இது குடும்பத்திற்கு மட்டும் அல்ல..
சமூக கொடுமைகளுக்கும் பொருந்தி நிற்பதை அவ்வப்போது பார்த்திருப்போம்.!
அதற்கு சிறந்த உதாரணமே இந்தக் கதை..!
ஒரு கிராமத்தில் கணவனும், மனைவியும் வாழ்ந்து வந்தனர்.
கணவன் மனைவியை அவ்வப்போது, கடுஞ்சொல்லால் திட்டித் தீர்த்துவிடுவார்.
சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் பெரிய சண்டையாக மாற்றிவிடுவார்.
பொது இடம் என்றெல்லாம் பார்க்காமல் பிறர் முன்னிலையில், தன் மனைவியை திட்டித் தீர்ப்பார். சில நேரம் அடிக்கவும் செய்வார்.
இப்படியே போய்க் கொண்டு இருந்தது வாழ்க்கை. இந்த நிலைக்கு முடிவு கட்ட வேண்டும் என நினைத்தாள் மனைவி...!
ஒரு நாள் தன் கணவரிடம், “நீங்க எப்போது பார்த்தாலும் என்னைத் திட்டுவதும், அடிப்பதுமா இருக்கீங்க, அதனால் எனக்கு வாழ்க்கையில் நிம்மதியோ, மகிழ்ச்சியோ இல்லாமல் ஒவ்வொருநாளும் கழிகின்றது. தினமும் நரகத்தில் இருப்பதைப்போல உணருகிறேன். இந்த நிலைமை மாறவேண்டும் என்றும் நினைக்கிறேன். நீங்கள் என்னை அடிக்காமலும், திட்டாமலும் இருக்க நான் என்ன செய்ய வேண்டும்” என்று கேட்டாள்.
“நீ என்னை அனுசரித்தும்...
புரிந்தும் நடந்து கொள்ள வேண்டும்” என்றார் கணவர்.
“நான் தவறு செய்வதாக எனக்குத் தெரியவில்லை. நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டு என் மீது கோபம் கொள்வதாக தோன்றுகிறது. நீங்களும்தான் என்னைப் புரிந்து கொள்ள வேண்டும்” என்றாள் மனைவி.
"இதற்கு ஒரு முடிவு கட்டியாக வேண்டும். அதற்கு நீங்களே ஒரு வழியைச் சொல்லுங்கள்” என்று கூறினாள் மனைவி.
சிறிது நேரம் ஆலோசித்த கணவன், “சரி எனக்கு இணையாக நீ, வேலை செய்ய வேண்டும் அப்படி நீ செய்தால் உன்னை திட்டுவதையோ, அடிப்பதையோ நான் நிறுத்திக் கொள்கிறேன்“ என்றான்.
“சரி, அப்படியே செய்கிறேன். அதேபோல நீங்களும் எனக்கு இணையாக வேலை செய்ய வேண்டும். உங்களை விட குறைவான வேலையை நான் செய்வதாகத் தெரியவில்லை.” என்றாள் மனைவி.
'என்ன செய்யலாம் ' என இருவரும் நீண்ட நேரம் விவாதித்தனர். இறுதியாக ஒரு முடிவுக்கு வந்தனர்.
அதாவது,
ஒருநாள் கணவன் செய்ய வேண்டிய அனைத்து வேலைகளையும் மனைவி செய்வது என்றும்,
மனைவி செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் கணவன் செய்வது என்றும் முடிவெடுத்தனர்.
பின்னர், என்னென்ன வேலைகள் இருக்கின்றன என்றும் பேசி முடிவெடுத்தனர்.
அப்போது மனைவி, உங்கள் பேச்சை நம்ப முடியாது. இதை ஒரு பொது ஆளிடம் கூறி அவர் மேற்பார்வையில் செய்யலாம் என்று கூறினாள். கணவரும் ஒப்புக்கொண்டார்.
அதன்படி, அந்த ஊரில் நேர்மையானவர் என பெயர் எடுத்த ஓய்வு பெற்ற தொடக்கப்பள்ளி ஆசிரியர் ஒருவரிடம் இந்த பொறுப்பை ஏற்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.
இந்த சுவாரசியமான போட்டியைக் கேட்டதுமே அவர் ஒப்புக்கொண்டுவிட்டார். பின்னர் அந்த நடுவர், இருவரிடமும் நியாயமாகப் பேசி என்னென்ன வேலைகள் இருக்கின்றன என கேட்டறிந்தார். அத்துடன், வழக்கமாக இருவரும் செய்யும் வேலைகளை மட்டுமே செய்ய வேண்டும் என்றும், போட்டி என்பதால் கூடுதல் வேலைகளை சுமத்தக் கூடாது என்றும் பேசி முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி, அதிகாலை 5 மணிக்கு கணவர் எழுந்து வாசல் தெளித்து கோலம் போடுவதில் இருந்து வேலைகள், இல்லை... இல்லை... போட்டி தொடங்கும் என தெரிவிக்கப்பட்டது.
