Tuesday, March 22, 2022

ஈவிஎம் ....

 மின்னணு ஓட்டுப்பதிவு முறையை, காங்கிரஸ் அரசு தான் கொண்டு வந்தது.

இதில், பயன்படுத்தப்படும் இயந்திரங்களில் முறைகேடுகள் நடக்க வாய்ப்பு இருப்பதாக,
2013ல் உச்ச நீதிமன்றத்தில், சுப்பிரமணியன் சாமி முறையிட்டார்.
அதையடுத்து, 'விவிபேட்' என்கிற, ஒப்புகை சீட்டு சரிபார்ப்பு முறையை, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுடன் இணைக்க, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆனாலும், பல ஓட்டுப்பதிவு மையங்களில், விவிபேட் கருவி வைக்கப்படுவதே இல்லை.
அப்படி வைக்கப்படும் மையங்களிலும், பதிவான ஓட்டுகளை, ஒப்புகை சீட்டுகளை வைத்து சரிபார்ப்பதில்லை.
இதற்கு, காலதாமதம் காரணமாக சொல்லப்படுகிறது.
கடந்த, 2019 லோக்சபா தேர்தலில், இந்த சர்ச்சை பெரியளவில் விவாதத்திற்கு வந்தது.
அதையடுத்து, 2020ல், 'தேர்தலுக்கான குடிமக்கள் ஆணையம்' என்ற, தன்னார்வ அமைப்பு உருவானது.
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி மதன் லோகுர் தலைமையிலான இந்த அமைப்பில்,
சென்னை உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஹரி பரந்தாமன், முன்னாள் ஐ.ஏ.எஸ்., அதிகாரி தேவசகாயம், சில மூத்த ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் கணினி தொழில்நுட்ப பேராசிரியர்கள் இணைந்து உள்ளனர்.
இந்த அமைப்பின் இடைக்கால அறிக்கை, ஜனவரி மாதம் வெளியிடப்பட்டது.
அப்போது பேசிய ஹரி பரந்தாமன், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகளின் செயல்பாடுகளில் உள்ள சந்தேகங்களை நிவர்த்தி செய்யக்கோரி,
இந்திய தேர்தல் ஆணையத்தை அணுகியும், ஆணையம் எங்களுக்கு ஒத்துழைப்பு தரவில்லை.
'படித்தவர்கள் மட்டுமன்றி, பாமர மக்களும், தாங்கள் செலுத்தும் ஓட்டு சரியானபடி பதிவாகிறதா என்று, சரிபார்த்துக் கொள்ளும் நடைமுறை இப்போது இல்லை.
தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில், வெளிப்படைத் தன்மை இல்லவே இல்லை.
மக்களின் சந்தேகங்களை போக்கும் விதமாக, ஏன் தேர்தல் ஆணையம் பொதுவெளியில் டெமோ காண்பிக்க மறுக்கிறது'
என, எழுப்பிய கேள்வி நியாயமானது.
கடந்த, 2019ல் மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில்,
கோரேகான் தொகுதியின் நவ்லேவாடி கிராமத்தில், சில வாக்காளர்கள் ஒப்புகை சீட்டுகளை சரிபார்த்த போது,
அவர்கள் அத்தனை பேரும், பா.ஜ., வேட்பாளருக்கு ஓட்டளித்ததாகக் காட்டியது.
ஆனால், அவர்கள் வேறு ஒரு வேட்பாளருக்கு ஓட்டளித்து இருந்ததாக தெரிவித்தனர்.
அவர்கள் இதை, தேர்தல் அதிகாரிகளின் கவனத்திற்கு எடுத்துச் சென்ற பின்,
அதிகாரிகளும் இயந்திரத்தில் தவறு நேர்ந்ததாக ஒப்புக் கொண்டு, வேறு இயந்திரம் வரவழைத்து, மீண்டும் ஓட்டுப்பதிவை நடத்தினர்.
ஒரு பானை சோற்றுக்கு, ஒரு சோறு பதமாக இந்த நிகழ்வை சொல்லலாம்.
இந்தியாவில் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை வடிவமைத்த,
இரு நிறுவனங்களுள் ஒன்றான, 'எலக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா'வில் பணியாற்றியதாக சொல்லிக் கொள்ளும்,
சையத் ஷுஜா என்ற மின்னணு தொழில்நுட்ப வல்லுனர்,
2019ல் லண்டனில் இந்திய ஊடகவியலாளர்கள் சங்கம் நடத்திய கூட்டத்தில், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில், மற்றொரு கருவியை பொருத்தி விட்டால்,
வெளியில் இருந்தவாறு, மற்றொரு கருவி வாயிலாக, பதிவாகும் ஓட்டுகளை மாற்ற முடியும்' என விளக்கினார்.
ஆனால், அதற்கான வாய்ப்பு இல்லை என, தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது.
பிரிட்டன், அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து, இத்தாலி உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளில்,
ஓட்டுச் சீட்டு முறைதான் நடைமுறையில் உள்ளது.
ஜெர்மனி உச்ச நீதிமன்றத்தில், இது தொடர்பான வழக்கை, 2009ல் விசாரித்த நீதிபதிகள், 'மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை பயன்படுத்துவது சட்ட விரோதம்' என, தீர்ப்பளித்தனர்.
நம் நாட்டில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களுக்கு தடை விதிக்க, உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்ட நிலையில்,
குறைந்தபட்சம், ஓட்டு எண்ணிக்கையை சரிபார்க்க, அனைத்து ஓட்டு சாவடிகளிலும்,
ஒப்புகை சீட்டு கருவிகளை வைப்பதும், அவற்றைத் தவறாமல் பயன்படுத்துவதும் அவசியம்.
புகழ்பெற்ற சட்டப் பொன்மொழி நினைவுக்கு வருகிறது,
'நீதி வழங்குவது மட்டுமே முக்கியம் அல்ல.
வழங்கப்படுவது உண்மையான நீதிதான் என்று நம்பக்கூடியதான வெளிப்படை தன்மையும் முக்கியம்.'
ஜனநாயகத்தின் ஆணிவேரான ஓட்டுப்பதிவிலும்,
இது பிரதிபலிக்க வேண்டும்....

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...