Sunday, March 8, 2020

9 மாதமாக காலியாக உள்ள லோக்சபா துணை சபாநாயகர் பதவி.

புதிய லோக்சபா அமைந்து, ஒன்பது மாதங்களுக்கு மேலாகியும், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படவில்லை. லோக்சபாவுக்கு கடந்த ஆண்டு, ஏப்ரல் - மே மாதம் தேர்தல் நடந்தது. புதிய லோக்சபா, ஜூன் மாதம் அமைக்கப்பட்டது. சபாநாயகராக, பா.ஜ.,வைச் சேர்ந்த, ஓம் பிர்லா தேர்வு செய்யப்பட்டார்.

வழக்கம்:
துணை சபாநாயகர் பதவி, கூட்டணி கட்சிகளுக்கோ அல்லது பிரதான எதிர்க்கட்சிக்கோ வழங்கப்படுவது வழக்கம். மேலும், புதிய லோக்சபா அமைந்த மூன்று மாதத்துக்குள், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவதும் வழக்கம். சபாநாயகர் இல்லாத நேரத்தில், சபையை துணை சபாநாயகர் நடத்துவார். மத்தியில், 1999ல், வாஜ்பாய் தலைமையில் அமைந்த, தே.ஜ., கூட்டணி அரசில், புதிய லோக்சபா அமைந்த ஒரு மாதத்துக்கு பின், துணை சபாநாயகராக, காங்கிரசைச் சேர்ந்த, பி.எம்.சயீத் தேர்வு செய்யப்பட்டார்.

மன்மோகன் சிங் தலைமையில், 2004ல் அமைந்த, முதல் ஐ.மு., கூட்டணி அரசில், இரண்டு மாதத்தில், துணை சபாநாயகராக, அகாலிதளத்தைச் சேர்ந்த, சரன்ஜித் சிங் அத்வால் தேர்வு செய்யப்பட்டார். கடந்த, 2009ல், புதிய லோக்சபா அமைந்த இரண்டு மாதத்தில், பா.ஜ.,வின் கரிய முண்டா, துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். பிரதமர் மோடி தலைமையில், 2014ல் ஆட்சி அமைந்த போது, மூன்று மாதம் கழித்து, துணை சபாநாயகராக, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த தம்பி துரை தேர்வு செய்யப்பட்டார்.

ஆனால், இப்போது புதிய லோக்சபா அமைந்து ஒன்பது மாதங்களாகியும், துணை சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை; இதற்கான எந்த முயற்சியையும், ஆளும் கட்சியான, பா.ஜ., எடுத்ததாக தெரியவில்லை. இது பற்றி, கூட்டணி கட்சிகளிடம் விவாதமும் நடத்தப்படவில்லை.
லோக்சபா, துணை சபாநாயகர், பதவி,நவீன் பட்நாயக், 9 மாதம்

இது பற்றி லோக்சபா முன்னாள் பொதுச்செயலர், பி.டி.டி.ஆச்சாரி கூறுகையில், ''சபாநாயகரும், துணை சபாநாயகரும், பார்லிமென்ட் அதிகாரிகள் என, அழைக்கப்படுவர். ''இருவரையும், லோக்சபா உறுப்பினர்கள் தான் தேர்வு செய்ய வேண்டும். சபாநாயகர் தேர்தல் முடிந்தவுடன், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படுவது தான் வழக்கம்,'' என்றார்.

முதல் முறை:
இது பற்றி காங்கிரஸ் எம்.பி., மாணிக் தாகூர் கூறுகையில், ''அரசியல் சட்டத்தை பின்பற்றாததை, பா.ஜ., ஒரு வழக்கமாகவே கொண்டுள்ளது. துணை சபாநாயகர் பதவி, ஒரு ஆண்டாக காலியாக இருப்பது, இதுவே முதல் முறை,'' என்றார்.

இது பற்றி பா.ஜ., தலைவர்கள் கூறியதாவது: துணை சபாநாயகர் தேர்தலை நடத்துவதற்கு, காலக்கெடு எதுவும், அரசியல் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை. இதற்கு முன், இதுபோல், பல மாதங்கள், துணை சபாநாயகர் பதவி காலியாக இருந்துள்ளது. பார்லிமென்ட் மழைக்கால கூட்டத்தில், துணை சபாநாயகர் தேர்தல் நடத்தப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

இம்முறை, துணை சபாநாயகர் பதவியை, ஒடிசா முதல்வர், நவீன் பட்நாயக் தலைமையிலான, பிஜு ஜனதாதள கட்சிக்கு வழங்க, பா.ஜ., ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த கட்சியைச் சேர்ந்த, கட்டாக் தொகுதி எம்.பி., பரத்ருஹரி மஹ்தாப், துணை சபாநாயகராக தேர்வு செய்யப்பட வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...