல்
சசிகலா

















சொத்து குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள சசிகலா தற்போது பெங்களூர் பரப்பன அக்ரகார சிறையில் தண்டனை அனுபவித்து வருகிறார்.

அவர் சிறைக்கு சென்ற 6 மாதத்துக்குள் சலுகைகள் பெற அதிகாரிகளுக்கு பணம் கொடுத்ததாகவும், கைதிகள் உடை அணியாமல் சாதாரண உடை அணிந்ததாகவும் சிறையில் இருந்து வெளியில் சென்றதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சசிகலா சிறையில் நன்னடத்தை அடிப்படையில் தண்டனை காலத்துக்கு முன் கூட்டியே விடுதலை செய்யப்படுவார் என்று தகவல்கள் வெளியானது. பொதுவாக சிறை கைதிகள் நன்னடத்தை அடிப்படையில் விடுதலை செய்யப்பட வேண்டுமானால் அந்தந்த மாநில உள்துறைதான் முடிவு எடுக்க வேண்டும்.

நன்னடத்தை விதி எவை எவை என்பதை மாநில அரசுகளின் உள்துறைதான் முடிவு செய்யும். இந்த விதிமுறைகள் மாநிலத்துக்கு மாநிலம் மாறுபடும். கர்நாடக மாநிலத்தை பொறுத்தவரை சிறைத்துறை அதிகாரிகளின் பரிந்துரையை ஏற்று அந்த மாநில உள்துறை கைதிகளை முன்கூட்டியே விடுவிப்பது பற்றி முடிவு எடுக்கும்.

பெரும்பாலான மாநிலங்களில் ஒரு கைதி தனது தண்டனை காலத்தில் 75 சதவீத நாட்களை சிறையில் கழித்து இருந்தால்தான் அவரை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியும். அந்த அடிப்படையில் பார்த்தால் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் வரை விடுதலை ஆவதற்கு வாய்ப்பே இல்லை.

மேலும் நன்னடத்தை விதியின் கீழ் 25 சதவீத நாட்களை கர்நாடக மாநில உள்துறை தள்ளுபடி செய்யுமா? என்பதில் கேள்விக்குறி உள்ளது. இந்த நிலையில் சசிகலாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை தவிர அபராதமும் விதிக்கப்பட்டது.
அந்த அபராத தொகையை சசிகலா இன்னமும் செலுத்தவில்லை என்று கூறப்படுகிறது. அபராதம் செலுத்தாத பட்சத்தில் மேலும் ஒரு ஆண்டு தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று சுப்ரீம்கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால் சசிகலாவின் தண்டனை காலம் அதிகரிக்கவே வாய்ப்பு உள்ளது.

எடியூரப்பா

இந்த நிலையில் கர்நாடகா மாநிலத்தில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்து எடியூரப்பா ஆட்சி வந்துள்ளது. சசிகலாவுக்கும், பாரதிய ஜனதாவுக்கும் ஏற்கனவே மோதல் நிலவுகிறது. எனவே சசிகலாவை பாரதிய ஜனதாவின் உள்துறை முன்கூட்டியே விடுதலை செய்வதை ஏற்குமா? என்பதில் கேள்விக்குறி எழுந்துள்ளது.

பொதுவாக ஒரு கைதி தனது தண்டனை காலத்தில் எந்த தவறும் செய்யாமல் ஒழுக்கமாக நடந்து கொண்டால் மட்டுமே அவரை முன் கூட்டியே விடுதலை செய்ய அதிகாரிகளால் பரிந்துரை செய்ய முடியும். அதுமட்டுமின்றி ஆட்சியாளர்களும் கேட்டுக் கொண்டால்தான் அந்த பரிந்துரை செய்ய அதிகாரிகள் முன் வருவார்கள் என்பது எழுதப்படாத சட்டமாக உள்ளது.

எனவே சசிகலா முன் கூட்டியே விடுதலை ஆகும் வி‌ஷயத்தில் கர்நாடக மாநில அரசு பா.ஜனதா அரசு ஆர்வம் காட்டுமா? என்பதில் சந்தேகம் எழுந்துள்ளது. ஆகையால் சசிகலா முன்கூட்டியே விடுதலையாக வாய்ப்பு இல்லை என்று பெங்களூர் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

சசிகலா தண்டனை அனுபவித்து வரும் சிறையில் பல்வேறு சலுகைகளை அனுபவித்து வருவதாக இடை இடையே குற்றச்சாட்டுகள் எழுகின்றன. எனவே அவர் விடுதலையானால் அந்த விடுதலையை எதிர்த்து வழக்கு தொடரவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

அந்த வழக்கில் தீர்ப்பு சாதகமாக இல்லாவிட்டால் சசிகலா மீண்டும் சிறைக்கு செல்ல வேண்டி இருக்கும். எனவே கர்நாடக மாநில அரசின் உள்துறையின் கையில்தான் சசிகலாவின் விடுதலை விவகாரம் இருக்கிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...