Thursday, May 19, 2022

வெளியே எதிர்ப்பு.. உள்ளே ஆதரவு.. காங்., நிர்வாகிகள் கொந்தளிப்பு.

 'ராஜிவ் கொலையாளி பேரறிவாளனுக்கு, முதல்வர் ஸ்டாலின் தேநீர் விருந்து அளித்ததை கண்டித்து, தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும். 'ராஜ்யசபா எம்.பி., பதவியை திருப்பி கொடுக்க வேண்டும்' என வலியுறுத்தி, தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்து வருகின்றனர்; ஆனால், கோஷ்டி தலைவர்கள் வாய் திறக்காமல் மவுனம் சாதிக்கின்றனர்.


முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், 30 ஆண்டுகளாக, சிறை தண்டனை அனுபவித்த குற்றவாளி பேரறிவாளனுக்கு விடுதலை அளித்து, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இந்த தீர்ப்புக்கு பின், சென்னை விமான நிலையத்தில் தன்னை சந்தித்த பேரறிவாளனை, முதல்வர் ஸ்டாலின் ஆரக்கட்டித் தழுவி, தேநீர் வழங்கி உபசரித்தார். 'விடுதலை காற்றை முழுமையாக சுவாசியுங்கள்' என்றும் வாழ்த்து தெரிவித்தார்.

மே 21ல், ராஜிவ் நினைவு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த சூழலில், அவரது கொலை வழக்கில் குற்றவாளியாக தண்டனை பெற்ற பேரறிவாளனுக்கு ஆதரவாக, முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் அமைந்திருப்பது, தமிழக காங்கிரசின் இரண்டாம் கட்ட தலைவர்களுக்கு அதிர்ச்சி அளித்து உள்ளது. இது தொடர்பாக, தி.மு.க.,வுக்கு எதிராக, காங்கிரஸ் இரண்டாம் கட்டத் தலைவர்கள் மற்றும் மாநில, மாவட்ட நிர்வாகிகள் கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளனர். அதன் விபரம்:


பேரறிவாளன் பயங்கரவாதி!


தமிழக காங்கிரஸ் துணை தலைவர் பொன்.கிருஷ்ணமூர்த்தி: பேரறிவாளன் விடுதலையை மக்கள் யாரும் கொண்டாடவில்லை. இதை ஆதரிக்கும் திராவிட இயக்கத்தில் யாராவது இறந்தால் இப்படி கொண்டாடுவீர்களா?பேரறிவாளனை மீண்டும் கைது செய்து உள்ளே தள்ளும் வரை போராடுவோம். அவர் தியாகி அல்ல. இந்த பயங்கரவாதியை கொஞ்சுவதையும் கட்டிப்பிடிப்பதையும் கண்டிக்கிறோம்.


மறக்க முடியுமா?


காஞ்சிபுரம் மாவட்ட முன்னாள் காங்கிரஸ் தலைவர் சிவராமன்: ராஜிவ் உடல் சிதற கொன்ற ரத்த வெறி பிடித்த கயவர்களை மன்னிக்க முடியுமா; மறக்க முடியுமா?கொலை வழக்கில் விடுதலை ஆனவரை, ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்கள் பாராட்டுகின்றனர். மற்ற சில அரசியல் கட்சிகளும் கொண்டாடுகின்றன. இதேபோல், கொலை வழக்குகளில் விடுதலையாகி வருபவர்களை எல்லாம் கொண்டாடுவரா?


அரை நிர்வாண போராட்டம்!


தமிழக காங்கிரஸ் மாநில செயலர் தியாகு: பேரறிவாளன் ஒரு தியாகி போல வரவேற்று, தேநீர் விருந்து அளிப்பது வெட்கக்கேடனா செயல். தி.மு.க., கூட்டணியில் இருந்து உடனே காங்கிரஸ் வெளியேற வேண்டும். அவர்கள் வழங்கிய, ஒரு ராஜ்யசபா எம்.பி., பதவியை திரும்ப ஒப்படைக்க வேண்டும். இந்த விவகாரம் குறித்து தொண்டர்களை பேச விடாமல், வாயில் துணியை கட்டி போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. வெள்ளை துணிக் கட்டி சமாதானாமா பேச போகிறோம்? எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கறுப்பு துணி கட்டி போராட்டம் நடத்த வேண்டும் அல்லது அரை நிர்வாணம் போராட்டம் நடத்த வேண்டும்.


