அதிமுக - 130, திமுக - 70, மற்றவை - 34

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு 130, திமுகவுக்கு 70, மற்ற கட்சிகளுக்கு 34 இடங்கள் கிடைக்கும் என டைம்ஸ் நவ் - சி வோட்டர் கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
தமிழக சட்டப்பேரவைக்கு வரும் மே 16-ம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது. அதிமுக, திமுக, தேமுதிக - மக்கள் நலக் கூட்டணி, பாமக, பாஜக என 5 முனை போட்டி ஏற்பட்டுள்ளது.
தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்பது தொடர்பாக டைம்ஸ் நவ் ஆங்கில செய்தி சேனலும் சி வோட்டர் நிறுவனமும் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன.
அதிமுக 39 சதவீத வாக்குகளைப் பெற்று 130 இடங்களிலும் திமுக 32 சதவீத வாக்குகளைப் பெற்று 70 இடங்களிலும் பிற கட்சிகள் 34 இடங்களிலும் வெற்றி பெறும். பாஜக வுக்கு 4 சதவீத வாக்குகள் கிடைக்கும், ஆனால் ஒரு தொகுதியில் கூட வெற்றி கிடைக்காது.
புதுச்சேரியில் காங். கூட்டணி
புதுச்சேரியில் மொத்தமுள்ள 30 தொகுதிகளில் காங்கிரஸ்-திமுக கூட்டணி 17 இடங்களையும் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் 7 தொகுதிகளையும் அதிமுக 1 தொகுதியையும் கைப்பற்றக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இடதுசாரிக்கு வெற்றிவாய்ப்பு
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக ஆசியா நெட், டைம்ஸ் நவ் இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் இடதுசாரிக்கு வெற்றிவாய்ப்பு அதிகமாக உள்ளது.
கேரளாவில் மொத்தம் 140 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. இதில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடதுசாரி ஜனநாயக முன்னணி 86, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 53, பாஜக 1 தொகுதியில் வெற்றி பெறக்கூடும்.
வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை இடதுசாரி ஜனநாயக முன்னணிக்கு 44% வாக்குகளும் ஐக்கிய ஜனநாயக முன்னணிக்கு 42%, பாஜகவுக்கு 10% வாக்குகள் கிடைக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திரிணமூல் முன்னிலை
மேற்குவங்க சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து இந்தியா டி.வி., சி வோட்டர் நிறுவனங்கள் கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளன.
மொத்தமுள்ள 294 தொகுதிகளில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் 160, இடதுசாரி 106, காங்கிரஸ் 21, பாஜக 4, இதர கட்சிகள் 3 தொகுதிகளைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அசாமில் தொங்கு சட்டப்பேரவை
அசாமில் மொத்தமுள்ள 126 தொகுதிகளில் பாஜக 55, ஆளும் காங்கிரஸ் 53, அகில இந்திய ஐக்கிய ஜனநாயக முன்னணி 12, இதர கட்சிகள் 6 இடங்களைக் கைப்பற்றும். எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்க வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.