Sunday, October 13, 2019

உண்மையான கவரிமான்.

ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோரது வனவாச காலம். அவர்கள் தங்கியிருந்த காட்டில் கவரிமான்கள் ஏராளமாக வசித்தன. அவற்றில் ஒரு மானைக் கவனித்த சீதாதேவி, அந்த மானின் வால் மிகவும் வசீகரமாக இருந்ததை கவனித்தார். வனவாச கால கட்டத்தின் நினைவாக அந்த வசீகர வால் தன்னிடம் இருக்கட்டும் என்று சீதாதேவி நினைத்தார். மனைவியின் விருப்பத்தை அறிந்த ராமர், அப்போதே அதை நிறைவேற்ற விரும்பினார்.
உடனே தனது வில்லில் நாணேற்றி, அந்த வாலை நோக்கி எய்தார் ராமர். கவரிமானுக்கு விஷயம் விளங்கியது. தனது ஒரு ரோமம் உதிர்ந்தாலும் உயிர் வாழாத இனமாயிற்றே கவரிமான்?! ‘வால் அறுந்தால், கவரிமான் கூட்டத்தில் தனக்கு அவமானம் ஏற்படும். ஆனால், ராமபாணத்தால் உயிர் இழந்தால் மோட்சம் கிட்டுமே!’ என்று நினைத்த மான், சட்டெனத் திரும்பி அம்பு தனது கழுத்தில் பதியும்படியாக நின்று கொண்டது. இதைக் கவனித்த ராமர் திடுக்கிட்டார். ‘இந்த மானை வதைக்கலாகாது. அகிம்சையே பரம தர்மமாகும்!’ என எண்ணினார்.
அதேநேரம் ராமபாணத்தை வீணாக்கவும் கூடாது என்பதால், உடனே மற்றொரு பாணத்தைத் தொடுத்தார் ராமர். இந்த இரண்டாவது பாணம், விரைந்து சென்று முதல் பாணத்தின் திசையை மாற்றி மானுக்கு உயிர்ப் பிச்சை கொடுத்தது. இந்த மான் - உண்மையான கவரிமான்.
ஆனால், அந்த பஞ்சவடி மான் - மாரீசன் என்ற பொய் மான்; மாயமான். இந்தக் கவரிமான் வசித்த பகுதி நல்ல இடம். நல்ல இடம் நன்மையைத் தரும். ஆனால், பஞ்சவடி ஆசிரமம் அமைந்திருந்த பகுதி நல்ல இடம் இல்லை. அதனால் அங்கு வந்த மாரீச மாயமானுக்கு ராமபாணத்தால் அழிவு ஏற்பட்டது. ராவணனால் தூக்கிச் செல்லப்பட்டார் சீதாதேவி. அதனால் கணவரைப் பிரிந்து வாழும் பரிதாப நிலை ஏற்பட்டது. காரணம், கோதாவரியின் வட கரையில் அவர்களது குடில் அமைத்திருந்ததுதான். அதாவது ஆசிரமத்துக்குத் தெற்கில் கோதாவரி நதி.
‘வசிக்கும் இடத்துக்குத் தென்திசை மேடாக இருந்தால், மேன்மை தரும். தெற்கில் பள்ளமிருந்தால் தீமை தரும்’ என்கிறது வாஸ்து சாஸ்திரம். உண்மையான கவரிமான் இருந்த இடத்தில் நன்மைகள் விளைந்தன. ஆனால், பஞ்சவடி ஆசிரமம் இருந்த பகுதி, வாஸ்து முறையில் குறைகள் மிகுந்த இடம். அதனால் கெடுதலான பலன்கள் ஏற்பட்டன. இந்த கவரிமான் சம்பவம், தியாகராஜரின் ‘வாசாமே கோசரமே மனஸா - சரணம்’ என்ற பாடலில் இடம்பெற்றுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...