Friday, July 26, 2019

நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க.

ஆசைப்பட்டதை சாப்பிடாமல், ஆசைப்பட்டதை எதையும் அனுபவிக்காமல், வயிற்றைக் கட்டி வாயைக்கட்டி உழைத்து சம்பாதித்து, சேமித்து வைத்த பணத்தில் உங்களுக்கென்று ஒரு மனை வாங்கி விட்டீர்கள். உங்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
மனையை வாங்கிவிட்டால் மட்டும் போதுமா அந்த மனையை பாதுகாக்க வேண்டும் முறைப்படி பராமரித்து வர வேண்டும். ஒரு வேளை இதில் நீங்கள் அலட்சியம் காட்டினால், உங்கள் மனையில் யாராவது அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்து விடுவார்கள். அதன்பிறகு நீங்கள் காவல்நிலையத்திற்கும் நீதிமன்றத்திற்கும் அலைந்து கொண்டிருப்பீர்கள்.
ஆகவே நீங்கள் வாங்கிய மனையை பாதுகாக்க, பராமரிக்க என்னென்ன செய்யலாம் என்பது குறித்து இங்கு காண்போம்.
மனை வாங்கியவுடன் முதலில் நீங்கள் வீடு கட்டி வாடகைக்கு விட்டால் நல்ல வருமானம் இடைக்கும். அவ்வாறு முடியாதவர்கள் கீழ்க்காணும் குறிப்புக்கள்படி செய்து கொள்ளலாம்.
உங்கள் மனையின் பக்கத்திலோ அல்ல‍து அதன் அருகில் உள்ளவர்களிடம், நீங்கள் மனை வாங்கிய‌தை குறிப்பிட்டு, நட்பு பாராட்டி, அவர்களின் தொடர்பு எண்ணை வாங்கி வைத்து, நல்ல நாள், பண்டிகை நாட்களில் அவர்களுக்கு போன் செய்து அவர்களுக்கு வாழ்த்துச் சொல்வது போல் உங்கள் மனையைப் பற்றியும் விசாரித்துக் கொள்ள வேண்டும்.
உங்கள் கிரையப் பத்திரத்தில் குறிப்பிட்டுள்ள‌, சொத்து விவரத்தில் கண்டுள்ள அளவுகளின் படியும், மனையின் நான்கு எல்லைக‌ள் (boundaries)-ன்படி விவரப்படியும் உங்கள் சொத்தினை அளவிட்டு, நான்கு எல்லைக்குமான கல் ஊன்றி, உங்கள் சொத்தினை அருகருகே உள்ள மற்ற சொத்துக்களிலிருந்து தனித்து, பிரித்து காட்டும்படியாக வேலி அமைத்து, அதனை அடையாளப்படுத்தல் (Demarcation) வேண்டும்.
அல்லது கொஞ்சம் பணம் இருந்தால், சுற்றிலும் மதில் சுவர் எழுப்பலாம். இந்த மதில்சுவர் உங்கள் மனையின் மதிப்பை கணிசமாக‌ உயர்த்தும் என்பது நிச்ச‍யம்.
கையில் இன்னும் கொஞ்சம் ப‌ணம் இருந்தால், பிளாஸ்டிக் கூறை அமைத்து கதவு அமைத்து,கொடோன்களாக வாடகைக்கு விடலாம். இதன்மூலம் ஒரு கணிசமான தொகை உங்களுக்கு வரும்.
தண்ணீர் இருக்கும் பகுதியில் உங்கள் மனை இருந்தால், அந்த மனையில் கிணறு தோண்டி அக்கம்பக்கம் உள்ள‌ ஊர் மக்கள் தண்ணீர் எடுக்க உதவலாம்.
உங்கள் மனையில் பயன் தரும் மரங்களான தென்னை, பனை உட்பட‌ மரங்கள் பலவற்றை நட்டு வளர்க்கலாம்.
உங்கள் பெயரில் ஒரு மின் இணைப்பையும் மின்வாரிய‌ அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம்.
இதுமட்டும் போதாது, உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் அந்த மனையை பார்த்தும் அங்கு இருப்பவர்களுடன் சற்று உரையாடி விட்டு வரவேண்டும்
அப்படி உங்களால் போக முடியவில்லை என்றால் உங்கள் நம்பிக்கைக்குப் பாத்திரமான ஒருவரை அனுப்பி, மனை காலியாக இருக்கிறதா, அந்த நிலத்தில் யாராவது பள்ள‍ம் ஏதேனும் தோண்டியிருக்கிறார்களா, நாம் வைத்த வேலியை யாராவது பிய்த்து எறிந்திருக்கிறார்களா? அல்ல‍து யாராவது அத்துமீறி நுழைந்து இருக்கிறார்களா? போன்றவற்றை கண்காணித்து வர வேண்டும்.
அவையாவும், நீங்கள் வாங்கிய‌ சொத்தின் சுவாதீனத்தையும் உறுதிப்படுத்தவும், வில்லங்கங்கள் ஏதேனும் ஏற்பட்டாலும் அதை ஆரம்பக்கட்டத்திலேயே பிடுங்கி எறியவும் பேருதவியாக இருக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...