Thursday, March 3, 2022

இன்றைய_தகவல்கள்....

 

🔴 உக்ரைனில் படித்து வரும் இந்திய மருத்துவ மாணவர்கள் விரும்பினால் போலந்தில் படிப்பை தொடரலாம் என போலந்து அரசு அறிவிப்பு. மாணவர்களின் கல்வி பாதிக்கப்படாமல் அவரவர் படிக்கும் வகுப்புகளை தொடர்ந்து மேற்கொள்ள நடவடிக்கை.
🔴 தொடர்ந்து 3 மாதங்களுக்கு மேல் அத்தியாவசியப் பொருட்களை பெறாத குடும்ப அட்டைதாரர்களின் முகவரியை உறுதி செய்ய வேண்டும். போலி குடும்ப அட்டைகளை களையும் நடவடிக்கையாக துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவு.
🔴 தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுக்கு மேலும் தளர்வு அளித்து முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு. சமுதாய, கலாச்சார அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நாளை முதல் நீக்கம். திருமணம் மற்றும் திருமணம் சார்ந்த நிகழ்வுகளில் 500 பேர் வரை பங்கேற்க அனுமதி. இறப்பு சார்ந்த நிகழ்வுகளில் அதிகபட்சம் 250 பேர் வரை பங்கேற்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
🔴 உக்ரைன் மீது ரஷ்யா நடத்தி வரும் தாக்குதலுக்கு 'ஆப்பிள்' நிறுவனம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. ரஷ்யாவில் ஆப்பிள் நிறுவன பொருட்கள் விற்பனை நிறுத்தம் மற்றும் ஆப்பிள் பே உள்ளிட்ட சேவைகளும் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
🔴 ரஷ்யாவில் தனது உள்ளூர் உற்பத்தியை நிறுத்துவதாக BMW நிறுவனம் அறிவிப்பு, அதேபோல், கார் ஏற்றுமதியையும் நிறுத்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது.
🔴 ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் கடந்த 24 மணி நேரத்தில் 6 விமானங்கள் இந்தியாவுக்கு புறப்பட்டன. உக்ரைனில் இருந்து 1,377 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்புகின்றனர் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
🔴 தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு தற்காலிக இயக்குனராக, பொறியாளர் வெங்கடேசனை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் ஒரு வருட காலத்திற்கு இயக்குனராக பணியாற்றுவார் என அறிவித்தது.
🔴 கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத வகையில் பன்னாட்டு சந்தையில் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை $106 ஆக அதிகரிப்பு.
🔴 பிரதமர் நரேந்திரமோடி கேட்டுக் கொண்டபடி, விமானப்படையின் முதல் விமானம் இன்று காலை ருமேனியாவிலிருந்து 200 இந்தியர்களுடன் புறப்பட்டது என்று வெளியுறவுத்துறை செயலாளர் திரு. ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா தகவல் தெரிவித்துள்ளார்.
🔴 உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் அமெரிக்காவிலுள்ள ரஷ்ய நாட்டைச் சேர்ந்த பணக்காரர்களின் சொத்துகள், விமானங்கள், படகுகள் ஆகியவற்றை கைப்பற்றுவோம் இதற்காக ஐரோப்பிய நாடுகளுடன் கைகோர்ப்போம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார்.
🔴 திமுக நிர்வாகியும் தொழிலதிபருமான ஏ.வி.சாரதி வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை சோதனை.
🔴 தூத்துக்குடி ஸ்டெர்லைட் வழக்கு இரண்டு முறை பட்டியலிடப்பட்டும் விசாரிக்கப்படவில்லை எனவே வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என வேதாந்தா நிறுவனம் கோரிக்கை விடுத்துள்ளது.
வரும் மார்ச் 15-ம் தேதி வழக்கு கட்டாயம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் உறுதியளித்துள்ளனர்.
🔴 உக்ரைனில் ரஷ்ய படைகளுடன் அமெரிக்கப் படைகள் சண்டையிடாது என ஜோ பைடன் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஏற்கனவே பிரிட்டன் அரசும் இதே நிலைப்பாட்டை எடுத்து இருந்தது குறிப்பிடத்தக்கது.
🔴 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வருகிற 10, 11, 12 தேதிகளில் ஆட்சியர்கள் மற்றும் காவல் அதிகாரிகள் மாநாடு சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது.
