Monday, March 30, 2020

ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க எண்ணமில்லை நோ சான்ஸ்!

'கொரோனா' வைரஸ் வேகமாக பரவி வருவதால், 21 நாள் ஊரடங்கு உத்தரவு, மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வதந்தி பரவியதை அடுத்து, மத்திய அரசு, இதற்கு விளக்கம் அளித்துள்ளது. 'ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை' என, மத்திய அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் நாடு முழுதும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. வைரஸ் பரவாமல் தடுக்க, முன் எச்சரிக்கை நடவடிக்கையாக, 21 நாள் ஊரடங்கு உத்தரவை, பிரதமர் நரேந்திர மோடி பிறப்பித்தார். இந்த ஊரடங்கு, 25ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஊரடங்கால், கடைகள், வர்த்தக நிறுவனங்கள், தொழிற்சாலைகள், பள்ளி, கல்லுாரிகள், சினிமா தியேட்டர்கள், ஷாப்பிங் மால் என, அனைத்தும் மூடப்பட்டுள்ளன; பஸ், ரயில், ஆட்டோ, டாக்சி போக்குவரத்தும் முடக்கப்பட்டுள்ளது.

வதந்தி

லட்சக்கணக்கான தினக் கூலி தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கின்றனர். மாத சம்பளம் கிடைக்காதவர்கள், வீட்டு வாடகை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. டில்லி, மும்பை உள்ளிட்ட பெரு நகரங்களில் பணியாற்றிய வட மாநில தொழிலாளர்கள், வேலை இல்லாததால், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு கால்நடையாகவே செல்கின்றனர்.
ஊரடங்கு உத்தரவை நீட்டிக்க எண்ணமில்லை நோ சான்ஸ்!

இந்நிலையில், வைரஸ் வேகமாக பரவி வருவதால், ஊரடங்கு உத்தரவு, மேலும் சில மாதங்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக, சிலர் வதந்தியை பரப்பினர்; இது, ஏழை மற்றும் நடுத்தர மக்களிடையே அதிர்ச்சியையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், மத்திய அமைச்சரவை செயலர், ராஜிவ் கவுபா, இதற்கு விளக்கம் அளித்துள்ளார்.
''ஊரடங்கு உத்தரவை நீட்டிக்கும் திட்டம் எதுவும் இல்லை; இது தொடர்பான வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். ''வெளி மாநில தொழிலாளர்களுக்கு தேவையான உணவு, இருப்பிட வசதிகள் செய்து தரப்படும் என, ஏற்கனவே அரசு உறுதி அளித்துள்ளது,'' என்றார். மத்திய அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், 'சமூக வலைதளங்களிலும், சில ஊடகங்களிலும், ஊரடங்கு உத்தரவு மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட உள்ளதாக வெளியான தகவல், வெறும் வதந்தியே. 'இதை யாரும் நம்ப வேண்டாம். அடிப்படை ஆதாரமற்ற செய்திகளை நம்ப வேண்டாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.


ஆபத்து

'கேம்' எனப்படும், சர்வதேச தொழில் முனைவோர் கூட்டமைப்பின் தலைவர், வெங்கடேசன் கூறியதாவது:தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள, 21 நாள் ஊரடங்கு, மேலும் சில நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டால், நாட்டில் செயல்படும் சிறு மற்றும் குறு தொழில்களுக்கு பெரும் இழப்பு ஏற்படும். நாடு முழுதும், இரண்டு கோடிக்கும் அதிகமான சிறு மற்றும் குறு தொழிற்சாலைகளை மூடும் நிலை ஏற்படும். சிறு மற்றும் குறு தொழில்கள் மூலம், நாட்டில், 90 சதவீத வேலை வாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு தொடர்ந்தால், இதில் பணியாற்றுவோர் வேலை இழக்க நேரிடும்.இவ்வாறு, அவர் கூறினார்.

அவசரநிலை பிரகடனமா? ராணுவம் மறுப்பு!


கொரோனா வைரசை கட்டுப்படுத்த, நாடு முழுதும் அவசரநிலை பிரகடனப்படுத்தப் படவுள்ளதாக வெளியான வதந்திக்கு, இந்திய ராணுவம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, ராணுவத்தின் செய்தி தொடர்புத் துறை கூடுதல் இயக்குனர் ஜெனரல் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில், நாடு முழுதும், அடுத்த மாதத்திலிருந்து அவசரநிலை பிரகடனப்படுத்தப் படவுள்ளதாக, சமூக வலைதளங்களில் பொய் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு பணிகளுக்காக ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் மற்றும் என்.சி.சி.,யில் உள்ளவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் வதந்தி பரப்பப்படுகிறது. எந்தவித அடிப்படை ஆதாரமும் இல்லாத இந்த வதந்திகளை நம்ப வேண்டாம். இவ்வாறு, அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...