Sunday, December 26, 2021

தி.மு.க.,வை புரிந்து கொள்வோம்!

 அரசு அதிகாரிகள் அனைவரும் தங்கள் சொத்து விபரங்களை, 2022 ஜன., 31க்குள் தெரிவிக்க வேண்டும்' என, தமிழக அரசு சமீபத்தில் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்து இருக்கிறது.மேலோட்டமாக பார்க்கும் போது, அதிகாரிகள் அனைவரும், 'கை' சுத்தத்தோடு இருக்க வேண்டும் என்பதற்காகவே, தி.மு.க., அரசு இப்படியொரு உத்தரவை பிறப்பித்து இருக்கிறது என்று கருத இடமுண்டு.ஆனால், தி.மு.க., அரசின் திட்டமே வேறு!தி.மு.க., 10 ஆண்டுகளுக்கு முன் ஆட்சிக் கட்டிலில் உட்கார்ந்து இருந்த போது பணியாற்றிய அதிகாரிகளின் சொத்து விபரங்கள் அனைத்தும், கட்சி தலைமையின் விரல் நுனியில் இருக்கும்.கடந்த 10 ஆண்டுகளில் அதிகாரிகள் பலர் பணி நிறைவு பெற்றிருப்பர்; தமிழகத்தில் இருந்து அகன்று சிலர், அவரவர் சொந்த மாநிலங்களுக்கு சென்றிருப்பர்; இடையில் புதிய அதிகாரிகளும் பொறுப்புக்கு வந்திருப்பர்.ஏற்கனவே பதவியில் இருந்த அதிகாரிகளும், புதிதாக பதவிக்கு வந்திருக்கும் அதிகாரிகளும், 10 ஆண்டுகளில் எவ்வளவு சொத்து குவித்துள்ளனர் என்று தெரிந்து கொள்ளும் பொருட்டே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.அதிகாரிகளின் சொத்து மதிப்பு தெரிந்தால், அதன் மூலம், அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்களின் சொத்து மதிப்பையும் உத்தேசமாக கணக்கிட்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம் என, தி.மு.க., அரசு நினைக்கிறதோ?

 இது உங்கள் இடம்சரி... அதிகாரிகளிடம் சொத்து மதிப்பை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்த தமிழக அரசு, அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளிடம் எந்த விபரத்தையும் கேட்கவில்லை என்பதை கவனித்தீரா... அது தான் தி.மு.க.,வின் அரசியல்!அரசியல்வாதிகள் தேர்தலில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் போது, பொய்யான சொத்து விபரங்களை குறிப்பிடுவர்.தமிழக அரசு அப்படி ஒரு உத்தரவு பிறப்பித்தாலும் கூட, அந்த அரசியல்வாதிகளிடம் இருந்து உண்மையான சொத்து விபரங்கள் வெளியில் வராது.சொத்து விபரத்தை கேட்டால், மக்கள் பிரதிநிதிகள் பொய் தான் சொல்வர். அவர்களை, அந்த பொய்யை கூட சொல்ல விடாமல் பாதுகாக்கிறது பார்த்தீரா... அதுதாங்க தி.மு.க.,வின் கடமை, கண்ணியம், கட்டுப்பாடு!
கோரிக்கை அபத்தம்!
 'ஆதார்' எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைக்க சட்டம் இயற்றியது வரவேற்கத்தக்கது.தேர்தல் மீது, மக்களுக்கு நம்பகத்தன்மை குறைந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இதை சரிசெய்ய, ஆதார் எண் இணைப்பு அவசியமானது.இனி, 'தேர்தலில் ஓட்டளிப்பு முறையில் முறைகேடு நடந்துள்ளது, கள்ள ஓட்டு போட்டுள்ளனர்' என, குற்றஞ்சாட்ட முடியாது.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே வாய்ப்பு வழங்கப்பட்டு வந்தது. இனி இது, ஆண்டுக்கு நான்கு முறையாக அதிகரிக்கப்படும். இதுவும் நல்ல விஷயம் தான்.நல்லதோ, கெட்டதோ மத்திய அரசு செயல்படுத்தும் எந்த திட்டத்தையும் எதிர்க்க வேண்டும் என்பது தான், எதிர்க்கட்சிகளின் எண்ணமாக இருக்கிறது.ஆதார் எண்ணை, வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பதில் என்ன பிரச்னை உள்ளது? இதற்காக மக்களிடம் கருத்து கேட்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் கூறுவது ஏற்புடையது அல்ல.நம் நாட்டின் ஜனத்தொகை தெரிந்தும், எதற்கெடுத்தாலும் மக்களிடம் ஓட்டெடுப்பு நடத்த வேண்டும் என்பது சாத்தியமானதா?தேர்தல் சீர்திருத்த நடவடிக்கையில் எதிர்க்கட்சிகளின் கோரிக்கை அபத்தமானது.
குழுவால் என்ன பயன்?