🔴 சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.616 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் ரூ.4,875-க்கும் ஒரு சவரன் ரூ.39,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் சில்லரை வர்க்கத்தில் வெள்ளியின் விலை ரூ.1.10 உயர்ந்து ரூ.71.90-க்கு விற்பனையாகிறது. இந்த வாரம் முழுவதும் தங்கம் விலை மேலும் உயரலாம் என்ற அச்சம் நகை வாங்கும் மக்களிடையே அதிகரித்துள்ளது.
🔴 கடலூர் மாநகராட்சி மேயர், துணை மேயர் தேர்தலுக்கு தடை விதிக்க கோரிய மனு வாபஸ் பெறப்பட்டுள்ளது. வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டிருந்த அறை சாவி காணாமல் போனதால் பூட்டு உடைக்கப்பட்டு திறக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு. வாபஸ் பெற அனுமதித்து அதிமுக வேட்பாளர் சிவாவின் மனுவை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔴 ஆப்ரேஷன் கங்கா திட்டத்தின் கீழ் மார்ச் 9ம் தேதிக்குள் 36 விமானங்கள் இயக்கப்பட உள்ளது. மார்ச் 5 ல் 3 விமானங்களையும் 6, 7, 8 தேதிகள் ஒரு விமானமும், 9 ஆம் தேதி ஒரு விமானமும் இயக்கப்பட உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
🔴 மூன்றாம் உலகப் போர் அணு ஆயுத போராகவும், பேரழிவை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும். ரஷ்யாவுடனான பேச்சுவார்த்தையை உக்ரைன் தள்ளிப் போட அமெரிக்காவே காரணம். பொருளாதார தடைகளால் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை, ரஷ்யாவிற்கு ஏராளமான நாடுகள் நண்பர்களாக உள்ளன என்று ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ் கூறியுள்ளார்.
🔴 வங்கக் கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக, தமிழகத்தில் வருகிற 3-ந் தேதி கனமழையும், 4-ந் தேதி அதிகனமழையும் பெய்யக்கூடும். தெற்கு வங்கக் கடலின் மத்தியப் பகுதி மற்றும் பூமத்திய ரேகை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, இலங்கை - தமிழக கடற்கரை நோக்கி நகரக்கூடும்.
நாளை மறுதினம் நாகை, மயிலாடுதுறை, கடலூரில் கன முதல் மிக கனமழையும், தஞ்சாவூர், புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், செங்கல்பட்டில் கனமழையும் பெய்யக்கூடும். கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்களில் அதி கனமழையும், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காஞ்சிபுரம், செங்கல்பட்டில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
🔴 தமிழிசை சௌந்தரராஜன் முன்னால் பாஜகவை விமர்சித்ததாக மாணவி லூயிஸ் சோபியா கைது செய்யப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மனித உரிமை மீறலில் ஈடுபட்டுள்ளது. மாணவியின் தந்தைக்கு ரூ 2 லட்சம் இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவு - மனித உரிமைகள் ஆணையம்.
🔴 முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துபாய் பயணம் மேற்கொள்கிறார். 192 நாடுகள் பங்கேற்கும் துபாய் கண்காட்சியில் தமிழ்நாடு சார்பாக இம்மாத இறுதியில் கைத்தறி, விவசாயம், சிறுதொழில், பெருந்தொழில் தொடங்க அழைப்பு விடுக்கப்படும் வகையில் அரங்கம் அமைக்கப்படவுள்ளது.
🔴 சைபர் குற்றம் புகார் அளிக்க 1930 புதிய எண் அறிவிப்பு!
1. தமிழகத்தில் சைபர் குற்றங்கள் அதிகரித்து வருவதால் அதை கட்டுப்படுத்த தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவு படி தமிழக காவல்துறை பல அதிரடி மாற்றங்களை செய்து வருகிறது.
2. தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக சைபர் காவல் நிலையங்கள் தொடங்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் வங்கி மோசடி, இணையதள குற்றங்கள் குறித்து உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
3. சைபர் க்ரைமில் ஏற்கனவே இயங்கிவரும் 155260 என்ற எண்ணிற்கு மாற்றாக 1930 என்ற புதிய சைபர் கிரைம் உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
4. இந்த புதிய எண் மூலம் வங்கி மோசடி குறித்து புகார் அளித்தால் உடனே சைபர் கிரைம் போலீசார் சம்பந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு மோசடி நடந்த வங்கி கணக்கை முடக்கி மோசடி நபர்கள் பணம் எடுக்க முடியாதபடி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
5. மோசடி நபர்களிடம் இருந்து பொதுமக்களின் பணத்தைப் பாதுகாக்க எண் 1930 மிகவும் உதவியாக உள்ளது.
