தமிழகத்தில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு இணைப்பு வழங்குவதற்கு, அப்துல்கலாம் பெயரில், புதிய தொழில்நுட்ப பல்கலை துவங்குவது குறித்து, உயர்கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழகத்தில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லுாரிகள், அண்ணா பல்கலையின் இணைப்பில் செயல்படுகின்றன. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கு, உயரிய அந்தஸ்தான, &'இன்ஸ்டிடியூட் ஆப் எமினென்ஸ்&' எனப்படும், மேம்பட்ட சீர்மிகு நிறுவனம் என்ற அங்கீகாரத்தை வழங்க, மத்திய அரசு பட்டியல் தயாரித்துள்ளது.

இதற்கான நிதி ஒப்புதலுக்கு, மத்திய அரசிடம் இருந்து, தமிழக அரசுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. இந்த அந்தஸ்தை பெற்றால், தமிழக அரசு பின்பற்றும் இடஒதுக்கீடு கொள்கை பாதிக்கப்படுமா என்ற விபரத்தை தாக்கல் செய்ய, அண்ணா பல்கலைக்கு, உயர்கல்வி துறை உத்தரவிட்டுள்ளது.
அதேநேரம், அண்ணா பல்கலைக்கு மத்திய அரசின் அந்தஸ்து கிடைத்தால், அண்ணா பல்கலையின் பாட திட்டத்தை, மற்ற இன்ஜினியரிங் கல்லுாரிகள் பயன்படுத்தி, இணைப்பு அந்தஸ்தில் செயல்பட முடியாது. அண்ணா பல்கலை, தனி நிறுவனமாக மாறி விடும். எனவே, தற்போது தமிழகத்தில் செயல்படும், 500க்கும் மேற்பட்ட இன்ஜினியரிங் கல்லுாரிகளை இணைத்து, அவற்றுக்கு பாட திட்டம் வழங்கவும், தேர்வுகள் நடத்தவும், ஒரு பல்கலை தேவைப்படும். அதற்காக, புதிதாக தொழில்நுட்ப பல்கலையை துவங்கலாமா என, தமிழக உயர்கல்வி துறை ஆலோசனை நடத்தி வருகிறது.
தமிழக தொழில்நுட்ப கல்வி இயக்குனரகத்தை, அந்த பல்கலையில் இணைத்து விடலாம் என்றும், பல்கலைக்கு, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பெயரை வைக்கலாம் என்றும், உயர்கல்வி துறையில் கருத்துகள் கேட்கப்படுகின்றன. இதற்கான முடிவு, விரைவில் எடுக்கப்படும் என, தமிழக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
No comments:
Post a Comment