Wednesday, March 25, 2020

தமிழக போலீசார் கையில் எதற்கு,'லத்தி'?

'கொரோனா' தொற்றை தடுக்க, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு, நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில், போலீசாரின் கெடுபிடி அமலாகி உள்ளது. வேடிக்கை பார்க்க கிளம்புவோரிடம் காட்ட வேண்டிய கெடுபிடியை, சாமானியர்கள் மீதும், பொதுச்சேவை செய்யச் செல்வோர் மீதும், நாளிதழ்களை வினியோகிக்கும் இளைஞர்கள் மீதும், போலீசார் அமல்படுத்துகின்றனர். கையில் இருக்கும் லத்தியால், 'சுளீர் சுளீர்' என, அடிக்கின்றனர். இதனால், இந்தப் பிரிவினர் அனைவரும், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். முதல்வர், இ.பி.எஸ்., தலையிட்டு, இவ்விவகாரத்திற்குத் தீர்வு காண வேண்டும்.


latest tamil news



கடந்த, 24 இரவு, 8:00 மணிக்கு, 'டிவி' மற்றும் 'ரேடியோ' வாயிலாக, பொதுமக்களிடையே நீண்ட உரையாற்றிய பிரதமர் மோடி, 'கொரோனா பெரும் தொற்றிலிருந்து, மக்கள் உயிரை பாதுகாக்க, நாடு முழுதும், 21 நாட்களுக்கு, ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. வீட்டை விட்டு யாரும் வெளியே வர வேண்டாம்' என, இரு கரம் கூப்பி, உருக்கமான வேண்டுகோள் விடுத்தார்.

அறிவிப்பு


ஊரடங்கு அமலில் இருக்கும், 21 நாட்களில், எந்தெந்த சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்படும் என்பது தொடர்பான அறிவிப்பையும், மத்திய உள்துறை வெளியிட்டது. இது குறித்த உத்தரவு, அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டது.அதில், 'போலீஸ், ஊர்க்காவல் படை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ் சேவைகள், பேரிடர் மேலாண்மை துறை, சிறைத்துறை, மாவட்ட நிர்வாகங்கள், கருவூலம், மின் வாரியம், குடிநீர் வழங்கல், பொது சுகாதாரம், உள்ளாட்சி நிர்வாகங்களில் துாய்மைப் பணிப் பிரிவு போன்றவை செயல்படலாம்.

'மருத்துவமனைகள், கிளினிக்குகள், மருந்துக் கடைகள் மற்றும் மருத்துவம் சார்ந்த சேவைகள் தொடரலாம்' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.வணிக ரீதியிலான நிறுவனங்கள் உள்ளிட்ட, அத்தியாவசியமற்ற அனைத்து தனியார் நிறுவனங்களை மூட உத்தரவிட்டுள்ள மத்திய அரசு, ரேஷன் கடைகள், காய்கறி கடைகள், மளிகை கடைகள், பால், மாட்டுத்தீவனம் உள்ளிட்ட அத்தியாவசிய பண்டங்கள் விற்பனைக்கு அனுமதி அளித்துள்ளதுடன், வங்கிகள், இன்சூரன்ஸ் நிறுவனங்கள், ஏ.டி.எம்.,கள், அச்சு ஊடகங்கள் மற்றும் எலக்ட்ரானிக் மீடியா, பெட்ரோல் பங்க், செக்யூரிட்டி சர்வீசஸ் உள்ளிட்டவற்றுக்கும், ஊரடங்கு நடவடிக்கையில் இருந்து விலக்கு அளித்துள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்த பின், நேற்று காலை, தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் சாலைகள் வெறிச்சோடின; கடைகள் மூடப்பட்டிருந்தன. இருப்பினும், மத்திய அரசின் அறிவிப்பின்படி திறந்திருந்த மருந்துக் கடைகள், பெட்ரோல் பங்க்குகள், மளிகைக் கடைகள், மருத்துவனைகள் உள்ளிட்ட சேவைகளைப் பெற, வாகனங்களில் சென்ற பொதுமக்களை, போலீசார் பல இடங்களில், லத்தியால் விளாசினர்.நிற்காமல் சென்ற வாகன ஓட்டிகளை விரட்டி விரட்டி, அடிக்கும் காட்சிகளும் அரங்கேறின.

