Sunday, March 8, 2020

திமுக.,வில் அடுத்த பொதுச்செயலர் யார்? அன்பழகன் இறுதி சடங்கு விவகாரத்தில் சர்ச்சை.

தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன் மறைந்து, மூன்று நாட்களே ஆகும் நிலையில், அவர் வகித்து வந்த பொதுச்செயலர் பதவி யாருக்கு என்பதில், மேலிட தலைவர்களிடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அதே நேரத்தில், அன்பழகன் இறுதிச் சடங்கை, அரசு மரியாதையுடன் நடத்த, கட்சி தலைமை முயற்சிக்காததும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தி.மு.க.,வில், கட்சித் தலைவர் பதவிக்கு அடுத்ததாக, அதிகாரமிக்க பதவியாக, பொதுச்செயலர் பதவி உள்ளது. இந்த பதவியில், 42 ஆண்டுகளாக, பொதுச்செயலராக கோலோச்சியவர் அன்பழகன். கருணாநிதியின் உற்ற நண்பராக விளங்கியதால், இந்த பதவிக்கு யாரும் போட்டியிட்டதில்லை.

இந்நிலையில், உடல் நலக்குறைவால், கடந்த சனியன்று அதிகாலை, அன்பழகன் இறந்தார். அதனால், அடுத்த பொதுச்செயலர் யார் என்பதில், கட்சி மேலிட தலைவர்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. பொதுச்செயலர் பதவியைப் பெற, பொருளாளர் துரைமுருகன் விரும்புகிறார். அன்பழகனுக்கு அடுத்த மூத்த தலைவர் துரைமுருகன் தான் என்பதால், அவருக்கு பொதுச்செயலர் பதவி கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அதே நேரத்தில், முதன்மை செயலர் பதவியிலிருந்து, டி.ஆர்.பாலு விடுவிக்கப்பட்டதால், அவருக்கும், பொதுச்செயலர் பதவி வழங்கப்படலாம் என, கூறப்படுகிறது.

படத் திறப்பு:
பொதுச்செயலர் பதவிக்கு, துரைமுருகன் தேர்ந்தெடுக்கப்பட்டால், அவர் வகித்து வரும் பொருளாளர் பதவியைப் பெற, டி.ஆர்.பாலு, ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, அ.ராஜா போன்றவர்கள் மத்தியில் கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. அன்பழகனின் படத் திறப்பு நிகழ்ச்சியை, வரும், 14ம் தேதி நடத்த, கட்சி தலைமை திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு முன், புதிய பொதுச்செயலர் நியமிக்கப்படலாம் என, கட்சியின் முக்கிய நிர்வாகிகள் தெரிவித்தனர்.

இறுதி சடங்கால் சர்ச்சை:
தி.மு.க., பொதுச்செயலர் அன்பழகன், வயது முதிர்வு, உடல் நலக்குறைவு காரணமாக, கடந்த சனியன்று அதிகாலை இறந்தார். அவரது உடலை, கட்சித் தலைமை அலுவலகமான அறிவாலயத்திற்கு எடுத்துச் சென்று, தொண்டர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்ய வில்லை என்ற குறை, தி.மு.க.,வினர் மத்தியில் நீடிக்கிறது.

திராவிட இயக்கத்தின் வளர்ச்சிக்கும், தமிழ் மொழி வளர்ச்சிக்கும், தமிழ் சமுதாயத்திற்கும், தன் பேச்சு, எழுத்து, மக்கள் பணி வாயிலாக தொண்டாற்றிய பெருமை அன்பழகனுக்கு உண்டு. எம்.பி., - எம்.எல்.சி., - எம்.எல்.ஏ., - அமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் போன்ற பதவிகளை வகித்தவர். அவரது உடலை, அரசு மரியாதையுடன், போலீசார் குண்டு மழை பொழிய, தகனம் செய்திருக்கலாம்.

அரசு மரியாதை:
இதற்கு முன், ஈ.வெ.ராமசாமி, மூப்பனார், சிவாஜி போன்றவர்களின் உடலுக்கு, அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 'அன்பழகனுக்கு அரசு மரியாதை அளிக்க வேண்டும்' என, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் கோரிக்கை விடுத்தார். ஆனால், தி.மு.க., மவுனம் சாதித்ததால், அவரது கோரிக்கைக்கு, அரசு செவி சாய்க்கவில்லை.

தி.மு.க., தலைவர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் என்ற அடிப்படையில், முதல்வர், இ.பி.எஸ்.,சிடம் கோரிக்கை வைத்திருந்தால், அக்கோரிக்கையை, அரசு பரிசீலித்து முடிவெடுத்திருக்கும். ஆனால், தி.மு.க., தலைமை, அந்த முயற்சியை எடுக்கவில்லை என, அக்கட்சியினர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆதங்கம்:
அன்பழகனின் இறுதி ஊர்வலத்தில், சில தலைவர்களை தவிர, தி.மு.க., கூட்டணி கட்சிகளின் முக்கிய தலைவர்கள் பலர் பங்கேற்கவில்லை. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் வெளியிட்ட இரங்கல் செய்தி, அக்கட்சியின் சொத்து மீட்புக் குழு உறுப்பினர் ரஞ்சன்குமார் வாயிலாக, அன்பழகனின் பேரன், வெற்றி அழகனிடம் சமர்ப்பிக்கப்பட்டது. ஆனால், அன்பழகனின் குடும்பத்தினரிடம், காங்கிரஸ் மேலிட தலைவர்கள் யாரும், தொலைபேசி வாயிலாக ஆறுதல் கூறவில்லை என்ற ஆதங்கமும், காங்கிரசாரிடம் ஏற்பட்டு உள்ளது.
அன்பழகன், திமுக, மறைவு, சர்ச்சை, ஸ்டாலின், பொதுச்செயலர், கட்சி தலைமை

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...