தமிழகத்தில் எதற்கு பஞ்சம் இருக்கோ, இல்லையோ குழுக்களுக்கு பஞ்சமே இல்லை.கட்டடம் இடிந்ததா, பேருந்து விபத்தா, மர்ம மரணமா, மழை வெள்ள பாதிப்பா... எது நடந்தாலும், உடனே ஆராய ஒரு குழுவை அமைத்து, தன் கடமையை நிறைவேற்றி விடும், தமிழக அரசு.இப்படித் தான், சமீபத்தில் திருநெல்வேலியில் ஒரு பள்ளிக் கட்டட சுவர் இடிந்து மூன்று குழந்தைகள் பலியான போதும் நடந்துள்ளது.தமிழக அரசு உடனே, 48 பேர் உடைய குழு அமைத்து, மாநிலத்தில் உள்ள அனைத்து பள்ளிகளையும் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்கச் சொன்னது.அக்குழுவின் பரிந்துரையின் படி, மோசமான நிலையில் உள்ள பல பள்ளி கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளன; இறந்து போன பிஞ்சு குழந்தைகளின் குடும்பத்திற்கு நஷ்டஈடும் கொடுக்கப்பட்டுள்ளது.சில கட்டடங்களை இடித்தால் மட்டும், இப்பிரச்னைக்கு தீர்வு வருமா எனத் தெரியவில்லை.
ஆனால் பொதுமக்களை நம்ப வைக்க, அந்த நேரத்துக்கு குழு என்ற பெயரில் கூத்துக் கட்டுவதோடு சரி.பள்ளிக்கு, 'இன்ஸ்பெக் ஷன்' வரும் அதிகாரிக்கு, விருந்து கொடுத்து கவனிப்பதில் தான், கல்வி நிர்வாகம் அக்கறை செலுத்துகிறது; அதே போல கல்வி அதிகாரிகளும் வந்தோம், போனோம் என்று தான் இருக்கின்றனரே தவிர, ஈடுபாட்டோடு ஆய்வு செய்வதில்லை.உயிர்பலி ஏற்பட்டால், அரசைப் பொறுத்தவரை நஷ்டஈடு கொடுத்து, ஆய்வு என்ற பெயரில் ஒரு குழு அமைத்தால் போதும்.தலை வாரி, பூச்சூடி பாடசாலைக்கு செல்லும் பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பில்லை; ஆயிரம் கனவுகள் சுமந்து கல்விக்கூடம் வரும் மாணவன் உயிருக்கு உத்தரவாதமில்லை. தான் பெறாத கல்வியை, தன் பிள்ளைகளாவது பெறட்டுமே என்று பள்ளிக்கு அனுப்பும் பெற்றோருக்கும் நிம்மதியில்லை.
இதற்கு யார் அல்லது எது காரணம்?அரசை கேட்டால், கல்வித்துறையைக் கை காட்டும்; கல்வித்துறையை கேட்டால், பள்ளி நிர்வாகத்தைக் கை காட்டும். அவரவர் தப்பித்து கொள்ளத் தான் நினைக்கின்றனரே தவிர, அநியாயமாக மாணவர்கள் பலியாகின்றனர் என்று யாருமே எண்ணுவதில்லை.விபத்து நடந்த பின் விழிப்பதால் பயனில்லை. 'வருமுன் காப்போம்' என்று நம்பகத்தன்மையோடு செயலாற்ற வேண்டும். வருங்காலத்தைப் பற்றிய பல வண்ணக் கனவுகளோடு பள்ளிக்குச் செல்லும் மாணவச் செல்வங்கள் அச்சமின்றி கல்வி கற்கும் சூழலை ஏற்படுத்திக் கொடுங்கள்.விபத்துக்கு பின் அமைக்கப்படும் ஆய்வுக் குழுவால், அப்பாவி மக்களை திருப்திபடுத்தலாம். ஆனால், பள்ளி சென்ற பிள்ளை வீடு திரும்பவில்லையே என்று வேதனையில் வாடும் பெற்றோருக்கு இந்த குழுவால் என்ன பயன்?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...