அதிகாலையில் செய்தித்தாள் சப்ளைக்குச் சென்றவர்கள் மீதும், போலீசார் கண்மூடித்தனமான தாக்குதலை பல இடங்களில் நடத்தினர்; 'நாளை வரக்கூடாது' என, மிரட்டினர்.கொரோனா வைரஸ் தொற்று தடுக்க, ஊரடங்கு உத்தரவை கடுமையாக அமல்படுத்த வேண்டியது அவசியம் தான். ஆனால், அதற்காக, மத்திய அரசின் அறிவிப்பின்படி திறந்திருக்கும், அத்தியாவசிய சேவைகளைப் பெற சென்ற பொதுமக்களை, போலீசார், ஆடு, மாட்டை அடிப்பது போல தாக்கியது, பலரையும் கொந்தளிக்கச் செய்துள்ளது.

இவ்வாறான செயல்கள், ஊரடங்கு உத்தரவுக்கு ஒத்துழைக்கும் பொதுமக்களை நிலைகுலையச் செய்யும். ஊரடங்கில் இருக்க வேண்டிய கட்டுப்பாடுகள் மீது வெறுப்பு ஏற்பட வைத்து விடும்.இவ்விஷயத்தில், முதல்வர், இ.பி.எஸ்., உடனடியாக தலையிட்டு, அத்தியாவசிய சேவைகள் தொடர்வதற்கான அறிவுறுத்தல்களை போலீசாருக்கு வழங்காவிட்டால், சட்டம் - ஒழுங்கு பிரச்னைகள் தலைதுாக்கும் வாய்ப்புள்ளது.

அரசின் உத்தரவுப்படி, விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ள துறைகளை சேர்ந்தவர்கள் தவிர, வேறு யாராவது தேவையின்றி சுற்றினால், அவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்ய, போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே, போலீசாரின் நடவடிக்கை, இன்று முதல் கடுமையாக இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவை அமல்படுத்தும் நேரத்தில், விதிவிலக்கில் உள்ளவர்களிடம், போலீசார் கடுமை காட்டாமல் நடக்க வேண்டும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

வேடிக்கை பார்க்கவா ஊரடங்கு?
நேற்று காலையில், குடும்ப தலைவர்கள், பால், காய்கறி மற்றும் மளிகை பொருட்கள் வாங்க, கடைகளுக்கு சென்று வந்தனர். அதை தொடர்ந்து, வீட்டில் இருக்கும் இளைஞர்களும், சில நடுத்தர வயதினரும், மொபைல் போனும் கையுமாக, டூ - வீலர்களிலும், கார்களிலும், சாலைகளில் சுற்றி திரிந்தனர்.

சென்னை, மதுரை, கோவை, திருச்சி, நெல்லை, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், நகரப் பகுதிகளில், கும்பல் கும்பலாக இளைஞர்கள் சுற்றி திரிந்தனர். பெரும்பாலானவர்கள், ஊரடங்கை வேடிக்கை பார்க்க, சாலைகளில் சுற்றினர். தெருமுனைகள், அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில், கூட்டமாக கூடி அரட்டை அடிப்பது போன்ற செயல்களிலும் ஈடுபடுகின்றனர். மரத்தடி நிழல், பஞ்சாயத்து மன்ற கூடங்கள், கோவில், தேவாலயம் மற்றும் மசூதிகளின் அருகில் உள்ள பகுதிகள் மற்றும் சமூக அமைப்புகளின் அலுவலகங்கள் ஆகியவற்றில், ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் கூடி பேசி பொழுதை போக்குகின்றனர்.

இந்த அலட்சியமான செயல்களால், ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு, கொரோனா பரவி, உயிரிழப்பை ஏற்படுத்தும்.ஊரடங்கை முறையாக கடைப்பிடிக்காமல், அத்துமீறும் கும்பலால், அவர்களுக்கு மட்டுமின்றி, மற்றவர்களுக்கும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, 'சாலைகளில் திரியும் கும்பலை, போலீசார் சுற்றிவளைத்து பிடித்து, கடுமையாக தண்டிக்க வேண்டும்' என்ற, கோரிக்கை எழுந்துள்ளது.

தாக்கக் கூடாது;போலீசாருக்கு அறிவுரை


'ஊரடங்கின் போது, வாகனங்களில் செல்வோரை தாக்கக் கூடாது' என, போலீசாருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், கோவையில் நேற்று, ஏராளமானோர் வாகனங்களில் பயணித்தனர். சிலருக்கு, போலீசார் அறிவுரை கூறி அனுப்பி வைத்தனர். ஒரு சில இடங்களில், டூ - வீலரில் சென்ற நபர்களை, போலீசார் தாக்கினர். இதுகுறித்த வீடியோக்கள், சமூக வலைதளங்களில் பரவின.

