Saturday, March 28, 2020

சபாஷ் தமிழகம்! * பெரும்பாலான மக்கள் வீட்டிலேயே தங்கல்.

'கொரோனா' குறித்த விழிப்புணர்வால், தமிழகத்தில் பெரும்பாலான மக்கள், அரசு கேட்டுக் கொண்டபடி, வீடுகளுக்குள் தஞ்சம் அடைந்துள்ளனர். கிராமப்புறங்களில், எல்லைகளை மூடி, வெளியாட்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், தண்டோரா போட்டும், 'மக்கள் வெளியில் வர வேண்டாம்' என, எச்சரிக்கின்றனர். தேவையற்ற வதந்திகளால் ஏற்படும் பீதியை அகற்றும் விதமாக, இளைஞர்கள் மற்றும் போலீசார் இணைந்து, 'வாட்ஸ் ஆப்' குழுக்கள் அமைத்துள்ளனர்.

latest tamil news


கொரோனா வைரஸ், உலகையே மிரட்டி வருகிறது. இதன் கோரப் பிடிக்கு, இந்தியாவும் தப்பவில்லை. பாதிப்பை குறைக்கும் விதமாக, 24ம் தேதி முதல், 21 நாட்களுக்கு, நாடு முழுதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.


நடவடிக்கை


தமிழகத்தில், முதல் சில நாட்கள் பலரும், வெளியில் சுற்றி திரிந்தாலும், போலீசாரின் கெடுபிடி மற்றும் ஊடகங்கள் வாயிலாக ஏற்பட்ட விழிப்புணர்வு காரணமாக, வீடுகளுக்குள் இருக்க துவங்கியுள்ளனர். அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும், வெளியில் வந்து செல்கின்றனர். கடைகளிலும், கட்டங்கள், வட்டங்கள் வரையப்பட்டு, சமூக இடைவெளியை கடைபிடித்து, பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.

இதன் வாயிலாக, மற்ற மாநிலங்களுக்கு, தமிழகம் முன்னோடியாக விளங்குகிறது.குறிப்பாக, கிராமப் புறங்களில் கூடுதல் விழிப்புணர்வு காணப்படுகிறது. பல கிராமங்களில், வெளியூர் நபர்கள், ஊருக்குள் வருவதை தடுக்க, எல்லைகளில் தடுப்புகள் அமைத்து வருகின்றனர்.தேனி மாவட்டம், பெரியகுளம் ஒன்றியம், முதலக்கம்பட்டி, சங்கரமூர்த்திபட்டி, தாயமங்கலம் கிராம மக்கள், வெளியூர்காரர்கள் மற்றும் டூ - வீலர், நான்கு சக்கர வாகனங்களில் வருவோர், ஊருக்குள் வருவதை தடுப்பதற்காக, கிராமத்தின் நுழைவு பகுதியாக உள்ள முதலக்கம்பட்டியில், கம்புகளால் தடுப்புகள் ஏற்படுத்தி உள்ளனர்.

தேனி மாவட்டம், முதலக்கம்பட்டி கிராமத்திற்குள் வெளியூர்க்காரர்கள் நுழைவதை தடுக்க, கம்பு கட்டி தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது.


தாயமங்கலம், செல்வம் கூறியதாவது:வைகை அணை - ஆண்டிப்பட்டி வழியை, போலீசார் மூடியுள்ளனர். இதனால், ஆண்டிப்பட்டிக்கு முதலக்கம்பட்டி வழியாக, மக்கள் செல்கின்றனர். வெளியூரைச் சேர்ந்தவர்கள், ஊருக்குள் வருவதால் நோய் தொற்றும் அபாயம் உள்ளது. இதனால், கிராமத்திற்குள் நுழையும் பாதையை அடைத்துஉள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அடுத்த பேரண்டப்பள்ளி மக்கள், தங்களின் கிராம எல்லையை மூடியுள்ளனர். வெளியே சென்று வருவோர், கைகளை சுத்தமாக கழுவிய பின்னரே, கிராமத்துக்குள் அனுமதிக்கப்படுகின்றனர்.அதேபோல், சூளகிரி - பேரிகை சாலையில் உள்ள, கே.கே.நகர் மற்றும் சூளகிரி அடுத்த கங்கசந்திரம், பெத்தசிகரலப்பள்ளி கிராம மக்களும், தங்களது எல்லையை மூடி உள்ளனர்.வெளி நபர்கள் கிராமத்துக்குள் வராமல் தடுக்க, இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். சில இடங்களில், மரக் கிளைகளை வெட்டிப் போட்டு, சாலையில் தடுப்புகளை ஏற்படுத்தி உள்ளனர்.


'செக்போஸ்ட்'
தஞ்சாவூர் அடுத்த காசவளநாடு புதுார் கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. கிராமத்தில், இளைஞர்கள் ஒன்றிணைந்து, கொரோனா பரவாமல் தடுப்பதற்காக, ஊருக்குள் நுழையும் இடங்களில், 'செக்போஸ்ட்' அமைத்து, மஞ்சள், வேப்பிலை, 'டெட்டால்' கலந்த தண்ணீர் வைத்துள்ளனர்.

அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக, நகர் பகுதிக்கு சென்று திரும்பி வருபவர்களை, அந்த தண்ணீரில் கைகளை சுத்தமாக கழுவிய பின், 'மாஸ்க்' அணிந்து தான், கிராமத்திற்குள் செல்ல அனுமதிக்கின்றனர்.

