Friday, July 26, 2019

கர்நாடகா முதல்வராக, நான்காவது முறையாக பதவியேற்றுள்ள எடியூரப்பா.

நான்காவது முறையாக, கர்நாடக முதல்வராக, எடியூரப்பா, 76, நேற்று பதவியேற்றார். அமைச்சர்கள் யாரும் பதவியேற்கவில்லை. 'ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும்' என, எடியூரப்பாவுக்கு, மாநில கவர்னர் வஜுபாய் வாலா உத்தரவிட்டு உள்ளார். ''வரும், 29ல், பெரும்பான்மையை நிரூபிப்பேன்,'' என, எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகாவில், கடந்த ஆண்டு, மே மாதம், சட்டசபை தேர்தல் நடந்தது. மொத்தம் உள்ள, 224 தொகுதிகளில், பா.ஜ., 105 இடங்களில் வென்று, தனிப்பெரும் கட்சியானது. கவிழ்ந்தது இதையடுத்து, பா.ஜ., சார்பில், எடியூரப்பா முதல்வராக பதவியேற்றார். ஆனால், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாததால், மூன்றே நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.



இதன் பின், குமாரசாமி தலைமையில், மதச்சார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணி அமைத்து, சுயேச்சைகள் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. மாநிலத்தில், 14 மாதங்களாக நடந்து வந்த குமாரசாமி ஆட்சிக்கு, இம்மாத துவக்கத்தில் சிக்கல் ஏற்பட்டது.காங்., மற்றும் ம.ஜ.த., கட்சிகளைச் சேர்ந்த, 15 எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர். இரண்டு சுயேச்சை, எம்.எல்.ஏ.,க்களும், அரசுக்கு அளித்து வந்த ஆதரவை, வாபஸ் பெற்றனர்.

ஓட்டெடுப்பு


இதையடுத்து, சட்டசபையில், 23ம் தேதி நடந்த நம்பிக்கை ஓட்டெடுப்பில், குமாரசாமி அரசு தோல்வியடைந்தது. முதல்வர் பதவியை ராஜினாமா செய்த குமாரசாமியை, அடுத்த ஆட்சி அமையும் வரை, காபந்து முதல்வராக நீடிக்க, கவர்னர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டார். கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததையடுத்து, பா.ஜ., சார்பில் ஆட்சி அமைக்க, முன்னாள் முதல்வர் எடியூரப்பா முயற்சி செய்தார். 

ஆனால், பா.ஜ., மேலிடத்திலிருந்து, ஆட்சி அமைப்பது பற்றி, எந்த உத்தரவும் வராததால், எடியூரப்பா அமைதியாக இருந்தார்.இதற்கிடையில், 'ராஜினாமா செய்த, 15 எம்.எல்.ஏ.,க்களை, தகுதி நீக்கம் செய்ய வேண்டும்' என, சபாநாயகர் ரமேஷ் குமாரிடம், காங்., மற்றும் ம.ஜ.த., கட்சிகள் கோரிக்கை  விடுத்தன.அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் ராஜினாமா மீது, சபாநாயகர் முடிவு எடுக்கும் வரை காத்திருக்க, பா.ஜ., மேலிடம் முடிவு செய்துள்ளதாகவும், மாநிலத்தில், குறுகிய காலத்துக்கு, ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தவும், மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியானது.

இந்நிலையில், காங்கிரசைச் சேர்ந்த இரண்டு அதிருப்தி, எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் சுயேச்சை ஒருவரை, சபாநாயகர் ரமேஷ் குமார், நேற்று தினம் இரவு, தகுதி நீக்கம் செய்வதாக அறிவித்தார். மேலும், 'அவர்கள், கட்சி தாவல் தடை சட்டத்தின்படி, தற்போதைய சட்டசபையின் பதவிக் காலம் முடியும் வரை, தேர்தலில் போட்டியிட முடியாது' என, தெரிவித்த சபாநாயகர், மற்ற, எம்.எல்.ஏ.,க்கள் மீதான முடிவை, விரைவில் அறிவிப்பதாக கூறினார்.

இந்நிலையில், திடீர் திருப்பமாக, கவர்னர் வஜுபாய் வாலாவை, நேற்று காலை சந்தித்த எடியூரப்பா, 'தனக்கு, சுயேச்சை ஒருவரை சேர்ந்து, 106 எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு உள்ளது; தனிப்பெரும் கட்சி என்ற முறையில், பா.ஜ.,வை ஆட்சியமைக்க அழைக்க வேண்டும்' என, கேட்டுக் கொண்டார்.இதை ஏற்ற கவர்னர், ஆட்சியமைக்க, எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். 

இதன் பின், நிருபர்களிடம், எடியூரப்பா கூறியதாவது: ஏற்கனவே, கட்சியின் சட்டசபைத் தலைவராக நான் இருப்பதால், எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்தை கூட்டி, தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டிய அவசியம் இல்லை. கட்சித் தலைவருடன் ஆலோசனை நடத்திய பின், அமைச்சர் பதவிகள் முடிவு செய்யப்படும். பதவியேற்பு விழாவுக்கு வரும்படி,முன்னாள் முதல்வர்கள், சித்தராமையா, குமாரசாமிக்கு அழைப்பு விடுத்தேன்.இவ்வாறு, எடியூரப்பா கூறினார்.

