Tuesday, December 28, 2021

தி.மு.க.,வின் பெயரை மாற்றுவீரா?

 இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலாக, சித்திரை முதல் நாளை தமிழ் புத்தாண்டாக, உலகமெங்கும்உள்ள தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர்.இந்நிலையில் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக மாற்ற, தமிழகத்தில் ஆட்சி அமைத்துள்ள தி.மு.க., அரசு பகீரத பிரயத்தனம் செய்து

கொண்டிருக்கிறது. அதுவும், திராவிடத்தை முன்னிலைப்படுத்த கட்சி முயற்சிக்கிறது என்றால், அதன் உள்நோக்கம் நல்லதாக இருக்க வாய்ப்பில்லை.தமிழர்கள், தமிழகத்தில் மட்டுமின்றி இலங்கை, சிங்கப்பூர், மலேஷியா, கனடா போன்ற நாடுகளிலும் அதிகமாக வசிக்கின்றனர். தமிழக அரசின் ஆணை, அவர்களை கட்டுப்படுத்த போவதில்லை.
தமிழகத்தில் உள்ள தி.மு.க., தொண்டர்கள் மட்டும் தை மாதம் முதல் நாளை, தமிழ் புத்தாண்டாக கொண்டாடுவர்; ஆனால், உலகமெங்கும் உள்ள தமிழர்கள் அனைவரும், சித்திரை முதல் நாளை தான் கொண்டாடுவர்.
அது, தி.மு.க., அரசுக்கு அவமானத்தை ஏற்படுத்தும் என்பதை, முதல்வர் ஸ்டாலின் உணர வேண்டும்.தமிழ் புத்தாண்டு என்பது, தமிழர்களின் பண்பாட்டுடன் பின்னிப் பிணைந்தது. அசுவினி முதல் ரேவதி வரை, 27 நட்சத்திரங்களையும்; மேஷ ராசி துவங்கி மீனம் வரையுள்ள, 12 ராசிகளுக்குள்
வரையறுத்து வைத்தான் தமிழன். 12 மாதங்களுக்கும் முறையே ஒவ்வொரு ராசி என, கணக்கிட்டு வைத்தான்.தமிழர் பண்பாட்டை சிதைக்க முற்பட்டால், வாழ்வியலில் ஏராளமான மாற்றங்களை செய்ய வேண்டி வரும்.

குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என, தமிழ் நிலப்பரப்பை ஐந்தாக பிரித்து, அவற்றிற்கு முறையாக முருகன், திருமால், இந்திரன், வருணன், கொற்றவை போன்ற இறை வடிவங்களை வழிபடுகிறான், தமிழன்.நாளையே, 'கருணாநிதியின் வம்சாவளியினரை, ஐவகை நிலங்களின் தலைவர்களாக நியமித்து புதிய அரசாணை வெளியிடுவோம்' என, தி.மு.க., அரசு முயற்சி செய்தால், அதற்கு முன்னால், தமிழ்
இலக்கண நுால்களில் மாறுதல் செய்ய வேண்டும்.'மாயோன் மேய காடுறை உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும், வேந்தன் மேய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லியமுறையான் சொல்லவும் படுமே' என்கிறது, தொல்காப்பியம்!முதல்வர் ஸ்டாலினுக்கு தமிழ் இலக்கியம், பண்பாடு, கலாசாரம், வரலாறு தெரியுமா?உண்மையிலேயே முதல்வர் ஸ்டாலினுக்கு, தமிழ் மீது பற்று இருந்தால், திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியின் பெயரை, 'தமிழர் முன்னேற்ற கழகம்'என்று மாற்றட்டும். அதற்கு பின், தமிழ் புத்தாண்டை மாற்றுவது குறித்து யோசிக்கலாம்!


தொடரட்டும் சீரிய பணி!



