*தமிழ் சினிமாவில் ஆண் பெண் உறவு பற்றிய வெளிப்படையான படமொன்றை உருவாக்கியவர் ருத்ரய்யா.*
ஒரே படத்தின் மூலம் உச்சாணிக்கொம்பில் ஏற்றிவைக்கப்பட்ட இயக்குநரும் அவர்தான்.
அவருக்கு அளவுக்கதிக புகழ் கிடைத்துவிட்டது என்று கூறுவோர் உண்டு.
அந்த அளவுக்குத் தகுதி கொண்ட படமல்ல
‘அவள் அப்படித்தான்’ என்பது தீவிரமான மனப்போக்கு கொண்ட சிலரது எண்ணம். ஆனாலும், ஒரு பொதுவான ரசிகனின் ரசனையில் அவருடைய ‘அவள் அப்படித்தான்’ எதிர்பாராத குறுக்கீடுகளை நிகழ்த்தியது.
தமிழ் சினிமாவும் தமிழ் மனநிலையும் பெண், பெண்மை குறித்து உருவாக்கிய கற்பிதங்களை அடித்து நொறுக்கியதுதான் அந்தப் படத்தின் முதல் வெற்றி.
பெண்கள் எப்போதும் ஆண்களால் ஆபத்துக்காலத்தில் காப்பாற்றப்பட வேண்டியவர்கள், வெட்கமும் நாணமும் பின்ன குழையக் குழைய நடக்கவேண்டியவர்கள், படித்த பெண் திமிர் பிடித்தவள், பெண்கள் ஆண்களைப் போல் உடை அணியக்கூடாது, பெண்களின் தாலி ஆர்.டி.எக்ஸ், அணுகுண்டைவிட வலிமையான ஆயுதம், பெண்ணின் தாலி மீது யாராவது கை வைத்தால் போதும், இடி இடித்து, மின்னல் மின்னி, கோயில் மணிகள் தானாக அடித்து பிரளயமே உருவாகும், காதலிக்கும்போதும் டூயட் காட்சிகளிலும் நவீன ஆடைகளும், திருமணம் ஆனபிறகு தழையத் தழைய புடவையும் அணிபவள்தான் பெண் என்றெல்லாம் தமிழ் சினிமா உருவாக்கிவைத்த பிம்பங்கள் ஏராளம். ஆனால்
‘அவள் அப்படித்தான்’ அதையெல்லாம் அடித்து உடைத்தது. பெண்ணுக்கான சுயத்தை இயல்பாக முன்வைத்தது.
ஒரு பெண்ணுக்கு ஒருமுறைதான் காதல் வரும் என்ற அபத்தமான சூத்திரத்தைத் தகர்த்தது.
1978-ல் அந்தப் படம் வெளியான பின்னர் தமிழ் சினிமாவின் மரபு வேலிகள் திசையறியாது தவித்தன.
அதுவரையான பெண் கதாபாத்திரங்களை எல்லாம் அது மிகச் சிறியதாக மாற்றிவிட்டு விஸ்வரூபம் எடுத்திருந்தது. கே.ராஜேஷ்வர், வண்ணநிலவன் ஆகியோருடன் இணைந்து இதன் திரைக்கதையை எழுதியிருந்தார் ருத்ரய்யா. அவர்கள் படைத்த மஞ்சு கதாபாத்திரம் தமிழ் சினிமாவின் நவீனப் பாத்திரங்களுக்கு முன்னோடியாகவே விளங்கியது. அதுவரை அப்படியொரு துணிச்சலான கதாபாத்திரம் எந்த ஒரு தமிழ்த் திரைப்படத்திலும் இடம்பெற்றிருந்ததா என்பது சந்தேகமே.
