Thursday, March 31, 2022

நமது முன்னோர்கள் சந்தோஷமாக வாழ்ந்த விதம்.... கொஞ்சம் பெரிய பதிவு தான் படித்து பாருங்கள் நெகிழ்ச்சி அடைவீர்கள்....

 முன்பெல்லாம், ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு டஜனுக்கு மேல், ஒன்று, இரண்டு குழந்தைகள் இருக்கும். குறைந்தபட்சம் அரை டஜன் (6) குழந்தைகளாவது இருக்கும். கணவர் மட்டும்தான் வேலைக்குப் போவார். ஆனால் குடும்பத்தில் அமைதியும் நிம்மதியும் சந்தோஷமும் கூடாரம் போட்டுக் கும்மாளம் அடித்தன. ஆனால் இன்றோ... நிம்மதியையும் மகிழ்ச்சியையும் அடித்து, நசுக்கிப் போட்டுவிட்டு, அவற்றின் மேலேயே உட்கார்ந்துகொண்டு, அவற்றைத் தேடி உலகம் முழுக்கச் சுற்றிக் கொண்டிருக்கிறோம்.

ஆனால் நம் முன்னோர்கள் சம்சார சாகரத்தில் தம் குடும்பப் படகைத்தான் எவ்வளவு லாவகமாக செலுத்தி வெற்றிகரமாகப் பயணம் வந்திருக்கிறார்கள்! அப்படி நமது முன்னோர்கள் மகிழ்ச்சியோடு வாழ்க்கைப் பயணத்தை நடத்தவில்லையென்றால், அளவில்லாத ஞான நூல்களும் உலகமே வியக்கும்படியான பெரும் ஆலயங்களும் உருவாகி இருக்குமா? இன்று வரை நிலைத்து நிற்குமா?
ஆகையால் நமது முன்னோர்கள் வாழ்க்கைப் படகை நன்றாகவே செலுத்தி இருக்கிறார்கள். அதில் ஏற்பட்ட சிறு சிறு ஓட்டைகளைக் கூடப் பக்குவமாக அடைத்து, வெற்றிகரமாக வாழ்ந்திருக்கிறார்கள்.
உணவு, உலகில் உள்ள எல்லோருக்கும் தேவையானது. உணவு இல்லாமல் எந்த ஜீவராசியும் வாழ முடியாது. அதே சமயத்தில், அந்த உணவு விஷயத்திலும் பல வழிமுறைகளைக் கடைபிடித்தார்கள் நமது முன்னோர்கள்.
அவர்கள், உணவில் நேரக் கட்டுப்பாட்டைக் கடைபிடித்தார்கள். அப்படி உண்ணும்போதும் கண்டதைப் பேசியபடியே உண்ணக் கூடாது. இன்றைய காலகட்டத்தில், குறிப்பாகச் சொல்லப் போனால், தொலைக்காட்சி பார்த்தபடியே உண்ணக் கூடாது, அப்படி உண்டால், நோய்கள் பெருகும் என மருத்துவர்களே கூறுகிறார்கள் அடுத்து, உணவு உண்ணும்போது வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து உண்ண வேண்டும். இந்தப் பழக்கம், போன தலைமுறை வரை இருந்தது.
‘‘ஐயா, இருங்க! அதெல்லாம் இப்ப நடக்காது. வீட்ல உள்ள ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு நேரத்துல வேல! எப்ப வேலைக்கிப் போறோம்? எப்ப வீட்டுக்கு வறோம்னே தெரியல. இந்தக் காலத்துல போயி, எல்லாரும் ஒண்ணா சேர்ந்து சாப்பிடணுங்கறதெல்லாம் சரிப்பட்டு வருமா என்ன?’’ என்கிறீர்களா? அதுவும் சரிதான். ஆனால் சரிப்பட்டு வரத்தான் வேண்டும். எந்தக் காலமாக இருந்தால்தான் என்ன? வாயால் தானே சாப்பிடுகிறோம்?
குடும்பத்தில் எல்லோரும் ஒன்றாகச் சேர்ந்து சாப்பிடுவதால், ஒருவரையொருவர் புரிந்துகொள்கிறோம். ஒருவர் விருப்பம் மற்றவருக்குப் புரிகிறது. அளவு குறைவாக இருந்தாலும் ‘‘இந்தா, நீ சாப்பிடு! போட்டுக்க, நல்லா சாப்பிடு! உனக்குத்தான் இது ரொம்பப் பிடிக்கும்’’ என்று சொல்லி, பகிர்ந்து உண்ணும் பண்பாடு வளர்ந்தது. கூடவே, நான் மட்டும் தின்றால் போதும் என்ற எண்ணம் இல்லாமல், விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையும் வளர்ந்தது.
