ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார்.

சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சமைத்த அன்னத்தை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு உணவிற்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தருவதுண்டு.




அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது.





No comments:
Post a Comment