Sunday, April 3, 2016

இவைதான் அந்த வெரைட்டி விருந்து!



ஈரோடு மாவட்டம் பெருந்துறையிலிருந்து குன்னத்தூர் செல்லும் சாலையில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது சீனபுரம் என்ற கிராமம். அங்கு சென்று யு.பி.எம் ஹோட்டல் எனக் கேட்டாலே ‘இப்படியே நடந்து போனீங்கனா வகை வகையா காருக நிற்கும். அதுதான் யு.பி.எம்.’ என்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே கார்கள் அணிவகுத்து நிற்கின்றன.
எந்த ஒரு ஹோட்டலுக்குச் சென்றாலும் சோற்றுக்குத் தொட்டுக்க என்ன என்று கேட்பதுதான் வழக்கம். ஆனால் இலை முழுவதும் விதவிதமாய் மட்டன், சிக்கன் என்று அடுக்கி, சோற்றை தொட்டுக்கொள்ள வைத்தால்..இப்படி ஒரு ஹோட்டல் ஈரோட்டில் இருக்கிற விபரம் அறிந்து சென்றோம்.
ஆனாலும் சிறிய கீற்று வேய்ந்த வீட்டில்தான் அந்த உணவகம் இயங்குகிறது. உள்ளே நுழைந்ததுமே சந்தனம், குங்குமம் வைத்து தம்பதி சமேதராய் நம்மை வரவேற்கிறார்கள் முதலாளியின் பெயர் கருணைவேல். அட!
அதன் பிறகு நம்மை அமர வைத்து, இரண்டரை அடி நீளத்துக்கு தலைவாழை இலை போடுகிறார்கள். அதில் வைக்கப்படும் உணவு வகைகளைப் பார்த்தாலே பசி தீர்ந்துவிடும் போலிருக்கிறது. இப்படி ஓர் அசைவ விருந்தை இதற்கு முன்பு கேள்விப்பட்டதுகூட இல்லை என்ற அளவுக்கு இருக்கிறது.
இலையில் முதலில் உப்பு வைக்கிறார். தொடர்ந்து அவருடைய மனைவி சொர்ணலட்சுமி இரத்தப்பொரியலை வைக்கிறார். வைக்கும்போதே அடுத்து சாதத்தை வைக்கிறார். அடுத்து அவர் வைக்கும் வகைகள் சாப்பிடவந்த அனைவரையுமே மலைக்க வைக்கும் ரகங்கள். உப்பு, இரத்தப்பொரியல், குடல் கறி, தலைக்கறி, ஈரல், கொத்துக்கறி, மட்டன், நல்லி எலும்பு, கால் பாயா, சிக்கன், பெப்பர் சிக்கன், சிக்கன் குழம்பு, நாட்டுக்கோழி, வான்கோழி, புறாக்கறி, காடை, மீன், லெக்பீஸ், பிரியாணி, முட்டை, மட்டன் குழம்பு, மீன் குழம்பு, உப்புமீன் - இவைதான் அந்த வெரைட்டி விருந்து!
இந்த உணவு வகைகளைப் பார்த்ததுமே சிலர் போதும் வேண்டாம் என்கிறார்கள். அதற்கு கருணைவேலுவின் பதில் ‘அஞ்சு நிமிசம் சாப்பிடுங்க, முடியாதபட்சத்துல அடுத்து பத்து நிமிசம் ரெஸ்ட் எடுத்துக்கிட்டு அப்புறம் அஞ்சு நிமிசம் சாப்புடுங்க’ என்கிறார். வேலை ஆட்கள் யாருமே உள்ளே இல்லை. சமைப்பது முதல் பரிமாறுவது வரை கருணைவேலும் அவரது மனைவியும்தான். 60 வயதைத் தொட்டாலும் இளைஞராய் சுறுசுறுவென வேலை செய்கிறார். எந்த இலையில் எது குறைந்தாலும் மீண்டும் வைக்கிறார்கள். இவ்வளவையும் பரிமாறி முடித்தபின் சாப்பிட வந்தவர்கள் கொடுக்கும் பணத்தை எண்ணிப்பார்க்காமல் சட்டைப்பைக்குள் வைத்துக்கொள்கிறார். அந்த உணவகத்தில் கல்லாப்பெட்டியே கிடையாது. அதையும் மீறி எவ்வளவு பில் எனக்கேட்டால் ‘நமக்குள்ள என்ன கண்ணு... நீ குடுக்குறத குடு கண்ணு’ என உரிமையோடு சொல்கிறார்.