இதையடுத்து, கவர்னர் மாளிகையில், நேற்று மாலை நடந்த நிகழ்ச்சியில், முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். அவருக்கு, கவர்னர் வஜுபாய் வாலா, பதவிப் பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார். எடியூரப்பாவை தவிர, வேறு யாரும் அமைச்சர்களாக பதவியேற்கவில்லை.

கர்நாடக சட்டசபையில், ஒரு வாரத்துக்குள் பெரும்பான்மையை நிரூபிக்குமாறு, எடியூரப்பாவை, கவர்னர் வஜுபாய் வாலா கேட்டுக் கொண்டுள்ளார்.''வரும், 29ம் தேதியன்று, சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிப்பேன். அதன் பின், நிதி மசோதா உடனடியாக நிறைவேற்றப்படும்,'' என, எடியூரப்பா தெரிவித்தார்.

இதனால், கர்நாடக சட்டசபை, மற்றொரு பலப்பரீட்சைக்கு தயாராகி வருகிறது.நிலையான ஆட்சிகர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது பற்றி, பா.ஜ., தேசிய செயல் தலைவர், ஜெ.பி.நட்டா கூறியதாவது:கர்நாடகாவில் குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததில், பா.ஜ.,வுக்கு எந்த பங்கும் இல்லை. கூட்டணிக்குள் ஏற்பட்ட பிரச்னையால் தான், ஆட்சி கவிழ்ந்தது.

மாநிலத்தில், எடியூரப்பா தலைமையில், பா.ஜ., நிலையான ஆட்சியை தரும். மத்தியிலும், மாநிலங்களிலும், சிறப்பான நிர்வாகத்தை தருவது, பா.ஜ.,வின் கொள்கை.ரமேஷ் குமார், சபாநாயகர் பதவியில் தொடர்வது பற்றி, கர்நாடக, பா.ஜ., முடிவு செய்யும்.இவ்வாறு,அவர் கூறினார்.
ஜனநாயக கேலிக்கூத்து


கர்நாடக முதல்வராக எடியூரப்பா பதவியேற்றது பற்றி,முன்னாள் முதல்வரும், காங்., மூத்த தலைவருமான சித்தராமையா கூறியதாவது:பார்லிமென்ட் ஜனநாயகத்தை, பா.ஜ., கேலிக்கூத்தாக்கி வருகிறது. எடியூரப்பாவை ஆட்சி அமைக்க அழைப்பு விடுத்ததன் மூலம், அரசியல் சட்டத்தை, கவர்னர் அவமதித்துள்ளார்.ஊழல்வாதியும், முன்னாள் சிறை பறவையுமான எடியூரப்பா, தன் குதிரை பேர திறமையை பயன்படுத்தி, ஜனநாயகத்தை அவமதித்து, முதல்வராகியுள்ளார்.

எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில், ஆட்சியை கவிழ்க்க, மத்திய பா.ஜ., அரசு முயற்சித்து வருகிறது. அதன் சோதனைக் களமாக கர்நாடகாவை பயன்படுத்தியுள்ளது. ஜனநாயகத்தில் நம்பிக்கையில்லாத பா.ஜ., குறுக்கு வழியில் ஆட்சியை பிடிப்பதையே, தன் கொள்கையாகக் கொண்டுள்ளது.இவ்வாறு, சித்தராமையா கூறினார்.

நான்காவது முறை முதல்வர்


கர்நாடகா முதல்வராக, நான்காவது முறையாக பதவியேற்றுள்ள எடியூரப்பா, இதுவரை முழுமையாக ஐந்து ஆண்டுகள் ஆட்சி செய்ததில்லைகடந்த, 2007, நவம்பரில், முதல்வராக எடியூரப்பா பதவியேற்றார். ஆனால், ஏழு நாட்களில் ஆட்சி கவிழ்ந்தது.இதன் பின், 2008ல், முதல்வராக பதவியேற்ற எடியூரப்பா, ஊழல் குற்றச்சாட்டுகள் காரணமாக, 2011ல், முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

கடந்த ஆண்டு, மே மாதம் முதல்வராக பதவியேற்ற எடியூரப்பாவின் ஆட்சி, மூன்று நாட்கள் மட்டுமே நீடித்தது. இப்போது, நான்காவது முறையாக, அவர் முதல்வராக பதவியேற்றுள்ளார். 
பெயர் எழுத்துக்கள் மாற்றம்


ஆன்மிகம் மற்றும் ஜோதிடத்தில், எடியூரப்பாவுக்கு நம்பிக்கை மிகவும் அதிகம். கடந்த மூன்று முறை, முதல்வராக பதவியேற்று, முழுமையாக அவரால் ஆட்சி செய்ய முடிவில்லை. இதையடுத்து, எண் கணித முறைப்படி, தன் பெயரின் ஆங்கில எழுத்துக்களை, எடியூரப்பா மாற்றியுள்ளார். ஆங்கிலத்தில் தன் பெயரில், 'ஒய்' சேர்த்திருந்த எடியூரப்பா, இப்போது ஒய்க்கு பதில், 'ஐ' எழுத்தைச் சேர்த்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...