🔴 சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் மகா சிவராத்திரி விழாவில் திருமதி துர்கா ஸ்டாலின் பங்கேற்றார்.
🔴 மெட்ராஸ் ஹைகோர்ட்டில் காணொலி காட்சி மூலம் மேற்கொள்ளும் விசாரணையை வரும் திங்கட்கிழமை முதல் நிறுத்த உள்ளது மற்றும் காணொலி காட்சி விசாரணை தேவைப்படும் மூத்த வழக்கறிஞர்கள் மட்டும் காணொலி காட்சி மூலம் வாதிட அனுமதிக்கப்படுவார்கள் என்று தலைமை நீதிபதி தகவல் தெரிவித்துள்ளார்.
🔴 சென்னை மாநகராட்சி கமிஷனர் ககன்தீப் சிங் பேடி, சென்னையில் வென்ற கவுன்சிலர்களுக்கு பதவி பிரமாணம் செய்துவைத்தார். ஒவ்வொரு வார்டு கவுன்சிலர்களும் 35 வினாடிகள் கொண்ட உறுதிமொழியை தனித்தனியாக எடுத்துக்கொண்டு பொறுப்பேற்றார்கள். அப்படி உறுதிமொழி ஏற்றபோது, சென்னை 193வது வார்டு அதிமுக கவுன்சிலர், ‘பதவி வரும் போது பணிவு வர வேண்டும் துணிவு வர வேண்டும் தோழா..’ என்ற பாடல் பாடினார். இதற்கு மற்ற அனைத்து வார்டு உறுப்பினர்களும் தங்களது கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
🔴 உக்ரைனில் கியூவ், கார்கீவ் உள்ளிட்ட நகரங்களில் இருந்து வெளியேற ரயில் நிலையத்தில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் திரண்டு காத்துக் கிடக்கின்றனர்.
🔴 ஜெயலலிதா மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் வரும் 7 ஆம் தேதி விசாரணையை தொடங்குகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தொடங்கும் விசாரணையில் முதற்கட்டமாக ஆஜராக அப்பல்லோ மருத்துவர்கள் 10 பேருக்கு சம்மன் அனுப்பியுள்ளது.
🔴 நெல்லை திசையன் விளை பேரூராட்சியில் வெற்றி பெற்ற அதிமுக உறுப்பினர்கள் தலைக்கவசத்துடன் பதவி ஏற்க வந்தனர். பதவியேற்றால் மண்டை உடைக்கப்படும் என திமுகவினர் சிலர் தொலைபேசியில் மிரட்டியதாகப் புகார் தெரிவித்தனர்.
🔴 மலையாள செய்தி தொலைக்காட்சி MediaOne மீது தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விதித்துள்ள ஒளிபரப்பு தடையை, கேரளா உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. MediaOne -னின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்றம்.
🔴 உக்ரைனின் அண்டை நாடுகளில் தஞ்சமடைந்துள்ள இந்தியர்களை மீட்கும் பணிக்காக சென்றுள்ள சிவில் விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா ருமேனியாவில் உள்ள இந்திய மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
🔴 நீலகிரியில் காட்டு யானைக்கு தீ வைத்த வழக்கில் குற்றவாளியின் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
🔴 பிப்ரவரி மாதத்தில் டிக்கெட் இன்றி பயணம் செய்தவர்களிடமிருந்து ரூ 1.11 கோடி அபராதம் வசூல் - சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் கௌதம் ஸ்ரீனிவாஸ் தகவல் தெரிவித்துள்ளார்.
🔴 உக்ரைனில் ரஷ்ய படைகள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் மேலும் ஒரு இந்திய மாணவர் உயிரிழப்பு. உடல் நிலை பாதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ள இயலாமல் இந்திய மாணவர் இறந்துள்ளதாக தகவல்
உயிரிழந்த மாணவர் சந்தன் ஜின்டால்(22) பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்தவர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.
🔴 அரசு பணி நியமனங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு குறிப்பிட்ட சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டும் ஒன்றிய, மாநில அரசுகள் வழங்கவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ரமேஷ் கூறியுள்ளார்.