இதையடுத்து, வாகனங்களில் செல்வோரை தாக்கக்கூடாது என, போலீசாருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கோவை மாவட்ட எஸ்.பி., சுஜித்குமார் கூறுகையில், ''சம்பந்தப்பட்ட போலீசாரை அழைத்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வாகனங்களில் செல்வோரை தாக்கக் கூடாது எனவும், விதிமீறி செல்வோர் மீது வழக்குப்பதிவு செய்யவும், போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும், இதுகுறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

'பேப்பர் பாய்'களுக்கு சல்யூட்!


ஒவ்வொரு பொழுது விடியும்போதும், அன்றாட உலக நடப்புகளை உங்கள் வீட்டு வாசல்
கதவுகளுக்கு அருகில் கொண்டு வைத்து வைக்கும், 'பேப்பர் பாய்'கள் தான், தற்போதைய நிஜ ஹீரோக்கள். உடலை உறைய வைக்கும் குளிர், கொட்டும் மழை என, எந்தவிதமான
வானிலையிலும், கடமையை விட்டுக் கொடுக்காதவர்கள் இவர்கள்.

ஒவ்வொரு காலையிலும், நாளிதழ்கள் இல்லாமல் நீங்கள் பருகும் டீயும், காபியும் ருசிக்கவே ருசிக்காது. நாளிதழ்கள் இல்லாத விடியல், ஒருவித வெறுமையை ஏற்படுத்துவதை மறுக்க முடியாது; அந்த அனுபவத்தை வெறும் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.ஆனாலும்,
பேப்பர் பாய், நாளிதழ் ஏஜென்டுகளைப் பற்றி, ஒரு நிமிடம் கூட, நாம் யோசித்து பார்த்திருக்க மாட்டோம்.

கொரோனா பாதிப்பிலிருந்து தப்பிப்பதற்காக, நாம், வீட்டுக்குள் பாதுகாப்பாக இருக்கும் இந்த அபாயமான நேரத்தில் கூட, போர் வீரர்களைப் போல், துணிச்சலாக கடமையாற்றுபவர்கள், பேப்பர் பாய்கள் தான். சமூக வலைதளங்கள் மூலம், உடனுக்குடன், நம் மொபைல் போன்களில் தகவல்கள் கிடைக்கலாம். ஆனால், அது, நம்பகத் தன்மை உடைய தகவல்களா என்ற
சந்தேகத்துக்கு விடையளிக்க யாரும் இல்லை.

ஆனால், தற்போதைய சூழலில் மட்டுமல்லாமல், எப்போதுமே நாளிதழ்கள், நம்பகத்
தன்மை உள்ள தகவல்களை தரத் தவறியது இல்லை. இதில், பலரது உழைப்பு உள்ளது. இதில், பேப்பர் பாய், ஏஜென்டுகளின் உழைப்பு மிகவும் முக்கியம் வாய்ந்தது. நாளிதழ்கள் டெலிவரி செய்வோர் மட்டுமல்லாமல், நம் அன்றாட வாழ்க்கையை மேம்படுத்தும் சேவைகளை டெலிவரி செய்வோர் அனைவருமே, சமூகத்தில் புறக்கணிக்கப்பட்டவர்களாகவே பார்க்கப்படுவது தான் துரதிர்ஷ்டம்.

நாட்டில் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் பேப்பர் பாய்களுடன் பேசிப் பார்த்தால் தான்,
ஒவ்வொரு நாளும், அவர்கள் எவ்வளவு கடினமான சவால்களை எதிர்கொள்கின்றனர் என்பது தெரியும். கொரோனா பீதி நிலவும் சூழலில், நாளிதழ்கள் அச்சிடுவது, அவற்றை பார்சல் செய்வது உள்ளிட்ட பணிகள், மனித தொடர்பு இல்லாமல் இயந்திரங்கள் மூலம் மேற்கொள்ளப் படுவதையும், அவற்றில் கிருமி நாசினி தெளிக்கப்படுவதையும், 'வீடியோ'க்களாகவும், செய்திகளாகவும் நம் நாளிதழ் உட்பட பலவற்றில் வெளிவந்துள்ளது.

நாளிதழ் டெலிவரி செய்வோரும், போதிய சுகாதார நடவடிக்கைகளை பின்பற்றுகின்றனர்.
எனவே, நாம் சரியாக பார்த்திராத, கவனித்திராத பேப்பர் பாய்கள், தற்போது நிஜ ஹீரோக்களாக உருவெடுத்துள்ளனர். அவர்களுக்கு, 'சல்யூட்' அடிப்பதற்கு, இதுவே சரியான நேரம்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...