அதனால், குடும்பம் ஒற்றுமையாகக் கூட்டுக் குடும்பமாக இருந்தது. எரிபொருளோ, மின்சாரமோ குறைந்த அளவில் செலவானது. வீட்டில் யாருக்காவது ஒரு பிரச்னை என்றால், மற்ற எல்லோரும் ஆளுக்கொரு வேலையாகப் பார்த்தார்கள். உதாரணமாக, யாருக்காவது உடம்பு சரியில்லை என்றால், ஒருவர் கைவைத்தியம் பார்க்க, ஒருவர் மடியில் போட்டுக்கொள்ள, ஒருவர் தடவிக் கொடுக்க ஒருவர் மருத்துவரிடம் ஓட... அடடா! அந்தக் காலம் இனித் திரும்ப வருமா?
ஒருவேளை கூட்டுக் குடும்பமாக அப்படி ஒன்றாகச் சேர்ந்து உண்ண முடியாமல் போனால், அடுத்த தலைமுறையாவது, கணவனும் மனைவியுமாக ஒன்றாக ஒற்றுமையாக வாழட்டும் என்பதற்காக, ஓர் ஏற்பாட்டைச் செய்திருக்கிறார்கள், அவர்கள்.
எப்படி என்கிறீர்களா? மறுமனை, மறுவீடு என்றெல்லாம் செய்தார்கள். திருமணம் ஆனதும் ஒருசில நாட்கள் கழித்து, புதுமணத் தம்பதிகள் மணமகளின் வீட்டிற்குச் சென்று சில நாட்கள் தங்குவார்கள். எதற்காக அப்படித் தங்குகிறார்கள்? மணமகள் தன் வீட்டில் எதையாவது மறந்து வைத்து விட்டாளா? திருமணமானவுடன் கணவர் வீட்டிற்கு வரும் பெண்ணுக்கு, அங்கு எதுவும் புரியாது, மற்றவர் மத்தியில் மணவாளரின் மனவிருப்பு-வெறுப்புகளை, அந்தப் புதுப் பெண்ணால் அறிந்துகொள்ள முடியாது. அதே, தன் வீட்டில் என்றால், அந்தப் பெண்ணுக்கு சுலபமாக இருக்கும். ஏற்கனவே அவள் வளைய வந்த வீடல்லவா? அதனால் அங்கே அவள் எளிமையாக உலா வரமுடியும். காலையில் எழுவது, குளிப்பது, சாப்பிடுவது என, கணவரின் அனைத்து நடவடிக்கைகளிலும் கணவரின் விருப்பு-வெறுப்புகளை அறிந்துகொள்ள முடியும். அதற்கேற்றாற்போல், அவள் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வாள்.
மனைவி அங்கே சுதந்திரமாக வளைய வருவதால், கணவரும் அவளது குணங்களைப் புரிந்துகொள்வார். ஒருவரை ஒருவர் நன்றாகப் புரிந்துகொள்ளல் நடக்கும். அதன்பிறகு, அவர்கள் அங்கிருந்து திரும்பியதும் மணவாழ்க்கை, மணம் மிகுந்த வாழ்க்கையாகவே இருக்கும்.
இன்றோ, பலருக்கு மணவாழ்க்கையில் மணமும் இல்லை, மனமும் இல்லை. காரணம்? மறுவீடு என்பதே, ஏதோ போனோம், திரைப்படங்கள் பார்த்தோம், ஹோட்டலில் சாப்பிட்டோம், வீட்டில் தூங்கினோம், திரும்பினோம் என்றாகி விட்டது. இப்படி நடந்துவிடக் கூடாது என்பதற்காகவே, ‘மறு வீட்டிற்கு அழைத்தல், மறு அழைத்தல்’ என்றெல்லாம் வைத்தார்கள்.
‘‘கணவருக்கு உணவு பரிமாறும் வேலையை அடுத்தவரிடம் விடாதே! உன் வாழ்க்கை பறிபோய்விடும்’’ என்று எச்சரித்தார்கள். அதை உடனடியாகப் புகுந்த வீட்டில் செயல்படுத்த முடியுமா என்ன? அதே மனைவியின் பிறந்த வீடு என்றால், நடைமுறைப்படுத்தி நலம் பெறலாம்.
கணவருக்கு ஓட்டலில் சாப்பாடு, மனைவிக்கு அலுவலகத்தில் சாப்பாடு, குழந்தைகளுக்கு குழந்தைகள் காப்பகத்தில் சாப்பாடு என்றால்... குடும்பம்?
ஆரோக்கியத்தையும் குடும்ப ஒற்றுமையையும் மாபெரும் சொத்தாகக் கட்டிக் காத்த முன்னோர்களின் பாதையில், நம்மால் போக முடியாவிட்டால்கூட, அவர்களை இகழாமல், அந்த முன்னோர்கள் தந்த தகவல்களையாவது, அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்ல வேண்டும்!