மாவட்ட தலைவர் ராஜினாமா!


தர்மபுரி மாவட்ட காங்கிரஸ் தலைவர் சிற்றரசு: கொலை குற்றவாளியை கொண்டாடும் கூட்டணியில் காங்கிரஸ் தொடர்வதை, என் மனம் ஏற்கவில்ல. எனவே, நான் மாவட்ட காங்கிரஸ் தலைவர் பொறுப்பில் இருந்து விலகிக் கொள்கிறேன். என் பதவி விலகலை மறுக்காமல் ஏற்க வேண்டும்.


ஸ்டாலின் தான் முக்கியமா?


த.மா.கா., இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா: கடந்த 2011ல், தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவராக நான் இருந்தபோது, ராஜிவ் கொலை வழக்கின் குற்றவாளிகளை விடுதலை செய்வது தொடர்பாக, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதை கண்டித்து, ராஜிவுடன் உயிர் நீத்த பிற குடும்ப உறுப்பினர்களுடன், சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அன்று எங்களுக்கு இருந்த உணர்வு கூட, காங்கிரஸ் தலைவர்களுக்கும், தொண்டர்களுக்கும் இப்போது இல்லை என்பது வேதனையாக உள்ளது. தற்போது, ராஜிவை விட ஸ்டாலின்தான் முக்கியம் போல, காங்கிரசாருக்கு தோன்றுகிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


மவுனம் காக்கும் முதல்கட்ட தலைவர்கள்


இரண்டாம் கட்ட தலைவர்கள் கொந்தளிக்கையில், பெரிய தலைவர்கள் அனைவரும்,வாயில் வெறும் வெள்ளைத் துணி கட்டி ஆர்ப்பாட்டம் நடத்தி, தங்கள் எதிர்ப்பை 'அடையாளமாக' தெரிவித்தனர்.


கொலைகாரனுக்கு பரிவா?


தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி: பேரறிவாளன் தமிழன் என்பதால், விடுதலை செய்ய வேண்டும் என்கின்றனர். ஒரு தமிழன் கொலை குற்றத்திற்கு உள்ளானால், அவனை விடுதலை செய்து விடலாம் என்பது நீதியா? இப்படி ஒவ்வொரு மாநிலத்தவரும் சொல்லத் துவங்கினால், நாட்டின் சட்ட ஒழுங்கும், மனிதாபிமானமும், மனித நாகரிகமும் எங்கே செல்லும் என்பதை எண்ணி பார்க்க வேண்டும். கொலைகாரனுக்கு பரிந்து பேசுவதை தமிழ் சமூகம் ஏற்காது. உங்கள் குடும்பத்தில் கொலை விழுந்திருந்தால் ஏற்று கொள்வீர்களா?

இவ்வாறு 'சுறுசுறுப்பில்லாத' அறிக்கை கொடுத்து அடங்கி விட்டார் அழகிரி.ஆனால், சிதம்பரம், இளங்கோவன், திருநாவுக்கரசர், தங்கபாலு போன்ற கோஷ்டித் தலைவர்கள், முதல்வர் ஸ்டாலின் - பேரறிவாளன் சந்திப்பு குறித்து விமர்சிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர்.

ராஜிவ் நினைவிடத்தில் போராட்டம்

பேரறிவாளன் விடுதலையை கண்டித்து, காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதுாரில் உள்ள முன்னாள் பிரதமர் ராஜிவ் நினைவிடத்தில், சட்டசபை காங்., தலைவர் செல்வப் பெருந்தகை தலைமையில், அக்கட்சியினர் வாயில் வெள்ளை துணி கட்டி, நேற்று ஒரே ஒரு மணி நேரம் அமர்ந்து, போராட்டம் நடத்தினர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...