இந்த உணவகத்துக்கு இயக்குநர் சந்தானபாரதி தொடங்கி, இயக்குநர் பாண்டியராஜன் குடும்பத்தினர், நடிகர் பிரபு குடும்பத்தினர், மயில்சாமி எனப் பெரிய ரசிகர் பட்டாளமே இருக்கிறது. இன்னும் இந்தப் பகுதியில் எங்காவது படப்பிடிப்பு என்றால் இங்குதான் சாப்பிடுகிறார்கள். அந்த அளவிற்கு சினிமாத் துறையினர் மத்தியில் இந்த உணவகம் பிரசித்தி பெற்றிருக்கிறது. இங்கு சாப்பிட வேண்டும் என்றால் காலை 11 மணிக்கு போன் செய்து புக் செய்ய வேண்டுமாம்.
‘‘எனக்கு 60 வயசாயிருச்சி. இங்க வர்ற எல்லாரையுமே என்னோட சொந்தக்காரங்களாத்தான் பார்க்கிறேன். சமைக்கிறதுல இருந்து பரிமாறுவது வரைக்கும் நாங்களே பார்க்கிறதால காலையில எழுந்து இன்னைக்கு எத்தனைப் பேருக்கு நம்மால சாப்பாடு கொடுக்க முடியும்னு முடிவு பண்ணிருவோம். அதுக்குப் பிறகு புக் பண்றவங்களை வெச்சி முடிவு பண்றோம். யாருக்கும் ஒரு ஹோட்டல்ல சாப்பிடுறோம்ங்கிற மனநிலை வந்துடக் கூடாதுங்கிறதுல கவனமா இருக்கிறோம். அதனால அவங்க கொடுக்கிற பணத்தை எண்ணிக்கூட பார்க்கிறதில்லை. எனக்குக் காசு பணம் முக்கியமில்லை. எங்க பிரதான நோக்கமே இங்கே வர்றவங்க எந்த விதத்துலேயும் சந்தோஷக் குறைவா போயிடக் கூடாது. அதனாலதான் வேலைக்கு ஆட்களே வெச்சிக்காம நாங்க ரெண்டு பேருமே இந்த வேலையை விரும்பிப் பார்க்குறோம்’’ என்கிறார் கருணைவேல்.
அவரது மனைவி சொர்ணலெட்சுமி ‘‘நாங்க இங்க வர்றவங்க முகத்தைப் பார்க்கிறதில்லை. மனசை மட்டும்தான் பார்க்கிறோம். அதனாலதான் இன்னைக்கு வரைக்கும் எங்களால இதை நடத்த முடிஞ்சுருக்கு’’ என்றார். ‘‘உங்கள் குடும்பம் பற்றி சொல்லுங்களேன்’’ என்றதும் கண் கலங்கிவிட்டனர். பிறகுதான் தெரிந்தது. அவரது மகன் இறந்துவிட்டார் என்பது. அதுமுதலே இங்குவரும் அனைத்து இளைஞர்களையும் தனது மகனாய் நினைத்தே இருவருமே உபசரிக்கிறார்கள்.
ஒரே மகளையும் தனது வீட்டோடு வைத்திருக்கிறார்கள்.
இவ்வளவு பேருக்கும் அசைவ விருந்து கொடுத்து அசத்தும் இந்தத் தம்பதிகள் அசைவத்தைத் தொட்டுக்கூட பார்ப்பதில்லை என்பதுதான் இதில் ஹை லைட்!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...