'கடந்த 1975ல் அப்போதைய பிரதமர் இந்திராவை தகுதி நீக்கம் செய்து வழங்கப்பட்ட தீர்ப்பு மிகவும் துணிச்சலானது,'' என, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினார்.
உத்தர பிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜில், அலகாபாத் உயர் நீதிமன்ற வளாகத்தில் புதிய கட்டடம் கட்டுவதற்கான அடிக்கல்லை, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று நாட்டினார். மேலும், பிரயாக்ராஜில் தேசிய சட்ட பல்கலைக்கழகம் அமைப்பதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரமணா பேசியதாவது:அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு, 150 ஆண்டுக்கும் மேற்பட்ட வரலாறு உள்ளது. இந்த உயர் நீதிமன்றம், 1975 வழங்கிய ஒரு தீர்ப்பு நாட்டையே உலுக்கியது.அப்போதைய பிரதமர் இந்திராவை எம்.பி., பதவியிலிருந்து தகுதி நீக்கம் செய்து, அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி ஜக்மோகன்லால் சின்ஹா வழங்கிய தீர்ப்பு தான் அது. அந்த தீர்ப்பு மிகவும் துணிச்சலானது.நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்துவதற்கு காரணமாக அமைந்தது. இதற்கு மேல் இந்த தீர்ப்பு பற்றி பேச விரும்பவில்லை.
![]() |
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் முன்னாள் வழக்கறிஞர் என்பதால் நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் சந்தித்து வரும் பிரச்னைகளை நன்கு உணர்ந்துள்ளார்.
உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை பல்வேறு மொழிகளில் மொழி மாற்றம் செய்து வெளியிட வேண்டும் என்ற ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் விருப்பம், இப்போது அமலுக்கு வந்துள்ளது. நாட்டில் பல நீதிமன்றங்களும் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட கட்டடங்களில் தான் செயல்பட்டு வருகின்றன. உள்கட்டமைப்பு வசதிகள் இல்லை என்பதுடன், கட்டடங்களும் சிதிலம் அடைந்துள்ளன.இது நீதிபதிகள், வழக்கறிஞர்கள் ஆகியோருக்கு மட்டுமின்றி மனுதாரர்களுக்கும் பிரச்னையாக உள்ளது.
சிறந்த உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய கட்டடத்தில் பணியாற்றினால் தான், நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களால் சிறப்பாக செயல்பட முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.

No comments:
Post a Comment