Sunday, September 5, 2021

தமிழக கோவில்களில் மொட்டை இலவசம்!

 தமிழக கோவில்களில் முடி காணிக்கை செலுத்த வரும் பக்தர்களுக்கு, மொட்டை அடிக்க இனி கட்டணம் கிடையாது. பொங்கல் திருநாளில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகளும், பணியாளர்களுக்கு சீருடையும் வழங்கப்பட உள்ளது.


மேலும், பழநி, ஸ்ரீரங்கம் கோவில்களை தொடர்ந்து, திருத்தணி, சமயபுரம், திருச்செந்துார் கோவில்களில், நாள் முழுதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்பது உள்ளிட்ட பல அறிவிப்புகளை, ஹிந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு நேற்று வெளியிட்டார்.



சட்டசபையில் அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:



* ஒரு கால பூஜை திட்டத்தின் கீழ் உள்ள கோவில்களில், அர்ச்சகர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும்

* கோவில்களுக்கு 10 ஆண்டுகளாக காணிக்கையாக வந்த நகைகளை, மும்பைக்கு எடுத்து சென்று உருக்கி, வங்கிகளில் முதலீடு செய்வதற்கான பணிகள், ஓய்வு பெற்ற மூன்று நீதிபதிகள் தலைமையில் மேற்கொள்ளப்படும்

* சென்னை, துாத்துக்குடி, திண்டுக்கல், வேலுார், திருவண்ணாமலை, தஞ்சாவூர், திருச்சி, தென்காசி, நாமக்கல் மாவட்டங்களில், 10 இடங்களில், கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் துவங்கப்படும்

* பொங்கல் திருநாளில் 10 கோடி ரூபாய் செலவில் அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள், பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கப்படும்

* பழநி, ஸ்ரீரங்கம் கோவில்களை தொடர்ந்து, திருத்தணி, சமயபுரம், திருச்செந்துார் கோவில்களில் நாள் முழுதும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும்

* முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்ற வரும் பக்தர்களிடம், மொட்டை அடிக்க கட்டணம் வசூலிக்கப்படாது. அதற்கான கட்டணத்தை, அப்பணியில் உள்ளவர்களுக்கு கோவில் நிர்வாகம் செலுத்தும்

* மணமக்களில் ஒருவர் மாற்றுத் திறனாளியாக இருந்தால், கோவிலில் நடக்கும் திருமணத்திற்கு அவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்படாது. கோவில் திருமண மண்டபத்தில் பராமரிப்பு கட்டணம் மட்டுமே வசூலிக்கப் படும்

* திருத்தணி, திருச்செங்கோடு, திருச்சி மலைக்கோட்டை, திருநீர்மலை, திருக்கழுக்குன்றம் கோவில்களுக்கு, 'ரோப் கார்' வசதி செய்வது குறித்து ஆராயப்படும்

* கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை மீட்டு பாதுகாப்பதற்கு, 38 மாவட்டங்களில் உதவி ஆணையர் அலுவலகங்களில் தாசில்தார் பணியிடங்கள் உருவாக்கப்படும்

* சென்னை ஆணையர் அலுவலக வளாகத்தில் 15 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கூடுதல் கட்டடம் கட்டப்படும்

* பக்தர்களுக்கு தரமான திருநீறு மற்றும் குங்கும பிரசாதம் வழங்க, எட்டு கோவில்களில் அவை தயாரிக்கப்படும்

* சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில் உள்ள சீனிவாச பெருமாள் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த தொடர்ச்சி 7ம் பக்கம்


வணிக வளாகம் கட்டப்படும்



* பக்தர்கள் வசதிக்காக 53 கோடி ரூபாய் செலவில் 22 திருமண மண்டபங்கள் கட்டப்படும்

* திருச்செந்துார் சுப்பிரமணியசாமி கோவிலில் 150 கோடி ரூபாயில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படும்

* பெரியபாளையம் பவானி அம்மன் கோவிலில், ஒருங்கிணைந்த அடிப்படை வசதிகள் 125 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்தப்படும்

* சென்னை பூந்தமல்லி நெடுஞ்சாலையில், தனியார் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில், 100 கோடி ரூபாயில் வணிக வளாகம் கட்டப்படும்

* சென்னை காளிகாம்பாள் கோவிலுக்கு ௨ கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெள்ளித் தேர் செய்யப்படும்

* சென்னை மாதவரம் கைலாசநாதர் கோவிலுக்கு ௨ கோடி ரூபாயில் புதிய தெப்பக்குளம் ஏற்படுத்தப்படும்

* வடபழநி ஆண்டவர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் ௯ கோடி ரூபாய் செலவில் அன்னதானக் கூடம், முடி காணிக்கை மண்டலம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும். ௨ கோடி ரூபாய் செலவில் பல்நோக்கு கட்டடம் கட்டப்படும்

* அனைத்து கோவில்களிலும் சூரியசக்தி மின் விளக்குகள் பொருத்தப்படும். கோபுரங்களில் உள்ள இடிதாங்கிகள் ஆய்வு செய்யப்பட்டு புதுப்பிக்கப்படும்.
இவ்வாறு அமைச்சர் அறிவித்தார்.


