முதல் வழிபாட்டை தனக்கென்று உரித்தாக்கிக் கொண்ட மூர்த்தியாம் அருள்மிகு விநாயகப் பெருமான் அனைவருக்கும் பிடித்த எளிய தெய்வம் ஆவார்.
எல்லோரும் அவரைச் சுற்றுகிறோம், எத்தனையோ வரங்களைக் கேட்கிறோம். ஏதாவது அவருக்கு தர நினைக்கிறோமா?....
தரணியே போற்றும் தமிழ் மூதாட்டியாம் ஔவையார் எப்படி வரம் வேண்டினார் தெரியுமா?...
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்துனக்கு நான் தருவேன் – கோலஞ்செய்
துங்கக் கரிமுகத்துத் தூமணியே நீ எனக்கு
சங்கத்தமிழ் மூன்றும் தா.....
சங்கத்தமிழ் மூன்றையும் கேட்கிறார், நான்கு பொருளை தருவதாகக்கூறி. இறைவனுக்கு, நாம் விரும்பும் உணவினையெல்லாம், அவன்விரும்பும் உணவுப்பொருள்களாகச் சொல்லி படையலிட்டு வணங்கி, நாம் நமது வேண்டலை அவனிடம் வைப்பதுதான் நமது வழக்கம். ஆனால், ஔவையாரோ, பாலையும், தேனையும், பாகையும், பருப்பையும் கலந்து "நான் தருவேன்" என்று கூறுகிறார். நீயெனக்கு மூன்று தமிழைக் கொடுத்தால் உனக்கு இதனை நான் தருவேன் என்கிறார்.
○ தமிழ்ச்சுவையின் ஆழம்...
பசு தருகின்ற பால், தூய்மையான தேன், இவற்றின் சுவையை அறியாதவர்கள் இருக்கவே முடியாது.
பாகு என்பது கருப்பஞ்சாற்றில் செய்யப்பட்ட வெல்லத்தை காய்ச்சி எடுப்பது. அதன் சுவையும் அளவிட முடியாது.
பருப்பு என்பது பாசிப்பயறு அல்லது பச்சைப் பயற்றை மசித்து, பால் கலந்து, அதனுடன் தேனையும், வெல்லப் பாகினையும் சேர்த்து காய்ச்சிய பால் பாயசம் எத்தனை சுவை என்பதையும், அந்த சுவையின் ஆழத்தையும் அளவிட முடியுமோ. அவற்றையும் தர என்னால் இயலும்.
ஆனால், அதை விட பன்மடங்கு சுவையுடைய தேன்தமிழை நீ எனக்கு தந்தருள வேண்டும் இறைவனே! என்று, அந்த அம்பிகை புதல்வரிடம் வேண்டுகிறார் ஔவை பிராட்டி.
இதிலிருந்தே, தமிழின் இனிமையும் ஆழமும், அதை வழங்கிய இறைவன் எத்தகைய கருணைக்கடல் என்பதையும் நம்மால் அறிய முடிகிறது.

No comments:
Post a Comment