SRM பல்கலைக்கழக கல்லூரி மாணவர்கள் தொடர்ச்சியாக தற்கொலை செய்து வருவது குறித்து, விசாரணை செய்ய சிபிசிஐடிக்கு காவல்துறை தலைமை ஆணையர் திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.
சென்னைக்கு அருகே காஞ்சிபுரம் மாவட்டம், காட்டங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழக கல்லூரியில் விடுதியில் தங்கிப் படித்து வந்த மாணவ மாணவிகள் அடுத்தடுத்து தற்கொலைகள் செய்து வருவது தமிழகத்தில் அதிர்வலையை உண்டாக்கி வருகிறது. கடந்த மாதம் திருவள்ளூரைச் சேர்ந்த அனுப்பிரியா என்ற மாணவி, கடந்த மே 26ஆம் தேதி கல்லூரியின் 10ஆவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்தநாள் ஜார்கண்டைச் சேர்ந்த அனித் செளத்ரி என்ற மாணவரும் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டார். இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி கன்னியாகுமரியைச் சேர்ந்த மாணவர் கல்லூரி மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவங்கள் தொடர்பாக மறைமலைநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த பல்கலைகழகம், திமுக கூட்டணியில் திமுக சார்பில் நின்று, பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பச்சமுத்து என்னும் பாரிவேந்தருக்கு சொந்தமானது என்பதால் இந்த விவகாரம் மறைக்கப்படுகிறது என சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் உண்டாகின. இதுகுறித்து தீவிர விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் கோரிக்கைகள் வைக்கப்பட்டன.
இந்த நிலையில் தான், மாணவர்களின் மரணம் குறித்த வழக்கினை சிபிசிஐடிக்கு மாற்றி, தமிழக காவல்துறை தலைமை ஆணையர் ஜே.கே.திரிபாதி உத்தரவிட்டுள்ளார். இதனால் இந்த விவகாரம் இனி சூடு பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
No comments:
Post a Comment