Tuesday, May 17, 2022

சீனர்களிடம் லஞ்சம் வாங்கினாரா கார்த்தி சிதம்பரம்?

 சட்ட விரோதமாக 'விசா' பெற்றுத் தர காங். - எம்.பி. கார்த்தி சீனர்களிடம் 50 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கினாரா என சி.பி.ஐ., அதிகாரிகள் விசாரிக்க துவங்கியுள்ளனர். இந்த விவகாரத்தில் ஆதாரங்களை கைப்பற்ற கார்த்தி வீடு அலுவலகம் என 18 இடங்களில் அதிரடி 'ரெய்டு' நடத்தப்பட்டது. அவரது தந்தையும் முன்னாள் மத்திய அமைச்சருமான சிதம்பரம் வீடுகளிலும் சி.பி.ஐ. அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி ஆதாரங்களை சல்லடை போட்டு தேடினர்.


காங். மூத்த தலைவர் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது ஐ.என்.எக்ஸ். 'மீடியா' என்ற நிறுவனத்திற்கு விதிகளை மீறி வெளிநாடுகளில் இருந்து 305 கோடி ரூபாய் அன்னிய முதலீடு கிடைக்க உதவினார். இதன் பின்னணியில் சிவகங்கை எம்.பி.யாக உள்ள இவரது மகன் கார்த்தி இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதேபோல 2006ல் 'மேக்சிஸ்' நிறுவனத்தின் துணை நிறுவனமான 'குளோபல் கம்யூனிகேஷன் சர்வீசஸ் ஹோல்டிங்ஸ்' சார்பில் 'ஏர்செல்' நிறுவனத்தில் 3500 கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டது. இதற்கு மத்திய அமைச்சராக இருந்த சிதம்பரம் விதிகளை மீறி அன்னிய முதலீட்டு ஊக்குவிப்பு வாரியம் வாயிலாக அனுமதி அளித்தார். இதன் பின்னணியிலும் கார்த்தி இருப்பதாக புகார் எழுந்தது. இதுகுறித்து சி.பி.ஐ. மற்றும் அமலாக்கத் துறை அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர்.

எம்பி கார்த்திக்கு சொந்தமான 7 இடங்களில் சிபிஐ ரெய்டு

இது தொடர்பாக சென்னை டில்லியில் உள்ள சிதம்பரம் மற்றும் கார்த்தி உள்ளிட்டோரின் வீடு அலுவலங்களில் சோதனை நடத்தி முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர்.பின் டில்லி சி.பி.ஐ. அதிகாரிகள் 2018ல் கார்த்தியை கைது செய்தனர்; 2019ல் சிதம்பரமும் டில்லியில் கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். இருவரும் ஜாமினில் வெளியே வந்தனர்.

இந்நிலையில் சிதம்பரம் மற்றும் கார்த்திக்கு மிகவும் நெருக்கமான சென்னையை சேர்ந்த பாஸ்கர ராமன் என்பவர் வீட்டில் சோதனை செய்தபோது சிக்கிய ஆவணங்களை சி.பி.ஐ. அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது சிதம்பரம் மற்றும் கார்த்தி வாயிலாக ஒரே நேரத்தில் வெளிநாட்டில் இருந்து பண பரிவர்த்தனை நடந்தது பற்றிய குறிப்பு சிக்கியது.