🔴 தமிழகத்தில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நடந்த முறைகேடு பற்றி ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையம் அமைத்தது தமிழக அரசு. 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய ஒரு நபர் ஆணையத்திற்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
🔴 ஈரோடு, சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் சாலையில் போக்குவரத்தை சீர்படுத்த, அப்பகுதி மக்களின் கருத்துகளை கேட்டு திட்டம் வகுக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
🔴 கர்நாடக மாணவர் நவீன் உயிரிழப்புக்கு நீட் தேர்வும் ஒரு காரணம். பள்ளியில் நன்றாக படித்த 97% மதிப்பெண் பெற்ற மாணவன் நவீனுக்கு, இந்தியாவில் மருத்துவம் படிக்க இடம் கிடைக்கவில்லை. தனது மருத்துவ கனவை நிறைவேற்றவே நவீன் உக்ரைன் சென்றார். நீட் தேர்வை வைத்து பயிற்சி மையங்கள் லாபம் பார்க்கின்றன. நுழைவுத் தேர்வுகளால் உயர்கல்வி என்பது பணம் படைத்தவர்களுக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு, ஏழைகளுக்கு மறுக்கப்படுகிறது. தகுதி என்ற போர்வையில் திறமையான, பொருளாதார ரீதியாக நலிவடைந்த கிராமப்புற மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நீட் தேர்வு பயிற்சி மையங்களின் பின்னணியில் இருப்பது யார்? பின்னணியில் மத்திய அரசு செயல்படுகிறதா என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி கேள்வி‌ எழுப்பியுள்ளார்.
🔴வரலாற்றில் இன்று
🔴 ’பாரத் கோகிலா’., 'இந்தியாவின் நைட்டிங்கேல்,' ‘கவிக்குயில்’ என்று புகழப்பட்ட கவிஞர், எழுத்தாளர், சுதந்திரப் போராட்ட வீராங்கனை சரோஜினி நாயுடு காலமான தினம் இன்று. சரோஜினி நாயுடு 1879 பிப்ரவரி 13 அன்று ஹைதாராபாத்தில் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசின் இரண்டாவது பெண் தலைவரும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் முதல் பெண் ஆளுனரும் ஆவார். சரோஜினி நாயுடுவின் பிறந்த நாள் இந்தியாவில் தேசிய மகளிர் தினமாக கொண்டாடப்படுகிறது.
சென்னை பல்கலைக்கழக மெட்ரிக் தேர்வில் முதலிடம் பெற்றபோது அவருக்கு 12 வயது. சரோஜினி கணித மேதை அல்லது விஞ்ஞானி ஆக வேண்டும் என்பது தந்தையின் ஆசை. இவருக்கோ கவிதை எழுதுவதில் நாட்டம். ஆங்கிலத்தில் கவிதைகள் எழுதத் தொடங்கினார். சரோஜினியின் படைப்புகளால் கவரப்பட்ட ஹைதராபாத் நிஜாம், வெளிநாடு சென்று படிக்க உதவித் தொகை வழங்கினார். லண்டன் கிங்ஸ் கல்லூரி, கேம்பிரிட்ஜ் கிர்டன் கல்லூரியில் பயின்றார். உருது, தெலுங்கு, ஆங்கிலம், பாரசீகம், பெங்காலி ஆகிய மொழிகளைப் பேச சரோஜினி நாயுடு கற்றுக்கொண்டார். கவிதைகள் ஆங்கிலத்தில் இருந்தாலும் அவற்றின் ஆன்மா இந்தியாவாகவே இருந்தன. The Golden Threshold, The Bird of Time, The Broken Wing குறிப்பிடத்தக்கவை. 1905-ம் ஆண்டில் வங்காளம் பிரிக்கப்பட்டதைத் தொடர்ந்து சரோஜினி இந்திய சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார். கோபால கிருஷ்ண கோகலே, ரபீந்திரநாத் தாகூர், முகம்மது அலி ஜின்னா, அன்னி பெசண்ட், காந்தி, நேரு ஆகியோரின் அறிமுகத்தைப் பெற்றார். 1925-ம் ஆண்டில் சரோஜினி காங்கிரசின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்பதவிக்கு தேந்தெடுக்கப்பட்ட முதல் பெண் இவரே ஆவார்.
