Wednesday, March 23, 2022

நெல்லை, குமரி, தூத்துக்குடி, தென்காசி மாவட்டவாசிகளுக்கு "பொங்கி போட போறோம்" என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரியும்.

 திருமணம் பேசி நிச்சயதார்த்தம் அல்லது நிச்சய தாம்பூலம் என்று பாக்கு, வெத்திலை மாற்றும் முன் பெண்ணின் ஜாதகம் பொருந்தி நகை, ரொக்கம் என்ற பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டதும் மணமகனின் சகோதரி , தந்தை உட்பட குறிப்பிட்ட சிலர் மணமள் வீட்டிற்கு சென்று மணமகனின் சகோதரி மணமகள் தலையில் பூவை வைத்து விடுவார். இதனை பூ வைத்தல் என சொல்வார்கள். பாதி கல்யாணம் முடிந்த மாதிரியான சடங்கு இது.

இருபத்தைந்து வருடங்களுக்கு முன்பு வரை பூ வைத்து முடிந்த பின் திருமணம் நடைபெறும் வரை மணமகளையோ, மணமகனையோ மாலை நேரங்களில் வெளியில் செல்ல வீட்டில் இருக்கும் வயதான பெண்மணிகள் அனுமதிப்பதில்லை. எங்காவது செல்ல முற்பட்டால் கூட "ஏலேய் கூறுகெட்டவனுக்கு பொறந்த கொழுப்பெடுத்தவனே இந்த கங்கு மங்குன கருக்கலில் என்னத்த வெட்டி முறிக்க வெரசா போற வீட்டுல இருல' என FM ரேடியோவாய் பேசும் பாட்டியின் சொல்லுக்கு பம்மி இருப்பதுண்டு.
திருமணம் பேசி முடிக்கப்பட்ட மணமகனும் மணமகளும் சத்தான உணவு சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தால் மணமக்களின் சித்தப்பா, பெரியப்பா, அத்தை மற்றும் சொக்காரமார்கள் தினம் ஒருவர் வீட்டுக்கு வந்து அவரவர் வசதிக்கேற்ப நாட்டுக்கோழி அல்லது ஆட்டுக்கறியினை எடுத்து வந்து அனைவரும் சேர்ந்து சமைத்து உண்பார்கள்.
காலையில் வீட்டுச்சேவலை பிடிக்க போகும் விசயம் கோழிக்கு யாரும் சொல்லியிருப்பார்களோ என்னவோ, என்றும் இல்லாத திருநாளாய் அது ஏரியா பக்கமே வராமல் டிமிக்கி கொடுக்கும். அதை துரத்தி பிடிக்க ஓடும் சிறுவர் கூட்டம் அங்குமிங்கும் அலைச்சல் காட்டிய கோழியை மூச்சிறைக்க பிடித்து வரும் பேரன் கையிலிருந்து வாங்கிய கோழியை கொல்லப்போகும் மருமகளை "ஏழா கைப்புள்ளக்காரி நீ ஏன் ஒரு உசுர கொல்லணும் நான் வாழ்ந்து முடிச்சவ கொண்டா என்னிடம்... கொன்ன பாவம் தின்னா போச்சுன்னு" ஏதோ ஒரு பழமொழியை சொல்லி கோழியை கொன்ன பாவம் மருமகளுக்கு சேரக்கூடாது என்ற பாசத்தோடு கோழியை கொல்ல வீட்டுக்கொல்லைப்புறம் செல்வாள் பாட்டி.
ஏலேய் நடுலவன் மவனே ஒரு சொம்பு தண்ணியையும் ரெண்டு காவோலையும், தீப்பெட்டியையும் கொண்டு வா மக்கான்னு சொன்னதும் பாட்டி கேட்ட அத்தனையும் ராணுவ வீரனுக்கே உரிய மிடுக்கோடு ஏதோ போருக்கு செல்லும் கம்பீரத்தோடு எடுத்து செல்வான் பேரன். கழுத்தை வெட்டி ரத்தம் வெளியில் சென்றால் கறி ருசியிருக்காது என தண்ணீரில் முக்கி கோழியை கொன்று அத்தனை முடிகளையும் கையால் ஆய்ந்து மீதம் ஒட்டியிருக்கும் முடிகளை நீக்க காய்ந்த ஓலையை தீ மூட்டி அந்த தீயில் கோழியை வாட்டும் போது வரும் ஒரு வித்தியாமான வாசம் அந்த மேலத்தெரு முழுவதும் பரவும்.
ஆட்டு உரலில் நசுக்கிய இஞ்சி, வெள்ளைப்பூண்டு, பச்சமிளகு விழுதை சித்தி எண்ணெய்சட்டியில் நல்லெண்ணை விட்டு வதக்கும் போது வரும் வாசத்தில் கிட்டே வந்து சித்தி குழம்பு ரெடியாயிடுச்சா என கேட்கும் அக்கா மகனை பார்த்து ஆசையை பாரு எம்மவனுக்கு கோழி அறுக்கும் முன்னே கொழம்புக்கு வந்து நிக்குறதை என சிரித்து கொண்டே சமையலை கவனிப்பார்கள்.
மதியம் ஒரு மணி மணமாக போகும் பெண்ணுக்கு முதல் இலையை போட்டு போதும் போதும் என சொல்லும் அளவிற்கு கறியையும் சோறையும் இலையில் அள்ளி அள்ளி வைத்து கல்யாண பொண்ணு நீ... நல்லா சாப்பிடு மக்கா என வயிறார சாப்பிட வைத்து குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து சாப்பிடுவார்கள்.
பொங்கிபோடுதல் என்ற இந்த கிராமத்து சம்பிரதாயத்தில் பொங்குவது சோறு மட்டுமல்ல அதனோடு சேர்ந்து பாசமும் குடும்ப ஒற்றுமையுதான்.
எங்க ஊரு பழக்கவழக்கம்... கால ஓட்டத்தின் வேகத்தில் காணாமல் போய் இருந்தாலும், இன்னும் சில இடங்களில் உயிர் பெற்று வாழ்கிறது.
May be a cartoon of 6 people and people standing

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...