எம்.எல்.ஏ.,க்களுக்கான பிரதிநிதித்துவ பிரிவின் கீழ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக உதயநிதி தேர்வாகி உள்ளார். தமிழகத்தில் உள்ள உயர் கல்வி நிறுவனங்களில், குறிப்பாக அரசு பல்கலைகளில், செனட், சிண்டிகேட் மற்றும் அகடமிக் கவுன்சில் என்ற, கல்வி குழுக்கள் செயல்படுகின்றன. சென்னை பல்கலை, காமராஜர் மற்றும் பாரதியார் பல்கலைகளில் மட்டும், செனட் மற்றும் சிண்டிகேட் என்ற இரண்டு கமிட்டிகள் உள்ளன. மற்ற பல்கலைகளில், செனட் கமிட்டி கிடையாது.
யாருக்கு பதவி
ஒவ்வொரு பல்கலையிலும் சிண்டிகேட் கமிட்டியில், ஒன்று அல்லது இரண்டு எம்.எல்.ஏ.,க்கள் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர். சென்னை பல்கலையில் இரண்டு எம்.எல்.ஏ.,க்களும், அண்ணா பல்கலையில் ஒரு எம்.எல்.ஏ.,வும், சிண்டிகேட் பிரதிநிதியாக நியமிக்கப்படுவர். இதற்கான உத்தரவை கவர்னர் பிறப்பிப்பார்.சிண்டிகேட் பிரதிநிதியாக விரும்பும் எம்.எல்.ஏ.,க்கள், சபாநாயகரிடம் விண்ணப்பம் அளித்தால், அதில் யாருக்கு பதவி என்பதை தேர்வு செய்து சபாநாயகர் அறிவிப்பார். அந்த தகவல் பல்கலைகளின் வேந்தரான கவர்னருக்கு அனுப்பப்படும். அதன்பின், சம்பந்தப்பட்ட உறுப்பினரின் நியமனம் குறித்து, கவர்னர் உத்தரவு பிறப்பிப்பார்;
இதுவே வழக்கம்.இதன்படி, அண்ணா பல்கலை உள்ளிட்ட பல்வேறு பல்கலைகளின் சிண்டிகேட் உறுப்பினர்களாக, எம்.எல்.ஏ.,க்கள் நேற்று தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.முதல்வர் ஸ்டாலினின் மகனும், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான உதயநிதி, அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.கடந்த முறை, மயிலாப்பூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., நட்ராஜ், அண்ணா பல்கலை சிண்டிகேட் உறுப்பினராக பதவி வகித்தார்.
![]() |
என்ன அதிகாரம்?
அண்ணா பல்கலை சிண்டிகேட்டின் தலைவராக, துணை வேந்தர் செயல்படுவார். உயர் கல்வி, சட்டம், தொழில், தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகளின் அரசு செயலர்கள் மற்றும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர் ஆகியோரும், அண்ணா பல்கலையின் ஏதாவது ஒரு மைய பாடப்பிரிவு தலைவர் மற்றும் அரசு இன்ஜி., கல்லுாரி துறை தலைவர் என இரண்டு பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்படுவர்.
இவர்களை பல்கலை துணை வேந்தரே பரிந்துரைப்பார்.அதன்பின், தொழில் துறையில் இரண்டு பேர், இணைப்பு கல்லுாரிகளின் முதல்வர்கள் இரண்டு பேர், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக பிரதிநிதியாக இரண்டு பேர் மற்றும் எம்.எல்.ஏ., ஒருவர் என மொத்தம் 14 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்படுகின்றனர்.ஒவ்வொரு மாதமும் சிண்டிகேட் கூட்டத்தில், பல்கலை நிர்வாகம், நிதி நிலைமை, பேராசிரியர், அலுவலர் நியமனம், பதவி உயர்வு, தேர்வு மற்றும் கல்வி கட்டணம் நிர்ணயம் போன்றவை குறித்து விவாதிக்கப்படும்.
அதில் உறுப்பினர்கள் பங்கேற்று, சிண்டிகேட்டில் வரும் தீர்மானங்களை எதிர்க்கலாம் அல்லது ஆதரிக்கலாம். பெரும்பான்மை உறுப்பினர்களின் கருத்துகள் ஏற்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்படும். எம்.எல்.ஏ.,க்கள் மற்றும் அரசு துறை செயலர்கள், எல்லா கூட்டத்திலும் வழக்கமாக பங்கேற்பதில்லை..

No comments:
Post a Comment