சரோஜினி அடிப்படையில் காந்தியின் வழியை பின்பற்றினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொண்டார். ஜனவரி 26, 1930-ல் தேசிய காங்கிரஸ் பிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து சுதந்திரம் கோரியது. மே 5, அன்று கைது செய்யப்பட்டார். அதன் பின் சில நாட்களிலேயே நாயுடு அவர்களும் கைது செய்யப்பட்டு பல மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். காந்தி மற்றும் பண்டிட் மாலவியாஜி ஆகியோருடன் இணைந்து வட்ட மேசை மாநாட்டில் பங்கேற்றார். அக்டோபர் 2, 1942-ம் ஆண்டு அவர் வெள்ளையனே வெளியேறு போராட்டம் காரணமாக கைது செய்யப்பட்டார். அவர் காந்திஜியுடன் 21 மாதங்கள் சிறையில் இருந்தார். மோகன்தாஸ் காந்தி அவர்களுடன் சரோஜினி அவர்கள் ஒரு பாசமான உறவினைக் கொண்டிருந்தார். காந்தி அவரை செல்லமாக "மிக்கி மவுஸ்" என்று அழைப்பார். 1947-ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற ஆசிய உறவுகள் மாநாட்டில் நாயுடு பங்கேற்றார். 1947-ம் ஆண்டு ஆகஸ்ட் திங்கள் 15-ம் நாள் இந்தியா சுதந்திரம் பெற்றதற்குப் பிறகு சரோஜினி நாயுடு உத்தரப்பிரதேசம் மாநில ஆளுனராக பதவியேற்றார். இதன் மூலம் இந்தியாவின் முதல் பெண் ஆளுனர் ஆனார். 1949 பிப் 2 அன்று மாரடைப்பால் சரோஜினி நாயுடு காலமானார்.
🔴 தோட்டக்காடு ராமகிருஷ்ண பிள்ளை மறைந்த நாள் இன்று. ஆங்கில நாவலை எழுதிய முதல் தமிழராவார். இவர் எழுதிய பத்மினி (Padmini: Tale of Indian Romance) என்ற நாவல் இலண்டனிலிருந்து 1903-இல் வெளிவந்தது. செங்கல்பட்டில் பிறந்து காஞ்சிபுரத்தில் பிரி சர்ச் ஆப் ஸ்காட்லாந்து மிசன் பள்ளியில் படிப்பைத் துவங்கி பின் சென்னைக் கிறித்தவக் கல்லூரியில் மெட்ரிகுலேசன், எப்.ஏ (தருக்கம்), பி.ஏ (தத்துவம்) ஆகிய படிப்புகளை முடித்தார். 'சென்னை இலக்கிய சங்க' (ராயல் ஏசியாட்டிக் சொசைட்டி) நூலகத்தின் தலைவர் பொறுப்பில் அமர்ந்து இருபதாயிரம் நூல்களுடன் புழங்கியது இவரது எழுத்தாளுமைக்கு உரமூட்டியது.
இவரே கால்டுவெல்லின் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் நூலை அவரது மறைவுக்குப் பிறகு மறுபதிப்பு செய்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழக தமிழ்க்குழு, தமிழ் லெக்சிகன் என்ற அகராதி தயாரிப்புக் குழு ஆகியவற்றின் முதல் தலைவராக செயலாற்றியிருக்கிறார். தனது நாட்குறிப்புகளுக்காகப் புகழ்பெற்ற ஆனந்தரங்கம் பிள்ளையின் உறவினராவார்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் துபாசியாக இருந்தவர். சென்னைப் பல்கலைக்கழகத்திலும் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் ஒருமுறை வட்டார மொழியான தமிழைப் பாடத்திட்டத்திலிருந்து நீக்கிவிட சிலர் முன் மொழிந்தபோது அதைக் கடுமையாக எதிர்த்து தமிழ் தொடர்ந்திட வாதிட்டு அத்தீர்மானம் நிறைவேறாது செய்திருக்கிறார்.
🔴 ரா. பி. சேதுப்பிள்ளை பிறந்த தினம் இன்று. தமிழ் அறிஞர், எழுத்தாளர், வழக்குரைஞர், மேடைப்பேச்சாளர். இவர் தமிழில் சொற்பொழிவு ஆற்றுவதிலும், உரைநடை எழுதுவதிலும் மிகவும் பெயர் பெற்றவர் இந்த சேதுப்பிள்ளை. உரைநடையில் அடுக்குமொழியையும், செய்யுள்களுக்கே உரிய எதுகை, மோனை என்பவற்றையும் உரைநடைக்குள் கொண்டு வந்தவர் இவரே. 1936 முதல் 25 ஆண்டு காலம் சென்னை பல்கலைக்கழகத்தில் தமிழ்ப் பேராசிரியராகப் பணியாற்றியவர், தனது பேச்சா லும் எழுத்தாலும் தமிழுக்குப் பெருமை சேர்த்தார். தமிழ்ப் பேரகராதியைத் தொகுக்க தமிழ் ஆராய்ச்சித் துறைத் தலைவர் வையாபுரிப் பிள்ளைக்கு உதவினார். வையாபுரிப் பிள்ளைக்குப் பிறகு பேரகராதி தொகுப்புப் பணியை ஏற்றார்.
