Thursday, March 26, 2020

ஏழைகளை பசியுடன் இருக்க விட மாட்டோம்: சலுகைகளை அறிவித்தது மத்திய அரசு.

'கொரோனா' வைரஸ் பாதிப்பை தவிர்க்க பிறப்பிக்கப்பட்டுள்ள, 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவால் ஏழைகள் பாதிக்கப்படுவதை தவிர்க்க, மத்திய அரசு பல்வேறு திட்டங்களை நேற்று அறிவித்துள்ளது.

'ஏழைகள், பசியுடன் இருக்க விட மாட்டோம்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


latest tamil news

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்.

'கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.அத்தியாவசியப் பொருட்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தொழில் நிறுவனங்கள் உள்ளிட்டவை மூடப்பட்டுள்ளன. இதனால், ஏழை, எளிய மக்கள் வருமானம் இல்லாமல் திண்டாடும் நிலை ஏற்பட்டது.

'மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில், சிறப்பு செயல் குழு அமைக்கப்பட்டுள்ளது' என, பிரதமர், நரேந்திர மோடி அறிவித்திருந்தார்.பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளை நேற்று வெளியிட்டார்.

அவர் கூறியதாவது:வைரஸ் தொற்றை தடுக்க அமல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கால் மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, 1.70 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள சலுகை திட்டங்களை வகுத்துள்ளோம்.உணவு பாதுகாப்பு மற்றும் நேரடி பணப் பலன் திட்டங்களின் கீழ் இவை செயல்படுத்தப்படும். வரும், ஏப்., 1 முதல் இந்த திட்டங்கள் நடைமுறைக்கு வருகின்றன.ஏழை மக்கள் உள்பட எவரும் பசியுடன் இருக்கக் கூடாது என்பதற்காக, இந்த திட்டங்கள் வகுக்கப் பட்டு உள்ளன.

ஊரடங்கால் அதிகம் பாதிக்கப்படும் வாய்ப்புள்ள ஏழை மக்களுக்கு நிவாரணம் கிடைப்பதற்காக, இந்த அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. மற்றப் பிரிவினருக்கும் பாதிப்பு இருந்தால், அவையும் களையப்படும்.

காப்பீடு
கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்கவும், பாதிக்கப் பட்டோருக்கு சிகிச்சை அளிக்கவும், டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட, சுகாதாரத் துறையினர் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர்.வெள்ளை உடை தெய்வங்களாகிய அவர்களுடைய நலனையும் பார்க்க வேண்டும். அந்த வகையில், இவர்களுக்கு, தலா, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள காப்பீடு வழங்கப்படும்.

ஏழை, எளிய மக்கள்
பிரதமர் ஏழைகள் நலத் திட்டத்தின் கீழ், தற்போது, ஏழை எளிய மக்களுக்கு, 5 கிலோ அரிசி அல்லது கோதுமை வழங்கப்படுகிறது.அத்துடன், மேலும், 5 கிலோ அரிசி அல்லது கோதுமை, ரேஷன் கடைகளில் இலவசமாக வழங்கப்படும்.

இதைத் தவிர, ஒரு குடும்பத்துக்கு, அவர்கள் விரும்பும் பருப்பு வகை, ஒரு கிலோ வழங்கப்படும். அடுத்த மூன்று மாதங்களுக்கு இவை வழங்கப்படும். ஒரு மாதத்தில், இரண்டு தவணைகளில், அவர்கள் பெற்றுக் கொள்ளலாம். இதன் மூலம், 80 கோடி மக்கள் பயனடைவர்.

நேரடி பணப் பயன்


நேரடி பணப் பயன் திட்டத்தின் கீழ், எட்டு பிரிவினருக்கு, அவர்களுடைய வங்கிக் கணக்கில், பணப் பயன் செலுத்தப்படும்.விவசாயிகள் நல திட்டத்தின்கீழ், ஆண்டுக்கு, 6,000 ரூபாய், மூன்று தவணைகளாக வழங்கப் படுகிறது. அதில், முதல் தவணையான, 2,000 ரூபாய் உடனடியாக செலுத்தப்படும். இதன் மூலம், 8.69 லட்சம் விவசாயிகள் பயன் பெறுவர்.மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்படும் ஊதியம், 182 ரூபாயில் இருந்து, 202 ரூபாயாக உயர்த்தப்படுகிறது. ஒருவருக்கு, 2,000 ரூபாய் கூடுதலாக கிடைக்கும். இதன் மூலம், ஐந்து கோடி பேர் பயன் பெறுவர்.

