Friday, March 18, 2022

சட்டசபையில் நேற்று தாக்கலான தமிழக பட்ஜெட்டில்.மாற்றம், ஏமாற்றம்! ..

 சட்டசபையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட தமிழக பட்ஜெட்டில், பெரிய அளவில் மாற்றம் இல்லாததும், தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பான அறிவிப்புகள் வெளியாகாததும், மக்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும் பழைய திட்டங்களுக்கு புதிய பெயர் சூட்டிய அறிவிப்புகள் தான் இடம் பெற்றுள்ளன. அரசின் கடன் சுமை அதிகரித்து வரும் நிலையில், 2022 - 23ம் நிதி ஆண்டில் மேலும், 90 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.தமிழக அரசு சார்பில், வரும் 2022 - 23ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை, நிதி அமைச்சர் தியாகராஜன் நேற்று சட்டசபையில் தாக்கல் செய்தார்.


latest tamil news



latest tamil news




எதிர்பார்ப்பு



தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், தாக்கல் செய்யப்படும் முழு முதல் பட்ஜெட் என்பதால், எதிர்பார்ப்பு அதிகம் நிலவியது.ஆனால், பெரிய அளவில் மாற்றம் இல்லாமல், வழக்கமான பட்ஜெட் உரையாகவே இருந்தது. மேலும், பட்ஜெட் உரையில், பொதுப்பணி துறை நிதி ஒதுக்கீடு குறித்த விபரங்கள் இடம் பெறவில்லை. மது விலக்கு குறித்தும் எந்த தகவலும் இல்லை.கடந்த 2021 - 22ம் ஆண்டு திருத்த பட்ஜெட்டில், 'சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தை, விமான நிலையத்தில் இருந்து, கிளாம்பாக்கம் பஸ் முனையம் வரை நீட்டிக்கும் பணி துவக்கப்படும். 'கோவையில் மெட்ரோ ரயில் திட்டம் அமைப்பது குறித்து, விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். மதுரையில் மெட்ரோ ரயில் திட்டம் துவக்குவதற்கான விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்யப்படும்' என்று கூறப்பட்டுஇருந்தது. இந்த பட்ஜெட்டில், அது பற்றிய எந்த தகவலும் இல்லை.

மாற்றம்
அதே நேரம், பழைய திட்டங்களுக்கு பெயர் மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. மூவலுார் ராமாமிர்தம் திருமண நிதியுதவி திட்டம், மூவலுார் ராமாமிர்தம் அம்மையார் உயர்கல்வி உறுதி திட்டம் என மாற்றி அமைக்கப்படுவதாக, பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்டத்தில் இதுவரை, தாலிக்கு தங்கம் மற்றும் நிதியுதவி வழங்கப்பட்டது. அதற்கு பதிலாக இனி, அரசு பள்ளிகளில் ஆறு முதல் பிளஸ் 2 வரை படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவியருக்கும் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு, தொழிற்படிப்பு ஆகியவற்றில், இடைநிற்றல் இல்லாமல் முடிக்கும் வரை, மாதம் 1,000 ரூபாய், அவர்கள் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.இந்த மாணவியர், ஏற்கனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இதில் கூடுதலாக உதவி பெறலாம். இதில், ஒவ்வொரு ஆண்டும் ஆறுலட்சம் மாணவியர் பயன் பெற வாய்ப்புள்ளது. மற்ற திருமண நிதியுதவி திட்டங்கள், எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.பள்ளிகளை நவீனமயமாக்கும் திட்டத்திற்கு, 'பேராசிரியர் அன்பழகன் பள்ளி மேம்பாட்டு திட்டம்' என்று புதிய பெயர் சூட்டப்பட்டுள்ளது.

ஏமாற்றம்
குடும்பத் தலைவியருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தேர்தல் வாக்குறுதியில் தி.மு.க., கூறியிருந்தது. அந்த திட்டம் அறிவிக்கப்படும் என எதிர்பார்த்த நிலையில், நிதி நெருக்கடி காரணமாக, இந்த ஆண்டு கிடையாது என்று அரசு கைவிரித்துள்ளது.டீசல் விலை குறைப்பு, காஸ் சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம், கல்விக் கடன் ரத்து போன்றவை தொடர்பான அறிவிப்புகளும் இல்லை. அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், தி.மு.க., தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது; அரசு ஊழியர்கள் ஆவலோடு எதிர்பார்த்தனர்.

இது தொடர்பான அறிவிப்பு எதுவும் பட்ஜெட்டில் இல்லாதது, அவர்களுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.இந்த பட்ஜெட்டில், வருவாய் பற்றாக்குறை சற்று குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், கடன் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், வரும் நிதியாண்டில், 90 ஆயிரத்து, 116 கோடியே 52 லட்சம் ரூபாய், கடன் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடன் வாங்குவதில் எவ்வித மாற்றமும் இல்லாமல், அ.தி.மு.க., அரசு பாணியிலே, தி.மு.க., அரசும் செல்வது ஏமாற்றத்தை அதிகப்படுத்தி உள்ளது. - நமது நிருபர் -

மகளிருக்கு மாதம் ரூ.1,000 இப்போதைக்கு இல்லை
''மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், நிதி நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் போது செயல்படுத்தப்படும்,'' என நிதி அமைச்சர் தியாகராஜன் கூறினார்.பட்ஜெட் உரையில் அவர் கூறியதாவது:மகளிர் முன்னேற்றமே மாநிலத்தின் முன்னேற்றம் என்ற கொள்கையின் அடிப்படையில், அவர்களின் நலனுக்காக, தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளான, ஆவின் பால் விலை குறைப்பு, சுய உதவிக்குழு கடன் தள்ளுபடி, அரசு பஸ்களில் இலவச பயணம் போன்ற பல வாக்குறுதிகளை, முதல்வர் ஏற்கனவே நிறைவேற்றி உள்ளார்.

அடுத்த முக்கிய வாக்குறுதியான, மகளிருக்கான உரிமைத் தொகை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க, முதல்வர் அறிவுறுத்தி உள்ளார். கடந்த ஆட்சியினர் விட்டுச் சென்ற நிதி நெருக்கடி காரணமாக, இந்த வாக்குறுதியை, அரசின் முதல் ஆண்டில் செயல்படுத்துவது கடினமாக இருந்து வருகிறது.எனினும், இந்த திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுள்ள பயனாளிகளை கண்டறிந்து, திட்டத்தை வடிவமைப்பதற்கான பணிகள் முழு முனைப்புடன் நடந்து வருகின்றன. அரசு எடுத்து வரும் பல்வேறு முயற்சிகள் காரணமாக, நிதி நிலையில் முன்னேற்றம் ஏற்படும்போது, இத்திட்டம் செயல்படுத்தப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...