Sunday, May 22, 2022

மக்கள் தான் ஏமாளிகள்!

 சேலத்தில் பேட்டி அளித்த, சட்டசபை எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி, 'தி.மு.க., அரசு விரைவில், பஸ் மற்றும் மின்சார கட்டணத்தை உயர்த்தும். நிதி ஆதாரத்தை பெருக்க, எந்தத் திட்டமும் அவர்களிடம் இல்லை' என்று கூறியுள்ளார். லோக்சபா மற்றும் சட்ட சபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஓட்டுக்களைப் பெற, மக்களை கவரும் விதமாக, பல்வேறு வாக்குறுதிகளை வாரி வழங்குவது, அரசியல் கட்சிகளுக்கு வழக்கமாக உள்ளது. இது, நாடறிந்த விஷயம். அதேபோல, ஆளுங்கட்சியான பின், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் இருப்பதும், வரிகளை, கட்டணங்களை உயர்த்துவதையும் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இது உங்கள் இடம்: மக்கள் தான் ஏமாளிகள்!



வரிகளை, கட்டணங்களை உயர்த்தும் போது, அதற்கு எதிராக கண்டனம் தெரிவிப்பதும், போராட்டம் நடத்துவதும் எதிர்க்கட்சிகளுக்கு பழக்கமாகி விட்டது. ஆனால், ஒன்று மட்டும் பொதுமக்களுக்கு தெள்ளத் தெளிவாக புரிந்து விட்டது... ஆட்சி மாறினாலும், காட்சி மாறப்போவதில்லை; யார் ஆட்சிக்கு வந்தாலும், விலைவாசி உயர்வு உள்ளிட்ட பல்வேறு வகையான, கட்டண உயர்வுகள் குறையப் போவதில்லை என்பதும், அவர்களுக்கு உறுதியாக தெரிந்து விட்டது. தி.மு.க., - அ.தி.மு.க., என்ன, இனி பா.ஜ., ஆட்சிக்கு வந்தாலும், இது தான் நிலைமை. தலைவிதியே என்று நொந்தபடி, வாழ்க்கை போராட்டத்தில் எதிர்நீச்சல் போட்டு வாழ்வதை தவிர, வேறு வழியே இல்லை.



இந்த தருணத்தில், பழம் பெரும் பாடகர், பி.வி.ஸ்ரீனிவாஸ் பாடிய பாடல் தான், நம் நினைவிற்கு வருகிறது... 'மயக்கமா, கலக்கமா; மனதிலே குழப்பமா, வாழ்க்கையில் நடுக்கமா...' என துவங்கும் பாடலில், 'எதையும் தாங்கும் இதயம் இருந்தால், இறுதி வரைக்கும் அமைதி கிடைக்கும்...' என்ற மனநிலையில், நாம் தான் வாழப் பழகிக் கொள்ள வேண்டும். மொத்தத்தில், அரசியல் கட்சிகளை நம்பும், மக்களாகிய நாம் தான் ஏமாளிகள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...