இது குறித்து, காசவளநாடு இளைஞர்கள் கூறுகையில், 'வெளியூரில் இருந்து வருபவர்களின் முகவரி மற்றும் மொபைல் எண், குறித்து வைக்கப் படுகிறது. உள்ளூர்க்காரர்கள் தேவை இல்லாமல் வெளியில் செல்ல அனுமதி இல்லை. 'கிராம இளைஞர்கள் அனைவரும் செக்போஸ்டில் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறோம்' என்றனர்.

இதேபோல, பட்டுக்கோட்டை அடுத்த புதுக்கோட்டை கிராமத்திலும், செக்போஸ்ட் அமைத்துஉள்ளனர்.புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அடுத்த மேல்மங்கலம் வடக்கு கிராம இளைஞர்கள், கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக, தினமும் காலையில், மஞ்சள் துாள் மற்றும் வேப்பிலை கலந்த தண்ணீரை, அனைத்து வீதிகளிலும் தெளித்து வருகின்றனர்.புதுக்கோட்டை அருகே முள்ளூர் பகுதியில், ஊரடங்கு உத்தரவை கடைப்பிடித்து நடக்க வேண்டும் எனவும், யாரும் வெளியில் வரவேண்டாம் எனவும், தண்டோரா மூலம் அறிவிக்கப்பட்டது.


'வாட்ஸ் ஆப்' குழு
சமீபத்தில் புதிதாக உருவாக்கப்பட்டுள்ள, திருப்பத்துார் மாவட்டத்தில், கொரோனா குறித்து, ஒவ்வொரு கிராமங்களில் அன்றாட நிகழ்வுகளை கண்காணிக்கவும், 'வாட்ஸ் ஆப்'பில், தவறான தகவல்கள் பரவுவதை தடுக்கவும், மாவட்ட போலீசார் சார்பில், வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், நகராட்சி வார்டு, பேரூராட்சி வார்டு, கிராமங்கள், குக்கிராமங்கள் என, ஒவ்வொரு பகுதிக்கும், ஒரு போலீஸ்காரரை அட்மினாக நியமித்து, அதில், அப்பகுதியைச் சேர்ந்த, 200 பேர் குழுவில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அந்தக் குழுவில் உள்ளவர்கள், கொரோனா பற்றி, அப்பகுதியில் அன்றன்று நடக்கும் நிகழ்வுகளை அதில் பதிவிட வேண்டும்.வெளிநாடு மற்றும் வெளியூர்களிலிருந்து யாராவது வந்துள்ளனரா, கொரோனா அறிகுறி யாருக்காவது இருப்பதாக சந்தேகம் உள்ளதா, கொரோனா குறித்த சந்தேகங்கள், போலீசார் சார்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள், அரசு அறிவிப்புகளை பதிவிட வேண்டும்.

மேலும், மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள நடவடிக்கைகள், சுகாதார துறை சார்பில் எடுக்கப்பட்டு உள்ள நடவடிக்கைகள் உள்ளிட்ட விபரங்களை, பதிவு செய்கின்றனர். இதன் மூலம், கொரோனா குறித்த பீதியை போக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது, பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இவ்வாறு தடுப்பு நடவடிக்கைகளுக்கு, பெரும்பாலான மக்கள் முழு ஒத்துழைப்பு அளித்தாலும், சில பகுதிகளில், மக்கள் கூடும் நிகழ்வுகளும் நடக்கின்றன.

உதாரணமாக, சென்னை காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில், நேற்று மீன்கள் வாங்குவதற்காக, பெருமளவு மக்கள் குவிந்தனர். இது குறித்து, மற்றொரு, 'தினமலர்' நாளிதழில் படம் வெளியாகி உள்ளது. இது போன்ற நிகழ்வு களை மக்கள் தவிர்க்க வேண்டும்.காய்கறி, மளிகை கடைகளில், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படுவதை போல, இறைச்சி மற்றும் மீன் மார்க்கெட்களிலும் கடைபிடிக்க, அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தேசிய நெடுஞ்சாலைக்குமாறியது உழவர் சந்தை


கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, சமூக இடைவெளியை ஏற்படுத்தும் நோக்கத்தில், பரவலான இடங்களில், காய்கறி சந்தைகளை அமைக்க, தமிழக அரசு உத்தர விட்டது.இதன்படி, நாமக்கல் மாவட்டம், ப.வேலுார், சுல்தான்பேட்டையில் செயல்பட்டு வந்த உழவர் சந்தை, பழைய தேசிய நெடுஞ்சாலைக்கு, நேற்று இடமாற்றம் செய்யப் பட்டது.

பொதுமக்கள் சிரமமின்றி, காய்கறிகள் வாங்கு வதற்கும், கூட்டத்தை தவிர்ப்பதற்காகவும், டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், ஒவ்வொரு கடைக்கும், 10 மீட்டர் இடைவெளி விடப்பட்டதுடன், கடைக்கு முன், சமூக இடைவெளி கட்டங்கள் வரையப்பட்டன. அவற்றில் மக்கள் வரிசையாக நின்று, காய்கறிகளை வாங்கிச் சென்றனர். மேலும், 'அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும்; கை, கால்களை கழுவ வேண்டும்' என, அறிவுறுத்தப்பட்டு வருகிறது. போலீசார், பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். டவுன் பஞ்., நிர்வாகம் சார்பில், அவ்வப்போது கிருமி நாசினி மருந்தும் தெளிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...