மூத்த குடிமக்கள், விதவைகள் மற்றும் ஊனமுற்றோருக்கு, ஒரு முறை சிறப்பு சலுகையாக, 1,000 ரூபாய் பண உதவி, மூன்று மாதங்களில், இரண்டு தவணைகளாக வழங்கப்படும். இதன் மூலம், மூன்று கோடி பேர் பயன் பெறுவர்.

இலவச சிலிண்டர்
பிரதமரின், 'உஜ்வாலா' திட்டத்தின் கீழ், நாடு முழுவதும், 8.3 கோடி ஏழை, எளிய குடும்பத்தைச் சேர்ந்த பெண்களின் பெயரில், சமையல் 'காஸ்' இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.அவர்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, சிலிண்டர் இலவசமாக வழங்கப்படும்.'ஜன்தன்' வங்கி கணக்கு வைத்துள்ள, 20.5 கோடி பெண்களுக்கு, அடுத்த மூன்று மாதங்களுக்கு, மாதத்துக்கு, 500 ரூபாய் வீதம் வழங்கப்படும்.

கடன் உயர்வுதீன் தயாள் தேசிய திட்டத்தின்கீழ், மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, பிணையில்லாமல், தற்போது, 10 லட்சம் ரூபாய் கடன் வழங்கப்படுகிறது.இது, 20 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுகிறது. இதன் மூலம், 63 லட்சம் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த, ஏழு கோடி பெண்கள் பயன்பெறுவர்.

பி.எப்., சலுகை


அமைப்பு சார்ந்த நிறுவனங்களைச் சேர்ந்தவர்களுக்கான, பி.எப்., எனப்படும் வருங்கால வைப்பு நிதிக்கு, ஊழியரின் சம்பளத்தில், 12 சதவீதத்தை ஊழியர் சார்பிலும், நிறுவனம் சார்பில், 12 சதவீதமும் செலுத்தப்படுகிறது. இந்த, 24 சதவீதத்தை, அடுத்த, மூன்று மாதங்களுக்கு மத்திய அரசு செலுத்தும். மொத்தம், 100க்கும் குறைவான தொழிலாளர்கள் உள்ள, அதில், 90 சதவீதம் பேர், 15 ஆயிரத்துக்கு குறைவான சம்பளம் வாங்கும் நிறுவனங்களுக்கு இது பொருந்தும்.

இதைத் தவிர, பி.எப்., கணக்கில், தொழிலாளர் செலுத்தியுள்ள மொத்த தொகையில் இருந்து, 75 சதவீதம் வரை அல்லது 3 மாத சம்பளம், இவற்றில் எது குறைவோ, அதை, தொழிலாளர்கள், முன்பணமாக எடுத்துக் கொள்ளலாம்.இதை திரும்ப செலுத்தத் தேவையில்லை. இதன் மூலம், 4.8 கோடி தொழிலாளர் பயன்பெறுவர்.கட்டுமானத் தொழிலாளர்களுக்கு, கட்டுமானத் தொழிலாளர் நல நிதியில் உள்ள, 31 ஆயிரம் கோடி ரூபாயை, மாநில அரசுகள் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், 3.5 கோடி பதிவு செய்யப்பட்ட தொழிலாளர் பயன்பெறுவர்.இதைத் தவிர, மாவட்ட கனிம நிதியில் உள்ள நிதியை, மருத்துவப் பரிசோதனை, மருத்துவ சேவை அளிக்க, மாநிலங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

சரியான நடவடிக்கை!
ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகள், தினக் கூலி பெறுவோர், தொழிலாளர், பெண்கள் மற்றும் முதியோருக்கு, இந்தியா கடமைபட்டுள்ளது. சரியான பாதையை நோக்கி எடுத்து வைத்துள்ள முதல் அடியாக, இந்த நிதி உதவி திட்டங்கள் அமைந்துள்ளன.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...