போட்டிக்கான நாளில் செய்ய வேண்டிய வேலைகளுக்காக, வீட்டில் என்னென்ன பொருட்கள் எங்கெங்கே இருக்கின்றன என்ற விவரத்தை மனைவி, கணவனிடம் நினைவுக்கு வந்தவரையில் அடையாளம் காட்டினாள்.
கோலப்பொடி இருக்கும் இடம் முதல், காஃபி தூள், துடைப்பம் இருக்கும் இடம் வரையில் அனைத்தையும் மனைவி அடையாளம் காட்டினாள். இப்போது கணவரின் உள்ளத்தில் லேசான பயம் ஏற்பட்டது. “நிறைய வேலைகள் இருக்கும் போல” என எண்ணினார்.
போட்டிக்கான நாள் வந்தது. கணவன் காலையில் எழுந்து கோலம் போட்டார். மனைவிக்கு காஃபி போட்டுக் கொடுத்தார். சமையல் வேலைகளைச் செய்யத் தொடங்கினார்.
மனைவியோ, 6 மணிக்குமேல் பொறுமையாக எழுந்து, பல்துலக்கி, குளித்துவிட்டு காலை உணவை எடுத்து வைக்கும்படி கூறினாள்.
பின்னர் மனைவி தோட்டத்திற்குச் சென்று வேலைகளைக் கவனித்தாள்.
அன்று, அவர்கள் தோட்டத்தில் இருந்த 7 தென்னை மரங்களில் தேங்காய் பறிக்க வேண்டி இருந்தது.
வீட்டிற்கு வந்து தனது கணவரின் உடையை அணிந்து கொண்டுச் சென்று மரம் ஏறினாள் மனைவி. சிரமமாக இருந்தாலும், போட்டியில் வெற்றி பெற வேண்டும் அல்லவா..., கடுமையான முயற்சிக்குப் பின்னர் மரத்தில் ஏறினாள். மரம் அதிக உயரம் இல்லை என்பதால், அதிக சிரமம் இன்றி தேங்காய் பறித்தாள். பின்னர், தோட்ட வேலைகளைக் கவனித்தாள்.
மதியம் சாப்பிடுவதற்காக வீட்டிற்கு வந்தாள். கணவர் சாப்பாடு பரிமாறினார். அதில் உப்பில்லை. காரம் அதிகமாக இருந்தது. அப்போது அந்த மனைவி, “நான் இப்படி சமைத்திருந்தால் நீங்கள் என்ன செய்திருப்பீங்க” என்றாள்.
கணவனிடம் இருந்து பதில் இல்லை.
இப்படியாக நேரம் போய்க்கொண்டே இருந்தது.
கணவனால் சிறிதும் ஓய்வு எடுக்க முடியவில்லை.
வேலைகளை செய்து முடிக்க முடியவில்லை.
அப்போதுதான், அவருக்குத் தெரிந்தது. தன் மனைவி, ஒவ்வொரு நாளும் தன்னைவிட அதிகப்படியான வேலைகளைச் செய்கிறாள்.
ஆனால், இதைச் சொல்லி ஒருநாளும் வருத்தப்பட்டதோ, அலுத்துக் கொண்டதோ இல்லை என்பதை உணர்ந்தார்.!
இப்போது, அவருக்கு தன் மனைவியின் மீது அன்பு அதிகமானதை உணர்ந்தார். தன் மனைவி மீது கோபம் கொள்ளக்கூடாது என மனப்பூர்வமாக உறுதியேற்றார். வேலைகளை முழுமையாக செய்து முடிக்க முடியாமல் கணவர் சிரமப்பட்டார். மனைவியோ அனைத்து வேலைகளையும் செய்து முடித்தாள்.!
அந்த ஒருநாள் அவர்கள் இருவருக்கும் பல்வேறு புரிதல்கள் ஏற்படுவதற்கு வாய்ப்பாக அமைந்தது.!
நடுவரின் ஆசியுடன் அந்த நாள் நிறைவடைந்தது. இருவருக்கும் அது வெற்றியாகவே கருதப்பட்டது.!
அதன் பின்னர், இருவருக்கும் இடையிலான உறவு மேம்பாடு அடையத் தொடங்கியது.
ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளத் தொடங்கினர்.
கணவன் தன் கோபத்தை படிப்படியாகக் குறைத்துக் கொள்ள பயிற்சி எடுத்தார். கோபம் வரும்போதெல்லாம், அதனை வெளிப்படுத்தாமல் தனக்குள்ளேயே புதைத்து, அன்பான வார்த்தைகளை பேசப் பழகினார்.
மனைவியின் சிரமங்கள் புரிந்ததால், அவ்வப்போது உதவி புரிந்து வேலைகளை எளிமையாக்கினார்.
இப்படியாக அவர்களுக்குள் அன்பு ஊற்றெடுக்கத் தொடங்கி ஆறாகப் பெருகியது.
ஆக..., மனைவியை மதிக்கப் பழகினால் வாழ்க்கை தினந்தோறும் சுவாரஸ்யம்தான்.
புரிந்து வாழும் வாழ்க்கைக்கு 'தாம்பத்தியம்' என்ற
பெயர் உண்டு...!