இவரது உதவியுடன் திராவிடப் பொதுச் சொற்கள், திராவிடப் பொதுப் பழமொழிகள் ஆகிய 2 நூல்களை சென்னை பல்கலைக்கழகம் வெளியிட்டது.
சிறந்த மேடைப் பேச்சாளர். சென்னை ஒய்எம்சிஏ அரங்கில் இவரது கம்பராமாயணச் சொற்பொழிவு 3 ஆண்டுகள் நடைபெற்றது. கோகலே மன்றத்தில் 3 ஆண்டுகள் தொடர்ச்சியாக சிலப்பதிகார வகுப்பு நடத்தினார். தங்கச் சாலையில் உள்ள தமிழ் மன்றத்தில் வாரம் ஒருமுறை என 5 ஆண்டுகளுக்கு திருக்குறள் விளக்கவுரை நிகழ்த்தினார். கந்தக்கோட்ட மண்டபத்தில் 5 ஆண்டுகள் கந்தபுராண விரிவுரை நிகழ்த்தினார். 14 கட்டுரை நூல்கள், 3 வாழ்க்கை வரலாற்று நூல்கள் என 20-க்கும் மேற்பட்ட உரைநடை நூல்களை எழுதியுள்ளார். 4 நூல்களை பதிப்பித்தார். இவர் தமிழகம் முழுவதும் வானொலி நிலையங்கள், பல்வேறு இலக்கிய அமைப்புகளில் ஆற்றிய இலக்கிய சொற்பொழிவுகளின் தொகுப்புகளும் பல நூல்களாக வந்தன. இவரது ‘தமிழின்பம்’ என்ற நூலுக்கு இந்திய அரசின் சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் (40 நாட்கள்) சாம்பல் புதன் அல்லது விபூதி புதன்கிழமை அல்லது திருநீற்றுப் புதன் என அழைக்கப்படும். தினம் (02. 03. 2022 புதன்கிழமை) இன்று முதல் துவங்குகிறது. ஏசு கிறிஸ்து சிலுவையில் அறைந்து மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்தார். கிறிஸ்தவர்கள் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி மகிழ்கின்றனர். ஈஸ்டர் விழாவுக்கு முந்தைய நாற்பது நாட்களை (இன்று மார்ச் 2 முதல்) கிறிஸ்தவர்கள் தவக்காலம் அனுஷ்டிக்கின்றனர். இந்த விரத நாட்களில் ஆடம்பர நிகழ்ச்சிகளை தவிர்த்து விடுவர். ஏசுவின் சிலுவைப் பாடுகளை நினைவு கூறும் வண்ணம் வெள்ளிக் கிழமைதோறும் தேவாலயங்கள் சிலுவை பாதை வழிபாடு நடைபெறும். இந்த ஆண்டு ஈஸ்டர் பெருவிழா ஏப்ரல் 17ல் கொண்டாடப்படுகிறது என கிறிஸ்தவர்கள் தெரிவித்தனர்.
🔴 ஏழைகளின் பெருந்தச்சன் லாரி பேக்கர் பிறந்த தினம் இன்று. இந்தியக் கட்டிடக்கலை சிற்பி எனப் போற்றப்படும் லாரி பேக்கர் (Laurie Baker) ஒரு புகழ் பெற்ற கட்டிடச் சிற்பி.
பிரிட்டனில் பிறந்தாலும் நம்ம இந்தியாவுக்கு வந்து முழுநேர கட்டிட வடிவமைப்பாளாராகி பணியாற்றினார்.குறிப்பாக உள்ளூர் பொருட்களைக் கொண்டு உள்ளூர் சூழல்களுக்கு ஏற்ப செலவு குறைவான வீடுகளைக் கட்டும் முறையை உருவாக்கினார். இவ்வீடுகளின் உள்வெளியையும் இடத்தையும் தனித்தன்மையுடன் திறம்பட வகுத்துப் பயன்படுத்தினார். அது பேக்கர் பாணி வீடு என்று சொல்லப்படுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...