ச.ஜான் பிரிட்டோ, திண்டுக்கல்லிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சட்டப்பேரவை, நீதி, நிர்வாகம் உட்பட்ட வரிசையில், ஜனநாயகத்தின் நான்காவது துாணான பத்திரிகையும் துருப்பிடித்து வருகின்றன' என, முன்னாள் முதல்வர் கருணாநிதி தன், 93வது பிறந்த நாள் அறிக்கையில் தெரிவித்து இருந்தார்.இதற்காக கோபப்பட்டு, பத்திரிகைகள் அப்போதே கருணாநிதி மீது மானநஷ்ட, அவதுாறு வழக்கு போட்டிருந்தால், அது சம்பந்தமாக அவர் தன் இறுதிகாலம் வரை, விசாரணைக்காக அலைக்கழிக்கப்பட்டிருப்பார்.ஆனால், அப்போது கருணாநிதி முதல்வராக இருந்ததால், கவுரவமான முறையில் அந்த வார்த்தை பிரயோக பிரச்னை அதோடு தீர்ந்து விட்டது.கருணாநிதி கூறிய அதே நோக்கில், நம் நாளிதழின், 'டீக்கடை பெஞ்ச்' பகுதியில், அரசு துறையில் நிகழ்ந்த முறைகேடுகளை வெளியிட்டிருந்த காரணத்திற்காக, அவதுாறு வழக்கு போடப்பட்டது.மேல்முறையீட்டின் மூலம், 17 ஆண்டுகளுக்கு பின் அந்த வழக்கு தற்போது உயர் நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பது, நீதியின் மேல் உள்ள நம்பிக்கையே பறைசாற்றுகிறது.அனைத்து துறைகளிலும் நல்லவர், கெட்டவர், கடமை செய்பவர், அத்துமீறுவோர் இருப்பர்; இது தான் இன்றைய சமூக நீதி!அரசு துறையின் ஊழலை, பத்திரிகை வெளிச்சமிட்டு காட்டினால், அதன் மீது வழக்கு தொடுப்பதும்; மக்களை திசை திருப்பி, முறைகேட்டில் இருந்து தப்பிக்க பார்ப்பதும், அரசியல்வாதிகளின் தந்திரம்! 'தர்மமே மறுபடியும்வெல்லும்' என்ற உண்மை தத்துவத்தின்படியாக, ஜனநாயகத்தின் நான்காவது துாணான பத்திரிகையின் சுதந்திரத்தை பேணிக் காக்க, உயர் நீதிமன்றம் தற்போது உத்தரவிட்டதீர்ப்பு வரலாற்று சிறப்பு மிக்கதாகும்.'தினமலர்' என்றும் மக்களின் நலனுக்காகவும், ஊழலுக்கு எதிராகவும் தொடர்ந்து போராடும் என்பதில், வாசகர்களான எங்களுக்கு பெரும் நம்பிக்கை உள்ளது; தொடரட்டும் நம் நாளிதழின் சீரிய பணி!


முதல்வர் உத்தரவிடுவாரா?


பொ.பாலாஜி கணேஷ், சிதம்பரம், கடலுார் மாவட்டத்திலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முதல்வர் ஸ்டாலின், சமீபத்தில் 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கத்தை துவக்கியுள்ளார். 'பிளாஸ்டிக்கை ஒழித்து, மீண்டும் நாம் மஞ்சள் பையை கையில் எடுக்க வேண்டும்' என்ற கோஷத்தை, தமிழக அரசு முன்னெடுத்துள்ளது.இது ஒரு நாள் சம்பிரதாய நிகழ்வாக இல்லாமல், பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்கும் நடவடிக்கையாக இருக்க வேண்டும்.பிளாஸ்டிக் ஒழிப்பு எனும் அரசின் நோக்கத்தை, அரசு அதிகாரிகள், போலீசார், ஊழியர்கள் என, அனைவரும் ஒன்றிணைந்து நிறைவேற்ற வாய்ப்பு இருக்கிறதா?
முதல்வரின் இந்த அறிவிப்பை காரணமாக கூறி கடை கடையாக சென்று, 'தெரியாமல் விற்பனை செய்யுங்கள்' என அனுமதி கொடுத்து, வசூலில் இறங்க போகின்றனரா?பிளாஸ்டிக் ஒழிப்பு என்பதில், தி.மு.க., அரசுக்கு உண்மையான அக்கறை இருக்கிறது என்றால், 'மீண்டும் மஞ்சப்பை' இயக்கம் வெற்றி பெற வேண்டும் என்றால்,முதல்வர் ஸ்டாலின், அதிகாரிகளிடம் தான் கெடுபிடி காட்ட வேண்டும்.பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலை மற்றும் விற்பனை செய்யும் கடையை, எளிதில் அடையாளம் கண்டுகொள்ள முடியும்.பிளாஸ்டிக் எப்படியும்மக்களின் கைகளுக்கு தான் வரும். அதை நுால் பிடித்து சென்றால்,பிளாஸ்டிக் உற்பத்தி தொழிற்சாலையை கண்டுபிடித்து விடலாம். அதற்கு அரசு அதிகாரிகளும், போலீசாரும் தான் களமிறங்க வேண்டும்.முதல்வர் ஸ்டாலின், அவர்களுக்கு உத்தரவிடுவாரா?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...