ரூ.1,000 கோடி சொத்துக்கள் ஆண்டு இறுதிக்குள் மீட்பு!




அமைச்சர் சேகர்பாபு பதிலுரை: இந்த அரசு பொறுப்பேற்றதும், ஒரு கால பூஜை நடக்கும் கோவில்களுக்கு 130 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பல கோவில்களில் திருத்தேர், நந்தவனம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. கோவில்களில் ஒரு லட்சம் தல மரக்கன்றுகள் வளர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. அ.தி.மு.க., ஆட்சியில் 10 ஆண்டுகளில் 3,000 கோடி ரூபாய் மதிப்பிலான கோவில் சொத்துக்கள் மீட்கப்பட்டதாக கூறினர். நாங்கள் ஆட்சிக்கு வந்த 120 நாட்களில் 640 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்களை மீட்டுள்ளோம்.

இந்த ஆண்டு இறுதிக்குள் 1,000 கோடி ரூபாய் சொத்துக்கள் மீட்கப்படும்.

கோவில் கல்வி சாலைகளை நெறிப்படுத்த, முதல் முறையாக 12 கல்வியாளர்கள் தலைமையில் குழு அமைத்துள்ளோம். பல ஆண்டுகளுக்கு பின், கன்னியாகுமரி சாஸ்தா கோவிலில் தினசரி பூஜை நடத்தப்படுகிறது.நாகர்கோவில் ஹிந்து நுாலகம் மீண்டும் இயங்குகிறது. நெல்லையப்பர் கோவிலில் 18 ஆண்டுகளாக மூடிக்கிடந்த வாசல் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன. மேட்டுப்பாளையம் வனபத்திர காளியம்மன் கோவிலில் ஐந்து ஆண்டுகளாக மூடியிருந்த மூன்று வாயில்கள் திறக்கப்பட்டுள்ளன.
தணிகை மலையான் கோவிலில் ௯ ஆண்டுகளாக பஞ்ச ரதம், வெள்ளி ரதம் வீதியுலா வரவில்லை. ராஜகோபுரத்திற்கு செல்ல 365 படிக்கட்டுகள் அமைக்க வேண்டும். அதில் 300 படிக்கட்டுகள் மட்டுமே அமைக்கப்பட்டு அந்தரத்தில் நிற்கிறது. விரைவில் இந்த படிக்கட்டுகள் கட்டப்பட்டு, தணிகை முருகன் வீதியுலா வருவார்; ராஜகோபுரத்தை சென்றடைவார்.
முதல்வர் தந்த ஊக்கத்தால், இந்த ஆட்சி பொறுப்பேற்ற 121 நாட்களில் எண்ணற்ற இறைப் பணிகளை நிறைவேற்றி உள்ளோம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.


'11 ஆயிரம் கிடையாது; 450 கோவில்கள் தான்'


'

அ.தி.மு.க., - அமுல் கந்தசாமி: அ.தி.மு.க., ஆட்சியில் பழமை வாய்ந்த கோவில்கள் புனரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அதேபோன்று, அனைத்து கோவில்களிலும் கும்பாபிஷேகம் நடத்த வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில், 12 ஆயிரத்து 745 நலிவுற்ற கோவில்களுக்கு, ஒரு கால பூஜை வைப்பு நிதியாக, தலா ௧ லட்சம் ரூபாய் வழங்கினர். அதை, 2 லட்சம் ரூபாயாக உயர்த்த வேண்டும்.

கோவை மாவட்டத்தில், ஆக்கிரமிப்பில் உள்ள கோவில் நிலங்களை மீட்க வேண்டும். அ.தி.மு.க., ஆட்சியில், கொரோனா காலத்தில் தொழிலாளர்களுக்கு பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டன. வெளிமாநில தொழிலாளர்கள் தங்குவதற்கு விடுதி கட்டப்பட்டது.
அமைச்சர் தாமோதரன்: கோவையில், 30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தங்கும் விடுதி விரைவில் கட்டப்பட உள்ளது.

அமைச்சர் சேகர்பாபு: அ.தி.மு.க., ஆட்சியில், 11 ஆயிரம் கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்ததாக கூறினர். ஆனால், ஆராய்ந்து பார்த்ததில், ஐந்து ஆண்டுகளில் 450 கோவில்களுக்கு மட்டுமே கும்பாபிஷேகம் நடந்துள்ளது. தற்போது, அனைத்து கோவில்களுக்கும் கும்பாபிஷேகம் நடத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார். முதற்கட்டமாக, 300 கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடக்கஉள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...