இன்றுவரை அந்தப் படம் பேசப்படுவதற்கு முக்கியமான காரணம் மஞ்சுவாக நடித்திருந்த ஸ்ரீபிரியாதான்;
அல்லது ஸ்ரீபிரியா ஏற்றிருந்த மஞ்சு கதாபாத்திரம்தான். ஒரு நடிகையாகத் தனது படைப்புத்திறனின் உச்சத்தை மஞ்சு கதாபாத்திரம் வழியே அவர் வெளிப்படுத்தியிருந்தார். பெண் விடுதலை, பெண்களின் நிலைமை போன்ற பல விஷயங்களைப் பேசும் இந்தப் படத்தின் வழியே சமூகத்தின் போலித்தனத்தையும் அம்பலப்படுத்தினார் ருத்ரய்யா.
*‘அவள் அப்படித்தான்’*
மஞ்சுவை மட்டுமல்ல, மஞ்சு போன்ற எவரையும் உங்களால் புரிந்துகொள்ள முடியாது என்பதுதான் அப்படத்தின் அடிப்படைச் செய்தி. இதே செய்தியை வெவ்வேறு இயக்குநர்கள் வெவ்வேறு படங்கள் வழியே காட்சிப்படுத்தியிருக்கிறார்கள்.
அவள் அப்படித்தான்’ உள்ளடக்கத்தைப் போலவே அது படமாக்கப்பட்டவிதமும் சிறந்த முன்மாதிரிதான். இந்தப் படத்துக்கென்று தனியாக காஸ்ட்யூம் டிசைனர் இல்லை. ரஜினியும், கமலும், ஸ்ரீப்ரியாவும் அன்றைக்கு என்ன உடை அணிந்துவருகிறார்களோ, அதுதான்
அன்று எடுக்கப்பட்ட காட்சிக்கான உடை. இதேபோல் ‘அவள் அப்படித்தா’னுக்கு இன்னொரு தனித்துவமும் இருக்கிறது. முதன்முதலாக ஓர் ஆவணப்பட இயக்குனரை நாயகப் பாத்திரம் (கமல்) ஆக்கியிருப்பார் ருத்ரய்யா.
உண்மையில் அன்றைய தமிழ் சினிமா ரசிகர்களுக்கு ஆவணப்பட இயக்குனர் என்ற வகையினத்தைப் பற்றித் தெரியுமா என்றுகூட தெரியவில்லை. ஆனால் இவையெல்லாம் ருத்ரய்யாவின் துணிச்சலால்தான் சாத்தியமானது.
அவர் இயக்கிய இரண்டு படங்களில் இரண்டாம் படமான ’கிராமத்து அத்தியாயம்’ அவருக்கு எந்த வகையிலும் பெருமை சேர்க்கவில்லை. அது முதல் படத்திற்கு மாறாக முற்றிலும் சுமாரான படம் என்றுதான் சினிமா விமர்சகர்கள் பதிவு செய்கிறார்கள். ஒரு வெற்றிகரமான இயக்குனராக இல்லாததாலோ என்னவோ அதற்குப்பிறகு ருத்ரய்யா படங்கள் எதையும் இயக்கவில்லை. ஆனால் ருத்ரய்யா என்ற ஆளுமையை நினைப்பதற்கும், கொண்டாடுவதற்கும், எதிர்காலத் தலைமுறைக்குக் கற்பிப்பதற்கும் ‘அவள் அப்படித்தான்’ மட்டுமே போதும்/
இளையராஜாவின் இசையில் என்றும் நம் நினைவுகளை இனிக்கவைக்கும் ‘அவள் அப்படித்தான்’ பாடல் வரிகள் இவை...
உறவுகள் தொடர்கதை
உணர்வுகள் சிறுகதை
ஒருகதை என்றும் முடியலாம்.
முடிவிலும் ஒன்று தொடரலாம்
இனி எல்லாம் சுகமே!
ருத்ரய்யா காலாகாலமும் நம் நினைவுகளில் தொடரக்கூடியவர்.

No comments:
Post a Comment