Tuesday, May 17, 2022

சென்னை மேயர் பிரியாவுக்கு தி.மு.க., திடீர் கடிவாளம்.

 'அம்மா' உணவகம் குறித்து, சென்னை மேயர் பிரியா பேசிய விவகாரம், பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியதை அடுத்து, அவருக்கு தி.மு.க., தலைமை கடிவாளம் போட்டுள்ளது.


சென்னையில் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், கொளத்துார் தொகுதிக்கு உட்பட்ட 74வது வார்டில் தி.மு.க., சார்பில் போட்டியிட்ட பிரியா, 28, வெற்றி பெற்று கவுன்சிலராக பதவியேற்றார். அதைத் தொடர்ந்து நடந்த மேயர் தேர்தலில் போட்டியின்றி தேர்வானார். துணை மேயராக தி.மு.க.,வை சேர்ந்த மகேஷ்குமார் பொறுப்பேற்றார்.

ஆரம்பம் முதலே, மேயர் ஆற்ற வேண்டிய பல பணிகளையும், துணை மேயரே கவனித்து வந்தார். இதைத் தொடர்ந்து, மேயர் தலைமையில் நடந்த மாநகராட்சி கூட்டத்தை வழிநடத்த வேண்டிய பிரியா, அந்த பொறுப்பை துணை மேயரிடம் ஒப்படைத்தார். இது, அரசியல் அரங்கில் மட்டுமின்றி, பொதுவெளியிலும் சலசலப்பை ஏற்படுத்தியது. சுதாரித்த பிரியா, சுற்றி சுழன்று பணியாற்ற துவங்கினார்.

குப்பை கிடங்கு, மாநகராட்சி பள்ளி, பாதாள சாக்கடை திட்டம், மழைநீர் கால்வாய் பணி என, பல்வேறு இடங்களில் மாநகராட்சி சார்பில் நடைபெறும் பணிகளை நேரில் ஆய்வு செய்தார். இந்நிலையில், சென்னை கோடம்பாக்கம் மண்டலத்தில், இம்மாதம் 6ம் தேதி, மண்டல ஆய்வு கூட்டம் மேயர் பிரியா தலைமையில் நடந்தது.


latest tamil news


கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் பேசிய மேயர் பிரியா, 'கடந்த ஆட்சியில் துவங்கப்பட்ட அம்மா உணவகத்தை பெருந்தன்மையோடு நடத்தி வருகிறோம். பல இடங்களில் அம்மா உணவகங்கள் மக்கள் பயன்படின்றி பூட்டிக் கிடக்கின்றன' என்றார்.

உடனே சுதாரித்த துணை மேயர் மகேஷ்குமார், மேயர் பேச்சை இடைமறித்து, 'ஒரு அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு மாதத்திற்கு ஒரு லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்படுகிறது' எனக் கூறி சமாளித்தார். அம்மா உணவகம் பயன்படுத்தாமல் பூட்டி கிடப்பதாக, மாநகராட்சி மேயர் பிரியா பேசிய வீடியோ, சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது.

மேயரின் இந்த பேச்சை தொடர்ந்து, அ.தி.மு.க., மற்றும் அ.ம.மு.க.,வினர், தற்போதைய தி.மு.க., அரசை குற்றஞ்சாட்டினர். பிரியாவின் பேச்சு, அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் அமைந்ததாக, தி.மு.க., தலைமைக்கு புகார் சென்றது. இதையடுத்து, மறு அறிவிப்பு வரும் வரை, செய்தியாளர்களை சந்திப்பதை தவிர்க்கும்படி, மேயர் பிரியாவுக்கு, தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து, தி.மு.க., வினர் கூறியதாவது: மாநகராட்சியின் அனைத்து துறைகளிலும், தன்னை மேயர் பிரியா மேம்படுத்தி கொள்ளும் வரை, செய்தியாளர் சந்திப்பை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில கூட்டங்களில் செய்தியாளர்களை சந்திக்க நேரிட்டால், துணை மேயர், கமிஷனர் அறிவுறுத்தலின்படி செயல்படவும் தி.மு.க., தலைமை உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு கட்சியினர் கூறினார்.

மே 6ம் தேதிக்கு பின், பொது நிகழ்ச்சிகளில் மேயர் பிரியா பங்கேற்றாலும், செய்தியாளர்களை சந்திப்பதை தொடர்ந்து தவிர்த்து வருகிறார்.


No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...