அது பற்றி தீர விசாரித்த போது '2011ல் சிதம்பரம் மத்திய நிதியமைச்சராக இருந்தபோது பஞ்சாப் மஹராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மின் திட்ட பணிகளை மேற்கொள்ள 263 சீனர்களுக்கு சட்ட விரோதமாக 'விசா' கிடைக்க கார்த்தி ஏற்பாடு செய்துள்ளார்.'இந்த முறைகேடு 2010 - 2014 காலகட்டத்தில் நடந்துள்ளது. இதற்காக கார்த்திக்கு சீன நாட்டினர் லஞ்சமாக 50 லட்சம் ரூபாய் கொடுத்துள்ளனர்' என்பதை சி.பி.ஐ. அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அதன் அடிப்படையில் சென்னை நுங்கம்பாக்கம் ஹாடோஸ் சாலையில் உள்ள கார்த்தி அலுவலகம் மற்றும் அதன் அருகே உள்ள சிதம்பரத்தின் வீடு முட்டுக்காடு பகுதியில் உள்ள சிதம்பரத்தின் மற்றொரு வீடு ஆகியவற்றில் சி.பி.ஐ. அதிகாரிகள் 14 பேர் நேற்று திடீர் சோதனை நடத்தினர். டில்லியில் இருந்து வந்திருந்த அவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து நேற்று காலை 7:00 மணியில் இருந்து ஒரு இடம் விடாமல் சல்லடை போட்டு தேடினர். சிதம்பரத்தின் கூட்டாளி பாஸ்கர ராமன் வீட்டிலும் சோதனையில் ஈடுபட்டனர்.

சென்னை தவிர டில்லி கர்நாடகா ஒடிசா பஞ்சாப் மற்றும் மஹாராஷ்டரா மாநிலம் மும்பை என சிதம்பரம் கார்த்தி ஆகியோருக்கும் அவர்களது கூட்டாளிகளுக்கும் சொந்தமான வீடு அலுவலகம் என 18 இடங்களில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் முக்கிய ஆவணங்கள் சிக்கி உள்ளன. அதன் அடிப்படையில் விசாரணை நடத்தி சிதம்பரம் கார்த்தி பாஸ்கரராமன் உள்ளிட்ட ஐந்து பேர் விரைவில் கைது செய்யப்படுவர் என சி.பி.ஐ. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வீட்டில் இல்லை!
சோதனை நடந்த போது வீட்டில் சிதம்பரமும் கார்த்தியும் இல்லை. சிதம்பரம் ராஜஸ்தானிலும் கார்த்தி லண்டனிலும் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. சென்னை வீட்டில் சிதம்பரம் மனைவி நளினி மற்றும் மகருமகள் ஆகியோர் இருந்தனர்.

'எதுவும் கிடைக்கவில்லை!'

சி.பி.ஐ., சோதனை தொடர்பாக முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம் கூறியதாவது:டில்லி மற்றும் சென்னையில் உள்ள என் வீடுகளில் சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று காலை சோதனை நடத்தினர். அப்போது அவர்கள் என்னிடம் ஒரு எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல் அறிக்கையை காட்டினர். அதில் குற்றவாளியாக என் பெயர் இடம் பெறவில்லை. நேற்று நடந்த சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. சோதனை நடத்தப்பட்ட நேரம் மிகவும் சுவாரஸ்யமானது என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.


காங்கிரஸ் பாய்ச்சல்

காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அஜய் மாக்கன் கூறியதாவது:சிதம்பரம் வீடுகளில் நடத்தப்பட்ட சோதனை தவறானது. அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சி எப்போதும் உடன் நிற்கும். நாட்டில் பண வீக்கமும், வேலையில்லா திண்டாட்டமும் அதிகரித்து வரும் நேரத்தில், மக்களை அதில் இருந்து திசை திருப்பவே இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.கடந்த 12 ஆண்டுகளுக்கு பின் இந்த விவகாரத்தை பா.ஜ., கையில் எடுத்துள்ளது. அதைத் தான், 'சோதனை நடத்தப்பட்ட நேரம் சுவாரஸ்யமானது' என, சிதம்பரம் தெரிவித்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.


'கணக்கு தெரியவில்லை!'

காங்., எம்.பி., கார்த்தி வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில், 'எத்தனை முறை சோதனை நடத்தினர் என கணக்கு தெரியவில்லை. 2015ல் இரண்டு, 2017ல் ஒன்று, 2018ல் இரண்டு, நேற்று ஒன்று என நினைக்கிறேன்' என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...