இன்று நாம் மிகவும் சர்வ சாதாரணமாக உடல்நலக்குறைக்கான ஒரு செயலைச் செய்கிறோம். எங்காவது வெளியில் நன்றாகச் சுற்றிவிட்டு வீட்டிற்குள் நுழைந்ததும் உடனே குளிர்சாதனப் பெட்டியைத் திறந்து, அதில் ‘சில்’லென்று இருக்கும் தண்ணீரை எடுத்து அப்படியே குடிப்போம்.
விஞ்ஞான ரீதியாகவே இது தவறு. வெளி உலகச் சுற்றுப்புறச் சூழ்நிலை, காற்றழுத்தம் ஆகியவை வேறு. வீட்டின் உள்ளே உள்ள சுற்றுப்புறச் சூழ்நிலை, காற்றழுத்தம் ஆகியவை வேறு. இரண்டிற்கும் பெரும் வேறுபாடுகள் உண்டு. ஆகையால் வெளியில் இருந்து வீட்டிற்குள் நுழைந்ததும் அங்கிருக்கும் சூழ்நிலைகளுக்கு ஏற்ப, உடம்பு பக்குவப்பட வேண்டும். அதன்பிறகே, நாம் எதையாவது வயிற்றுக்குள் தள்ள வேண்டும். அப்போதுதான் உடம்பு அதை ஏற்கும். இல்லாவிட்டால், உடம்பு அதை ஏற்காது. நோய்கள் பெருகும். இது தற்கால விஞ்ஞான உண்மை. இதை அன்றே உணர்ந்ததால்தான் நமது முன்னோர்கள், ‘‘வீட்டுக்குள்ள வந்ததும் கை, கால், முஞ்சியைக் கழுவிக்கோ, ஆடை மாத்திக்கோ, அப்பறமா தண்ணியக் குடி!’’ என்றார்கள். அவர்கள் சொன்னபடி நாம் செய்து முடிப்பதற்குள், வீட்டு சூழலுக்கு ஏற்றபடி நம் உடம்பு பக்குவப்பட்டு விடும். பிறகு தண்ணீர் குடித்தால் பிரச்னை இல்லை.
அடுத்தது, ‘‘தீராக் கோபம், போராய் முடியும்’’ என்பார்கள். கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தும் கோபத்தைத் தவிர்த்து இதிலும் வெற்றி பெற்றார்கள் நமது முன்னோர்கள். பெற்றோர், கணவன்-மனைவி, மகன்கள்-மருமகள்கள், பேரன்-பேத்திகள். இது போதாதென்று உறவினர்கள் வேறு, ஏறத்தாழ மூன்று அல்லது நான்கு தலைமுறையைச் சேர்ந்தவர்கள், ஒன்றாகக் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வந்தார்கள். ஒவ்வொரு வேளையும் உலை கொதிக்கும்போது, என்னவோ கல்யாண வீட்டில் சாப்பாடு தயாராவதைப்போல இருக்கும். சாப்பாட்டு வேளையிலோ, கேட்கவே வேண்டாம். எல்லோருமாக ஒன்றாக உட்கார்ந்துகொண்டு சாப்பிடும்போது, ஆனந்தமும் மகிழ்ச்சியும் அள்ளிக்கொண்டு போகும்.
தாத்தா பேரனிடம், ‘‘டேய்! வெண்டைக்காயை இன்னும் கொஞ்சம் போட்டுக் கோடா! மூளை நல்லா வளரும்’’ என்பார். பேரனோ, ‘‘தாத்தா! அப்பாவப் போட்டுக்கச் சொல்லு!’’ என்பான். ‘பக்’கென்று எல்லோரும் சிரிப்பார்கள். அந்தப் பையனால் குறிப்பிடப்பட்ட அப்பாவும் சேர்ந்து சிரிப்பார். சாப்பாட்டு வேளை சந்தோஷமாகப் போனது.
கணவன்-மனைவி, குழந்தைகள், பேரன்-பேத்திகள் என, ஆனந்தக் கோட்டையின் அஸ்திவாரத்தை அணு அளவுகூட அசையவிடாமல் பாதுகாத்தார்கள். தம்மையும் மீறி அந்த அஸ்திவாரம் அசைந்தால்...கோபம் என்னும் நெருப்பைக் கொட்டாமல், பொறுமை என்னும் நீரை ஊற்றி அஸ்திவாரத்தைப் பலப்படுத்தினார்கள்.
ஆஹா! ஆஹா! என்ன வாழ்க்கை வாழ்ந்திருக்கிறார்கள்! அப்பப்பா! நினைத்தாலே பிரமிப்பாக இருக்கிறதே! அப்படி வாழ்ந்த வாழ்க்கையையும் அடுத்தவர்கள் மதிக்கும்படியாக வாழ்ந்தார்களே தவிர, அடுத்தவர்கள் மதிக்க வேண்டுமே என்பதற்காக வாழவில்லை. வெட்டி பந்தா, வீண் பெருமை இல்லை. குடும்பம் கோயிலாக இருந்தது. கோயிலும் குடும்பமாக இருந்தது.
May be an image of 2 people and people sitting

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...